தமிழ்நாட்டில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னையில் 66 ஆயிரம் மின் இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு 38,000 இணைப்புதாரர்களுக்கு தற்போது வரை மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். நிறுத்தப்பட்ட எஞ்சியிருக்கும் 28,ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
மழை பாதிப்பால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரிவித்தவர் இதனை ஈடு செய்யும் விதமாக தூத்துக்குடி மற்றும் மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக கூறினார். இன்று பிற்பகல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறினார்.
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுடுதாக தெரிவித்தார். இதுகுறித்த உத்தரவுகள் அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.