பல்வேறு போட்டிகளில் தேசிய அளவில் சாதனை படைத்த 190 பேர் ஊக்கத்தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அந்த வகையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோ லைகளை வழங்கினார்.
கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக தடகள வாகையர் போட்டியில், டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற செல்வபிரபு, 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம்.
இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வளைகோல்பந்து வாகையர் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் எஸ். மாரீஸ்வரன் மற்றும் எஸ். கார்த்தி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம்.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு நாட்டின் சார்ஜாவில் நடைபெற்ற உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்கள் வென்ற பால சுப்பிரமணியனுக்கு ரூ.10 லட்சம். ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற செல்வராஜுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற விஜயசாரதிக்கு ரூ.4 லட்சம், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற கணேசனுக்கு ரூ.4 லட்சம். குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனோஜுக்கு ரூ.2 லட்சம், இறகுப்பந்து ஒற்றையர் பிரிவு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிவராஜனுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.
குஜராத்தில் 29.9.2022 முதல் 12.10.2022 வரை நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 விளையாட்டு வீரர்கள் மற்றும் 112 விளையாட்டு வீராங்கனைகள், என 180 வீரர்-வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.4 கோடியே 29 லட்சம் வழங்கப்பட்டது.
தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள்-வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்றுவரை 1433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
விழாவில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, சி மெய்யநாதன், தயாநிதி மாறன் எம்.பி., முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் கார்த்திகேயன், துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், அசோக் சிகாமணி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஐசரி கே. கணேஷ், பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.