இன்று நவம்பர் 16 முதல் சபரிமலை மண்டகால பூஜைகள் தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை சபரிமலை நடை மண்டலகால பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.
கார்த்திகை முதலாம் திகதி முதல் சபரி மலை நடை திறக்கப்பட்டு மண்டல கால பூஜைகள் நடைபெறுவது வழமை. கேரளாவில் இன்று கார்த்திகை பிறந்துள்ளதால் நேற்று மாலை சபரிமலையில் மேல்சாந்தி ஜெயராஜ்போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார்.
இதனையடுத்து இந்த ஆண்டுக்கான மண்டல காலம் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமானது. கோவிட் கால சுகாதார கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இவ்வாண்டும் நேரடியாக பக்கதர்கள் அபிஷேகம் செய்ய செல்ல முடியாது. பக்கதர்களிடம் பெறப்படும் நெய் ஆலய ஊழியர்கள் மூலம் அபிஷேகத்திற்கு கொடுக்கப்படும்.
இதேவேளை ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை. தீபாராதனை, அத்தாழ பூஜை ஆகியவற்றுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இதன்போது இணைய முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படவுள்ளனர். எனினும் இரண்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.