இன்று ராஜஸ்தானில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு 15பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
காங்கிரஸ் ஆட்சி முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ராஜஸ்தானில் நடக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு அக்கட்சியின் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள், அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து கட்சித்தலைமையிடம் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அவர்கள் பேச்சு நடத்தி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று ஜெய்ப்பூரில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டதோடு அவர்களுக்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களில் 5 பேர் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் என்றும் ஒரு சிலருக்கு அமைச்சரவை சிறப்பானதாக இல்லை என அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.