2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாரிஸ் நகரில் 26.07.24 வெள்ளி இரவு கோலாகலமாக ஆரம்பமாகின.
பிரான்சின் அடையாளமாகவும், உலக அதிசயங்கிளில் ஒன்றுமான, ஈபிள் கோபுரத்தில் தொடங்கி, பாரிஸ் நகரைச் சுற்றி ஓடும் செய்ன் நதிவரை, தொடக்கவிழா நிகழ்வுகள் அமைந்தன.
பாரம்பரியமாக, விளையாட்டு மைதானமொன்றில் நடைபெறக் கூடிய ஒலிம்பிக் போட்டி, ஆரம்பநிகழ்வை, மைதானத்திற்கு வெளியே கொணர்ந்து, நகரின் மத்தியிலும், நதிக்கரையிலுமாக ஒரு பரந்த பிரதேசத்தில் அழகுற வடிவமைக்கபட்டிருந்தது.
விளையாட்டு வீரர்கள் குழுக்கள், செய்ன் நதியில் படகுகளில் அணிவகுத்து வந்து, ஈபிள் கோபுரத்தின் கீழ் கூடினார்கள். கனமழை, எதிர்பாளர்களினால் முடக்கப்பட்ட புகையிரதசேவை, பெருஞ்சிரமத்தைக் கொடுத்த போதும், பார்வையாளர்களும், விளையாட்டு வீரர்களும், பரந்திருந்து ஆரம்பவிழாவில் பங்கு கொண்டார்கள்.
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பத்தைக் குறிக்கும், ஒலிம்பிச் சுடர் ஏற்றும் நிகழ்வு, மிகப் பிரமாண்டமான முறையில் திட்டமிடப்பட்டவகையில் கச்சிதமாக ஏற்றப்பட்டது. தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ஜூடோ வீரரான டெடி ரைனர் மற்றும் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற மேரி-ஜோஸ் பெரெக் ஆகியோர் ஒலிம்பிக் தீபக் கோளத்தில் சுடரினைத் தீண்ட, ஏழு மீட்டர் விட்டம் கொண்ட தீப்பிழம்புகளின் வளையம், 30 மீட்டர் உயரம் மற்றும் 22 மீட்டர் விட்டம் கொண்ட வெப்ப-காற்று பந்துடன் வானில் உயரக் கிளம்பியது.
அதேவேளை 2020 ம் ஆண்டுக்குப் பின் அரிய நரம்பியல் கோளாறு நோயால் பாடுவதைத் தவிர்த்துக் கொண்ட, இனி அவரால் பாட முடியுமா என்றிருந்த பாடகி, செலின் டியானின் குரல், ஈபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒளிரும் வண்ணவிளக்குகளின் ஒளியைப் போல, ஈபிள் கோபுரத்தின் உட்புறத்தில் இருந்து ஒளிரும் தேவதைப் பெண்ணைப் போல உயரத் தொடங்கியது. அவளது பாடல் நிறைவு பெற ஆரம்பவிழா நிகழ்வுளும் முடிவுக்கு வந்தன.