நத்தார், புதுவருடக் கொண்டாட்டங்களின் பின்னதாக, எதிர்பார்த்ததைவிடவும் அதிகமான கோவிட் தொற்றுக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் புதிய தினசரி கோவிட் தொற்றுக்களாக 270,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இது அடுத்து வரும் நாட்களில், 300,000 புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்யக்கூடும் என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்த எண்ணிக்கை பெரும்பாலும் ஓமிக்ரான் மாறுபாட்டின் விரைவான பரவலால் உந்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பிரான்சின் தெற்கில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் புதிய மாறுபாடு குறித்தும் நிபுணர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள்.
சுவிஸ் கோவிட்-19 பணிக்குழுவின் துணைத் தலைவர் சாமியா ஹர்ஸ்ட் இது தொடர்பில் கூறுகையில், "இன்னும் பெயரிடப்படாத இந்த மாறுபாடானது ஓமிக்ரான் அல்லது டெல்டாவை விட வலிமையானதாகத் தெரியவில்லை. இதுபோன்ற பிற வகைகளைப் போலவே இது பார்க்கப்பட வேண்டும், ஆனால் இந்த நேரத்தில் இதைப் பற்றி குறிப்பாக கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை" என்று கூறினார்.
அவர் இவ்வாறு கூறியதற்குக் காரணம் இது இன்னும் பரவுவதாகத் தெரியவில்லை. இது வெளிவராத வகைகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும், வைரஸின் பிறழ்வு ஒரு இயற்கையான செயல்முறையாகும், ஆனால் அவை அனைத்தும் கவலைக்குரியவை அல்ல என்றும் அவர் கூறினார்.
இதேவேளை இத்தாலியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிறையில் நான்கு பிரதேசங்களை " ஆரஞ்சு" நிற மண்டலங்களாக அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. நேற்று செவ்வாய் கிழமை ஒரே நாளில் 170,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சில பகுதிகளை அதிக ஆபத்துள்ள 'ஆரஞ்சு' மண்டலமாக அரசு அறிவிக்கவுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இத்தாலி சாதாரண வார்டுகளில் 579 புதிய சேர்க்கைகளையும், தீவிர சிகிச்சைக்கு 41 பேரையும் கண்டது, அதே நேரத்தில் இறப்புகள் 259 ஐ எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் முதலான சுகாதார புள்ளிவிவரங்களின்படி, இது அசாதாரணநிலையாகக் கருதப்படும் நிலையில், லிகுரியா, கலாப்ரியா, மார்ச்சே மற்றும் தன்னாட்சி மாகாணமான ட்ரெண்டோ ஆகிய நான்கு பகுதிகளும், அடுத்த திங்கட்கிழமை முதல், தங்கள் மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள, 'ஆரஞ்சு' நிற மண்டலங்களாக மாற்றப்படவுள்ளன எனத் தெரிய வருகிறது.