இன்று ஞாயிற்றுக்கிழமை 2017 ஆமாண்டுக்குப் பின்பு மிக அதிக வீச்சம் கொண்ட ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து சர்வதேசத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சோதனை அமெரிக்க அதிபராக பைடென் பதவியேற்ற பின் வடகொரியா பரிசோதித்துள்ள மிகச் சக்தி வாய்ந்த ஏவுகணையும் ஆகும்.
ஜப்பான் அதிகாரிகளின் கூற்றுப் படி சுமார் 2000 கிலோ மீட்டர் வீச்சம் வரை செல்லக் கூடிய இந்த ஏவுகணை சோதனை நடத்தப் பட்ட போது அது 800 கிலோ மீட்டர்கள் வரை பயணித்து கடலில் வீழ்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இதற்கு முன்பு 2017 ஆமாண்டே வடகொரியா இறுதியாக இந்தளவு அதிக வீச்சம் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்திருந்தது.
அமெரிக்கா முன்னால் அதிபர் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் வடகொரியாவுடன் நடத்தப் பட்ட பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்காத நிலையில் அதிபர் பைடெனின் நிர்வாகத்தினருடனும் வடகொரியா எந்த வித சுமுக உறவையும் எட்ட முனைப்புக் காட்ட மறுத்து வருகின்றது. இன்று ஞாயிறு இடம்பெற்ற ஏவுகணைப் பரிசோதனை வடகொரியா மேற்கொள்ளும் 7 ஆவது சுற்று சோதனை ஆகும். இந்த சோதனையைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அவசரமாகக் கூட்டிக் கலந்தாலோசித்துள்ளார்.
மேலும் வடகொரியாவின் இந்த சோதனையும், ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் செயல் என்றும் கொரிய தீபகற்பத்தினை அணுவாயுத அச்சுறுத்தல் அற்ற இடமாக மாற்றி சமாதானத்தையும், பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வையும் எட்டும் சர்வதேசத்தின் முயற்சிக்கும் பெரும் அச்சுறுத்தல் என்றும் தென்கொரிய அதிபர் மூன் விமரிசித்துள்ளார். மேலும் ஜப்பான் அரசும் வடகொரியாவின் இந்த சோதனையைக் வன்மையாகக் கண்டித்துள்ளது.