நைஜீரியாவின் நைஜர் மாகாணத்திலுள்ல மஷீகு நகரின் மசகுஹா என்ற கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களின் மசூதி ஒன்றின் மீது திங்கட்கிழமை காலை முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலியானார்கள்.
படுகாயமடைந்த பலர் வைத்திய சாலையில் சேர்க்கப் பட்டுள்ளனர். நைஜீரியாவில் இனம் மற்றும் நீர், நிலம் போன்றவற்றை கையகப் படுத்துவதற்கான தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. இது தொடர்பான மோதல்களில் இந்த ஆண்டு மட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் திங்கள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது கிராம மக்களுக்கும் புலானி கால்நடை மேய்க்கும் ஆயுத தாரிகளுக்கும் இடையேயான பகை காரணமாக நிகழ்ந்துள்ளது என அறிவிக்கப் பட்டுள்ளது. மாஷேகு நிலப்பகுதியின் தன்மை காரணமாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போலிசாருக்குப் பெரும் சவாலாக உள்ளது.