2021 ஆமாண்டு டிசம்பர் 25 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப் பட்ட உலகின் மிகப் பெரிய விண் தொலைக் காட்டியும், அகச்சிவப்புக் கதிர் தொலைக் காட்டியுமான ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி பூமியைத் தாண்டி தனது ஆர்பிட்டரான L2 என்ற புள்ளியை வந்தடைய 29 நாள் பயணம் திட்டமிடப் பட்டிருந்தது.
இந்த L2 புள்ளியானது பூமியில் இருந்து நிலவை விட 4 மடங்கு அதிக தூரத்தில் அதாவது 1.5 மில்லியன் Km தொலைவில் அமைந்துள்ளது. JWST தொலைக் காட்டியின் படிப்படியான நிறுவுகை செயற்பாட்டில் மிகவும் நுணுக்கமானது என்று கருதப் பட்ட அதன் இரு முக்கிய தங்க முலாம் பூசப் பட்டு மடித்து வைக்கப் பட்டிருந்த கண்ணாடிகளும் (Mirrors) உரிய இடத்தில் நிறுவப் பட்டுள்ளன. இதற்கு முன்பே ஒரு கூடைப் பந்தாட்ட மைதான பரப்பு கொண்ட அதன் சூரியப் படல்கள் படிப்படியாக விரிக்கப் பட்டிருந்தன.
செவ்வாய்க்கிழமை மதியம் வரை L2 புள்ளிக்கான JWST இன் பயணத்தின் 80% வீதத்தை அது அடைந்து விட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இன்னும் 2 வாரங்களில் இந்த புள்ளியை JWST தொலைக் காட்டி அடைந்து விடும் என்பதுடன் திட்டமிடப் பட்ட 10 வருட அதிகாரப் பூர்வ ஆயுள் காலத்தை விட JWST அதிக காலம் ஆய்வில் ஈடுபடும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் ஹபிள் தொலைக் காட்டி போன்று JWST தொலைக் காட்டியில் பழுது ஏற்பட்டால் அதனை பூமியில் இருந்து அனுப்பப் படும் செய்மதிகள் அல்லது மனிதர்கள் மூலமாகத் திருத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் L2 ஆர்பிட்டரில் இருந்து JWST தொலைக் காட்டி பூமியை அல்லாது சூரியனையே ஒழுக்கில் சுற்றி வரும் என்பதும் நோக்கத்தக்கது. எமது பிரபஞ்சம் தோன்றிய பெரு வெடிப்பு (Bigbang) நிகழ்ந்து 100 மில்லியன் வருடங்களுக்குப் பின் தோன்றிய முதலாவது விண்மீன்கள் மற்றும் பேரடைகள் (Galaxies) ஆகியவற்றிலிருந்து வெளி வரும் ஒளியைக் கூட JWST தொலைக் காட்டி இனம் கண்டு படம் பிடிக்கக் கூடியதாகும்.
இதனால் பிரபஞ்சவியலின் பல முக்கிய புதிர்களுக்கும், விண்வெளியில் உயிரினங்கள் வாழும் வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சிக்கும் JWST தொலைக் காட்டி பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.