மதங்கள் பலவற்றிலும் மேய்பர்களை அவதார புருஷர்களாக சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் கால்நடை மேய்பினைக் கடைக்கோடித் தொழிலாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்ட குறைபாடும் உள்ளமை பெரும் முரண்.
உலகச் சுற்றுச் சூழல் மாசடைந்தல் மற்றும் காலநிலை மாற்றங்களில் பல்லுயிர் சமநிலை மாற்றமும் ஒரு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகின்ற சமகாலத்தில் அதனைச் சீர் செய்யும் வகையில் மேச்சல் தொழிலை தொன்று தொட்டு மேற்கொள்ளும் தமிழ்த்தொல்குடியான கீதாரிகளுக்கு சமூக மரியாதை ஏற்படுத்தவும், மேய்ச்சல் தொழிலை அங்கீகரித்து முறைப்படுத்தவும் மேய்ப்பர்களின் தோழனாக நிற்பவர் பேராசிரியர் முனைவர் பெரி.கபிலன்.
இந்தப் பெரும்பணியைப் பாராட்டி, இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சென்னையில் ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் பெறும் பத்துப்பேர்களில் ஒருவராக பெரி. கபிலனைத் தெரிவு செய்த விகடன், "கீதாரிகள், ‘வரப்பே தலையணை, வயற்காடே பஞ்சு மெத்தை’ என அரை நாடோடிகளாக வாழும் முல்லை நிலத்துப் பூர்வகுடிகள். வெயிலிலும் மழையிலும் உழன்று இயற்கையின் போக்கில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கைப்பாடு துயரங்களாலானது. அரசுப் பதிவேடுகளின் எந்தப்பக்கங்களிலும் இடம்பெறாமல், அடையாளமின்றி வாழும் கீதாரிகளுக்காக எழும் முதல் உரிமைக்குரல் பெரி. கபிலனுடையது. தமிழ்த்தொல்குடியான கீதாரிகளுக்கு சமூக மரியாதை ஏற்படுத்தவும், மேய்ச்சல் தொழிலை அங்கீகரித்து முறைப்படுத்தவும் கபிலன் தொடங்கியிருக்கும் ‘தொழுவம்’ அமைப்பு பல திட்டங்களை முன்னெடுக்கிறது. தமிழகமெங்கும் சிதறிக்கிடக்கும் கீதாரிகளை ஒருங்கிணைத்து, மாட்டுக்கிடையை நிறுவனமயப்படுத்துவது, கால்நடைப் பொருள்களை மேம்படுத்திச் சந்தைப்படுத்துவதென இந்தப் பேராசிரியர் நிகழ்த்தியிருக்கும் மாற்றங்கள் அசாத்தியமானவை. ஒடுங்கிக்கிடக்கும் ஓர் எளிய சமூகத்தைத் தட்டியெழுப்பி விழிப்புணர்வூட்டும் கபிலனுக்குக் கைநிறைய பூங்கொத்துகள்!" எனப் பாராட்டியிருக்கிறது.
விருதுமேடையில் கபிலன் ஆற்றிய உரை மிகமிக முக்கியமானதும் பல்லுயிர் கோட்பாட்டின் அரிய பல நுட்பத் தகவல்கள் நிறைந்ததுமாகும். இதன் கானொளி சென்றவாரம் இணையத்தில் வெளியானது.