free website hit counter

அவளும் அவளும் – பகுதி 8

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அற்புதமானது அந்த நாள். எல்லா நாட்களும் நல்லவைதான். ஆனாலும் நாம் எதிர்பார்க்காத ஒரு இன்பத்தைத் தந்துவிடும் நாட்கள் அற்புதமானவை. அன்றைய நாள் எனக்கு இன்பத்தை மட்டுமல்ல, என்னையே எனக்குத் தந்த அதிஅற்புதமான நாள்.

 

ராசம் தொட்டிலில் வளர்த்தப்பட்ட போது எல்லோரும் மகிழ்ந்தார்கள். ஆனால் எனக்கு அது சஞ்சலம் தந்தது. தொட்டிலில் கிடந்த ராசம் அவர்களுக்கு ஆலிலை கண்ணன் போலத் தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு சிறைப்பட்ட கைதிபோலத் தொட்டிலின் வரிச்சட்டங்களுக்குள்ளால் தெரிந்தாள். ஏன்?

ஏனென்றால் என் பார்வையின் கோணத்தில், அது கோணலாகத் தெரிந்திருக்கலாம். அப்போதைய என் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும், அதற்கு மேல் என்னால் காணமுடியவில்லை. அதனால் தொட்டிலில் ராசம் கிடப்பதை நான் காணவிரும்பவில்லை.

அவள் ஏணைக்குள் கிடக்கும் எல்லாத் தருணங்களும் எனக்கு மகிழ்ச்சி தந்தன. இரண்டு பக்கங்களிலும் விரிந்து ஒடுங்கும் ஏணைச்சேலை அவள் உடம்பினை முழுதாக மறைத்திட்டாலும், சேலை இடைக்குள்ளால் வெளித்தெரியும் அந்தப் பிஞ்சுக்கால்கள் என்னைத் தேவதையின் திருப்பாதங்களாக ரட்சித்தன. காலவரையின்றிக் காதல் கொண்டு அந்தக் கால்களில் மனம் லயித்திருந்தேன்.

ஏணைச் சேலைக்குள்ளால் அவ்வப்போது அசைந்த அக்கால்கள், அடிமேல் அடிவைத்து நடக்கத் தொடங்கிவிட்டன. சின்னத்தம்பியும், கமலமும், இப்போதுதான் நடைபழகத் தொடங்கும் சிறு பிள்ளைகள் போல ராசத்தின் கைகோர்த்து மென்நடையில் நடக்கத் தொடங்கினார்கள். கை பிடி தவறி அவள் விழுகையிலே மனம் பதறிக் கொண்டார்கள்.

கருமணிகளும், வெண்மணிகளும், வளைந்திருந்த, காலில் வெள்ளிக் கொலுசு ஏறி, “மினுமினு”ப்பும் “ கிணுகிணு”ப்பும் காட்டச் சொக்கிப்போன ராசம் தத்தையானாள். அவள் தத்தல் நடை தலைவாசல் தாண்டி முற்றம் வரைக்கும் அன்ன நடையாக வந்துவிட்ட ஒருநாளில்தான் அந்த அதிசயம் நடந்தது.
வெக்கையை வியர்வையாகக் கொட்டிய ஒரு கோடை மாலை. மனிதர்கள் மட்டுமல்ல, மண்ணும் தகித்தது.

“காண்டவனத்துக்கு முன்னமே இப்பிடித் தகிக்குது “ எனச் சொல்லியபடியே முற்றத்து நந்தியாவட்டைக்கும், நித்திய கல்யாணிக்கும், நீர் வார்த்துக் கொண்டிருந்தார் சின்னத்தம்பி.

தலைவாசல் திண்ணைக் குந்தில் இருந்த கமலம், சுளகில் கிடந்த குரக்கன் அரிசியைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்தாள். இவர்கள் இருவருக்கும் இடையில் தத்தி நடப்பதும், விழுவதும், எழுவதுமாக ராசம். நடைகேற்ப அவள் கால் கொலுசுகள் சினுங்கின. சில வேளைகளில் அவளும் அனுங்கினாள்.

“..ம்மா”
“..ம்மா இல்லடா செல்லம். அம்மா..! எங்க சொல்லு அம்மா..!” தாய் சொல்லியதைக் கன்னக் குழிச் சிரிப்போடு கேட்டவள், “..ம்மா..!” எனச் சொல்லித் திரித்தாள்.
பிள்ளை மொழியில் உள்ளம் கவர்ந்த தன் செல்ல மகளின் கன்னம் கிள்ளி, வாயில் சேர்த்த முத்தத்தால் முகம் மலரந்தாள் கமலம்.

கிள்ளைக் குரலும், பிள்ளைக் குதுகலிப்பும் சேரத் தத்தித் திரிந்த கால்கள், மெல்ல மெல்லக் கிட்ட வந்தன. விரிந்திருந்த தன் கைகளைச் சிறகுகளாக்கி நடையைச் சமன் செய்து வந்தவள் விருக்கென என்னைப் பற்றிக் கொண்டாள்.சுடு மணலின் தகிப்புக் காணமற் போய், சில்லென்ற குளுமையில் சிலிர்ந்தேன்.

“..ம்மா !” ஏகாந்த மலைவெளியின் எதிரொலிப்பாக என்னுள் ஒலித்தது ராசத்தின் குரல். மகளின் குரலுக்குச் செவிசாய்த்த கமலம் நிமிர்ந்து பார்க்கையில், ராசத்தின் கைப்பிடியில் நானிருந்தேன். சிரித்துக் கொண்டே “ அது வேம்பு…ம்மா “ என விளக்கம் சொன்னாள் கமலம். கேட்டுக் கொண்டிருந்த ராசம் திரும்பி “வெம்பி..!” எனச் சொல்லிச் சில்லறைகளெனச் சிரிப்பைக் கொட்டினாள்.அந்த ஒற்றை அழைப்பில் முற்றிலுமாக உருகிப் போனேன்.

முன்னொரு இரவினிலே முழுவதுமாகப் பெய்த மழையின் ஈரத்தில் விறைப்பாகி, வெடித்தெழுந்து, மண்துளைத்து, மழைநீரில் முகங்கழுவிய போது அழுகையாகக் கேட்ட அந்தக் குழந்தைக் குரல் இப்போது அழைப்பதை என்னுள் எண்ணிப் பார்த்து வியக்கின்றேன்.

மண் மணக்கிறது. அருகில் இருந்த நித்தியகல்யாணிக்கு நீர் வார்க்கின்றார் சின்னத்தம்பி. பிஞ்சுக் கைகளில் ஒன்று என்னைப் பிடிக்க, மறுகையால் தந்தையை எட்டிப்பிடித்து இழுத்து.. “ ப்பா..” என்றாள் ராசம். தூர இருந்தாலும் குழந்தையின் குணக் குறிப்பை அறிந்தாள் போலும் கமலம். தாயல்லவா..?

“ வேம்புக்கும் தண்ணி விடச் சொல்லுறாள் போல…”
நித்திய கல்யாணிக்கு வார்த்த நீரை என்பக்கமாக மாற்றினார் சின்னத்தம்பி.

உச்சி குளிர்ந்தேன்.
என்மீது இருந்த அவளது கைளில் நீர்பட விருட்டென எடுத்துக் கொட்டிச் சிரித்தாள். நான் நனைவதிலும், குளிர்வதிலும், வளர்வதிலும் அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு.

“இந்தச் சின்னனுக்கு ஆசையப் பாத்தியே..?” மகளை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

“பொம்பிளப் பிள்ளையல்லோ…” தாய் பெண்ணின் பெருமை பேச, “எந்தப் பிள்ளையென்டாலும் இருக்க வேண்டிய அக்கறைதானே. இதில ஆணென்ன? பெண்னென்ன..?” மறுப்புச் சொன்னார் சின்னத் தம்பி.

கையை விசுக்கி வீச, என் மீதிருந்தருந்த நீர் அவள் முகத்தில் முத்தமிட்டது. நாணித் தலைசரித்துச் சிரித்தாள்.

சிரிப்பும், மகிழ்வும் நிறைந்திருந்த அந்த மாலையை இருள் விழுங்கிக் கொண்டது. அது போன்ற மகிழ்வான மாலைகள் பலவற்றை விழுங்கித் தொலைத்த இரவுகளின் பின்னே வந்த ஒரு விடி காலையில் ராசம் அழுதாள்.

 

அழுதாள் எனச் சொல்வதைவிட அடம்பிடித்தழுதாள் எனச் சொன்னால், அவளது அழுகையின் உச்சம் உங்களுக்குப் புரியும்.

காலைகளின் பரபரப்பை அதிகப்படுத்தியதாகவே அன்றைய காலை விடிந்திருந்தது.

வானத்துச் சூரியன் வளவுக்குள் வந்து குட்டிகள் போட்டது போல் நிறைந்து கிடந்தன, காலால் மிதிச்சுப் பாடம் பண்ணிய பனையோலைகள். அடுக்கி வைத்த சிலநாட்களில் அவை தங்கள் பச்சையம் தொலைத்துப் பழுத்திருந்தன. நல்லான்,அவற்றின் அடுக்கைக் குலைத்து, தனி ஓலைகளாக எடுக்கையில், அவிந்த பச்சையத்தின் வாசனை நாசித்துவாரகளில் மணத்தது.

பனைமட்டை ஒன்றினைச் செதுக்கி, வேலி கட்டுவதற்குத் தேவையான குத்தூசி ஒன்றைத் தயாரிப்பதில் கவனமாக இருந்தார் சின்னதம்பி. வேறிருவர் வேலியிலிருந்து பழைய ஒலைகளைப் பிரித்துப் பசளைக்காகச் சேகரிப்பதிலும், வேலி கட்டுவதற்கான இளக் கயிற்றினையும் பனை நாரினையும் ஒழுங்குபடுத்துவதிலும் கவனங்கொண்டிருந்தனர்.

செல்லாச்சியும், கமலமும் சாப்பாட்டிற்கான தயாரிப்பில் கவனமாக இருந்தார்கள். ராசம் குட்டிப்பானையில் கறிசோறு சமைத்து, திண்ணைத் தூண்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

வேலியின் வரிசையில் நின்ற முட்கிழுவை மரங்கள் ஆடைகள் இன்றி நிர்வாணமாயின. அடுக்குகளிலிருந்த எடுத்த ஓலைகளை கணக்குப் பண்ணி வரிசையில் வைத்துவிட்ட நல்லான், வேலிகளின் மரங்களைச் சீர்படுத்தத் தொடங்கினான்.

நல்லான் வேலியடைப்பதில் ஒரு தேர்ந்த தொழிலாளி. பாடம் பண்ணிய பனையோலைகளை, நெடுக்காகக் குத்தியும், சரித்தும் அவன் அடுக்கினால் தேர்ந்த ஓவியன் வரைந்த  சித்திரம் போலத் தெரியும். அடுக்கிய ஓலைகளைக் குறுக்கு மட்டைகளால் நிலைப்படுத்தி, குத்தூசியில் கயிற்றைச் செருகி, குத்துகையில் அவன் ஓர்மம் வெளிப்படும்.

எதிர்வளத்தில் நிற்பவர், குத்தூசியின் கயிற்றைக் கழற்றியதும், ஊசியைக் கழற்றி, கயிற்றைக் கட்டுவதற்கு ஏதுவாக மரத்தின் மறுவளத்தில் லாவகமாக அவன் குத்தூசியைச் செருகுவதில், அழகியல் வெளிப்படும். அப்போது அவன் கருத்த மேனியில் திரளும் வியர்வையில், மேனி பளிச்சிடும். தலையில் கட்டிய துணியைக் கழற்றி வியர்வையைத் துடைக்கையில், முருக்கேறிய அவன் உடலின் தசைகள், வளைவுகளில் வடிவு காட்டும். அந்த வடிவழகைப் பல கண்கள் களவு கொள்ளும்.

நெருக்கமான முட்கிழுவைகளை, வளைவுகள் அற்று நேராக்கியபடியே வந்த நல்லானின் கண்ணில் நான் எதிர்பட்டேன். பதிவாக இருந்த என்னை நோக்கி குனிந்த அவனது, ஓங்கிய கையில் அரிவாள் பளிச்சிட்டது. மறுகையில் நான் . அரிவாள் எனை நோக்கி இறங்குவதும், என் வாழ்வு முடிந்ததெனவும் நான் உணர்ந்து கொண்ட வேளையில், முற்றமே அதிர வீரிட்டாள் ராசம்.

“..ம்பி “ அழுதபடியே எனை நோக்கி ஓடிவந்தாள் ராசம். எல்லோரும் அசைவற்றார்கள். நல்லானின் பிடியும், குறியும் விலகத் திகைத்து நின்றான். சின்னதம்பி பதற்றமுற்றார்.

“என்னம்ம்மா, ?” என்றபடியே கமலம் ஓடிவந்தாள். எல்லோரது கவனமும் ராசத்தின் மேல் குவிந்தது. வேலி அடைப்புக்காக விரித்துப் பரப்பட்ட ஒலைகளில் ராசம் தடக்கி விடக் கூடாதென்ற அக்கறையில் ஓடி வந்த சின்னதம்பி ராசத்தைத் தூக்கினார். அவள் திமிறலும் அழுகையுமாகப் பிடியிலிருந்து விலகினாள்.
கமலம் அவளை நெருங்கி வருவதற்குள், ராசம் என்னருகே வந்து, என்னைக் கட்டியணைத்துக் கொண்டழுதாள்.

நல்லான் விலகிக் கொண்டான். கலக்கத்தில் அவன் உடல் அதிகமாக வியர்வையைக் கொட்டியது. எதுவும் புரியாத நிலையில், துணியைக் கழற்றி, வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

கமலம் ராசத்தைத் தூக்க முயன்றாள். முடியவில்லை. ராசத்தின் அழுகை இப்போது தேம்பலாக மாறியிருந்தது. குனிந்து குந்தியிருந்த கமலம், அவளை அணைத்துக் கொண்டாள். அழுதபடியே இருந்த ராசத்தின் பிடிக்குள் நான் இறுகியிருந்தேன்.

“பிள்ளை தேம்பித் தேம்பி அழுகுது. நெஞ்சத் தடவி விடுங்கோ..” என்றான் வேலி அடைக்க வந்த தொழிலாளிகளில் ஒருவன்.

“இல்லை அவ வேம்பி, வேம்பி என்டு அழுகிறா..” கமலத்தின் பின்னால் ஒடிவந்த செல்லாச்சி விளக்கம் சொன்னாள்.

சின்னதம்பிக்கு இப்போது என்ன நிகழ்ந்திருக்கும் என்பது புரியத் தொடங்க, “இந்த வேம்பை வெட்ட வெளிக்கிட்டனியோ…? “ நல்லானைப் பார்த்துக் கேட்டார். நல்லான் பவ்வியமாக தலையசைத்து ஆம் என்றான்.

ராசத்தின் முன்னால் பணிந்து கொண்ட சின்னத்தம்பி, அவளின் கன்னங்களை வருடியவாறே, “ சரியடா ராசத்தி உன்ர வேம்பிய வெட்டேல்ல. அழாதையுங்கோ செல்லம்…” .

சின்னத்தம்பியின் வார்த்தைகள் ராசத்திற்கு நம்பிக்கை தந்திருக்க வேண்டும். அவளது தேம்பல் இப்போது விம்மலாக மாறியிருந்தது. இரு கைகளாலும் அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டாள். சின்னத்தம்பி மெல்ல அவளைத் தூக்கியவாறு எழுந்தார்.

“வேம்பு வளரேக்க வேலியக் குழப்பிப்போடுமென்தான் ….” நல்லான் தனது செய்கைக்கு விளக்கத்தை தயக்கதுடன் ஒப்புவித்தான். “என்னதான் நடந்தாலும், அது செல்லத்தின்ர விருப்பம். வேப்ப மரம் வளரட்டும்…” முடிவாகச் சொன்னார் சின்னதம்பி.

கமலம் சேலைத் தலைப்பால் ராசத்தின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, தன் கைகளில் வாங்கிகொள்ள, சின்னதம்பியின் கழுத்தை இறுக்கி அனைத்து முத்தமிட்டுவிட்டு, கமலத்திடம் தொற்றிக் கொண்டாள்.

கமலத்தின் தோள்களில் சாய்ந்த ராசத்தின் பார்வையில் நானிருந்தேன். அவள் உதட்டின் முனகலில் “ வேம்பி..!” சன்னமாகக் கேட்க, சிரிப்பும், பேச்சும் முற்றத்தில் மீண்டது. நான் மறுபடியும் பிறந்தது போன்ங உணர்வுடன் மௌனமாயிருந்தேன். அதுதானே எனது  மொழி.

சின்னத்தம்பி ராசத்தின் முத்தத்தில் மருண்டு போய் நின்றார்.

அவள் முத்தத்தில் நானும் மறந்துபோய் நின்ற நாட்களும் வந்தன…

-தொடரும்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula