அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலக கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் மரடோனா மாரடைப்பினால் நேற்று காலமானார். அவருக்கு வயது 60.
டியாகோ மரடோனா முன்னதாக கடந்த மாதம் மூளையில் அறுவை சிகிக்சை செய்துகொண்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை அவரது மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி மரடோனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“டியாகோ மரடோனா கால்பந்தின் ஜாம்பவனாக இருந்தார். அவரது வாழ்க்கை முழுவதும், கால்பந்து மைதானத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்தார். அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.
இதேபோல் மேலும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
மாரடோனா கால்பந்து போட்டியின் உலக கோப்பையை 1986-ல் அர்ஜென்டினாவுக்காக பெற்றுத்தந்து பெறுமை சேர்த்தவர். அத்தோடு பார்சிலோனா, நபோலி அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளதோடு பயிற்சியாளராக அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணிக்கும் வெகு காலம் இருந்துவந்தார்.
உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்ட மாரடோனாவின் மறைவை அடுத்து அர்ஜென்டினாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.