பிரபல தமிழ் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய்க்கு, மார்ச் 14ஆம் தேதி முதல், இந்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலமான தொழிலதிபர்கள் மற்றும் திரைத் துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு, பல்வேறு வகை பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம். மத்திய உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், 'ஒய்', 'இசட்' என்ற வகைப்பாடுகளில் பாதுகாப்பு தரப்படுகிறது.
அந்த வகையில், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமும் அரசியல் களத்தில் குதித்தவருமான விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்க, இந்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. எனினும், ஒய் பிரிவு பாதுகாப்பு தரப்படும் முடிவை விஜய் ஏற்றுக் கொண்டாரா என்ற விவரம் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், ஒய் பிரிவு பாதுகாப்பை ஏற்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி, மார்ச் 14 முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு தரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுழற்சி முறையில் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.