சுவிற்சர்லாந்து ஒரு மலைகள் சூழ்ந்த நாடு. வருடத்தின் எல்லா நாட்களிலும் நீர்வளம் நிறைந்திருக்கும் தேசம். ஆனாலும் நீராண்மை விடயத்தில் இந்நாடும், நாட்டு மக்களும் கொண்டிருக்கும் அக்கறை பாராட்டுக்குரியது.
கோடை வெயிலின் அளவு 30 பாகைக்கு மேல் சென்றுவிட்டால், நகரசபைகள் தண்ணீரின் அளவை மட்டுப்படுத்த அறிவுறுத்தும். பொது இடங்களில் நீரை விரயம் செய்வதற்கும், வாகனங்களைக் கழுவுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தற்போது புதிதாக கட்டடிடம் கட்டுபவர்கள் நிலக்கீழ் நீர் சேகரிப்பிற்கான வசதி செய்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளார்கள். இவை மட்டுமன்றி காலத்துக் காலம், நீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புனர்வு நிகழ்வுகளும் ஆங்காங்கே நடத்தப்படும்.
அவ்வாறான ஒரு விழிப்புணர்வும், ஆழ்ந்து ஓடும் நதியினை நினைவு கூர்ந்து எதிர்கால இளையவர்களுக்கு எடுத்துரைக்கவும், புதிய தொழில்நுட்பத்தில், செயற்கை முகில் பரவும் காட்சியும், சுவிற்சர்லாந்தின் தென் மாநில மொன்தே செனரி மலைப் பிராந்தியத்திலுள்ள, Mendriso நகர மத்தியிலுள்ள, கத்தோலிக்கத் தேவாலயத்தின் முன்னதாக நடைபெறுவதைக் காண முடிந்தது.
இந்தத் தேவாலயத்தின் அருகே ஒடிக் கொண்டிருக்கும் சிறுநதியின் பெயர் Morèe. பலவருடங்களுக்கு முன்னதாக இந்த நகரின் நிர்மாணத்தின் போது, நகருக்குக் கீழாக நதி ஒடும்வகையில் நகரம் அமைக்கப்பட்டதில், நதியை வெளியே காணமுடியாது போனது. இவ்வாறான ஒரு நதி இன்றும் நகரின் கீழே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதனையும், நீரின்றி அமையாது உலகு என்பதையும் இளையதலைமுறைக்கு எடுத்துரைக்கவும் நினைவு கொள்ளவும், பொறியியல் கலைஞர் நிக்கோலா கொலோம்போ (Nicola Colombo ) அவர்களின் வடிவமைப்பில், தேவாலய முகப்பில் செயற்கை முகில் படர்கிறது.
இம்மாதம் 31ந் திகதி வரை காலை 09.30க்கும் 11.45 - 12.15 க்கும், மாலை17.00 மணிக்கும் வென்முகில் எழுகின்றது. சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் மாலை 20.00 மணிவரை நீடிக்கிறது இக்காட்சி. தேவாலயத்தின் முன்னேயுள்ள முற்றத்தில் நின்று பார்க்கையில் தேவாலயத்தின் மேலே இயற்கை முகிலும், கீழே செயற்கை முகிலும், வேறுபாடின்றித் தெரியும் காட்சி ரம்மியமானது.
பிள்ளைகளும், பெற்றோர்களும், இளையவர்களும், இந்த அற்புதக் காட்சியினைக் காண்கையில், ஆழ்ந்து ஒடும் Morèe நதியையும் நினைவு கொள்கின்றார்கள்.கரிகாலன் கல்லணை கட்டினான், குளக்கோட்டரசன் குளங்கட்டடினான் எனக் கதைகள் பேசுவதும், நீரின்றி அமையாது உலகு எனப் பாடுவதும் மட்டும் போதாது. நதிகளையும், மலைகளையும், இறைவடிவங்களாகப் போற்றும் நாம், எமது நாடுகளில், இயற்கையின் படைப்புக்கள் மீது நடத்தப்படும் பேரழிவுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும் எனும் அக்கறையைத் தோற்றுவிக்கிறது, சுவிற்சர்லாந்தின் இந்த விழிப்புணர்வு முகில் காட்சி !