இயற்கையில் மின்மினிப் பூச்சி மட்டுமன்றி பல அபூர்வ சமுத்திர உயிரினங்களும், தகவல் பரிமாற்றம், இரையைக் கண்டுபிடித்தல், தம்மை இன்னொரு உயிரினத்திடம் இருந்து பாதுகாக்க மறைத்துக் கொள்ளுதல், இனப்பெருக்கத்துக்கான ஜோடியைக் கவருதல், போன்ற பல்வேறு காரணங்களுக்காக தமது உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன.
அண்மைய நேஷனல் ஜியோகிராபிக் ஆய்வொன்று சமுத்திரத்தில் வசிக்கக் கூடிய 76% வீதமான விலங்கினங்கள் உயிரியல் வெளிச்சத்தை வெளிப்படுத்துவதாகவும், தமது உடலில் உள்ள இரசாயன மாற்றம் அல்லது பேக்டீரியாக்கள் மூலம் இந்த ஒளியை உற்பத்தி செய்வதாகவும் கூறுகின்றது. இதில் பெரும்பாலான விலங்கினங்கள் நீல நிற ஒளியை வெளிப்படுத்தி அது இன்னொரு விலங்கு அல்லது தரையில் மோதும் போது ஆரெஞ்சு, சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் எதிரொளிக்கச் செய்வதாகவும் கூறப்படுகின்றது.
முக்கியமாக சமுத்திரத்தில் மிக ஆழத்தில் இருக்கும் தாவர இனங்கள் அல்லது மீன் வகைகள் இந்த உயிரியல் வெளிச்சத்தைப் பல்வேறு பரிமாணங்களில் மிக அதிகளவில் வெளிப்படுத்துவது ஏன் என்பது இன்றும் சமுத்திரவியலாளர்களுக்கு மர்மமான விடயமாகவே உள்ளது. தரையிலோ மின்மினிப் பூச்சிகள் மட்டுமன்றி சில வகைக் காளான்களும் கூட சுயமாக ஒளியை வெளிப்படுத்துவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
சுறா மீன்கள், டிராகன் மீன் உட்பட குறைந்தது 1500 மீன் வகைகள் கடலில் சுயமாக ஒளியை வெளிப்படுத்தும் விலங்குகள் என இதுவரை அடையாளம் காணப் பட்டுள்ளது.
நன்றி, தகவல்: National Geographic (மேலதிக விபரங்களுக்கான இணைப்பு - How bioluminescence works in nature)
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்