அண்மையில் சூரிய மண்டலத்துக்குள் நுழைந்துள்ள ஸ்வான் என்ற பச்சைநிற வால்வெள்ளியை (Swan Green Comet) மே இறுதி வரை பூமியில் இருந்து வெறும் கண்களால் காண முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் தெற்கில் இருந்து வடக்காக செல்லும் இந்த வால்வெள்ளியைப் பூமியில் இருந்து அவதானிக்கக் கூடிய நிலையில், மிக அரிதாக 11 600 வருடங்களுக்கு ஒரு முறை தான் இது சூரிய மண்டலத்தில் நுழையுமாம்.
இதன் வால் மாத்திரம் 77 இலட்சம் கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இன்று முதல் கிட்டத்தட்ட 6 நாட்கள் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியுமாம். அவுஸ்திரேலிய வானியலாளரான மைக்கேல் மாட்டியாஸ்ஸோ என்பவரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கி வரும் பொழுது இன்னும் பிரகாசம் அடையுமாம். பூமியின் தென்னரைக் கோளத்தில் இரவு வானில் தெளிவாகத் தென்படக் கூடிய இந்த ஸ்வான் வால் நட்சத்திரம் தற்போது பூமியில் இருந்து 53 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.
பூமியில் மனித கண்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரியக் கூடிய அரிய வால்வெள்ளி இது என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA தெரிவித்துள்ளது. மே 27 ஆம் திகதி இது சூரியனுக்கு மிக நெருங்கி வந்து கடக்கவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.