தங்கச் சங்கிலி பறிப்பு, சில நொடிகளில் கொலை, போதைபொருள் கடத்தி சப்ளை செய்தல்
என எக்குத்தப்பான ஏ 1 குற்றங்களை சென்னையை மையமாக வைத்துச் செய்யும் பைக்கர் குழுவுக்கும், வேர் வரை சென்று அவர்களை வேட்டையாடிக் களையும் காவல் துணை ஆய்வாளருக்குமான ஆக்ஷன் - செண்டிமெண்ட் கலந்த ஆட்டமே வலிமை.
படம் பார்க்கும்போது உங்களுக்கு, அஜித் கதாபாத்திரத்தை முன்வைத்து, ‘வால்டர் வெற்றிவேல்’, அதற்கும் முன்பு ‘தங்கப் பதக்கம்’, அதற்கும் அதற்கும் முன்பு ‘போலீஸ்காரன் மகள்’, அதற்கும்ம்ம்ம்ம்ம்ம் முன்பு ‘ஏழை படும் பாடு’ போன்ற படங்கள் நினைவு வந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.
மதுரையில் கூலிக் கொலைகாரர்களை பொறிவைத்துப் பிடிக்கும் மக்களின் காவல் அதிகாரியாக இருக்கும் அர்ஜுனை (அஜித்குமார்) சென்னை மாநகரின் குற்றங்களைக் குறைக்க இடம் பெயர்ந்து வர ஆணையிடுகிறார்கள். குடிகார அண்ணன், வேலை கிடைக்காமல் அல்லாடும் தம்பி, புகுந்த வீட்டின் மீது 200% பற்றி வைத்துவிடும் தங்கை, மகன்களையும் மகளையும் விட்டுக்கொடுக்காமல் காக்கும் விதவைத் தாய் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே இன்கம் சோர்ஸாக இருக்கும் அஜித், ’டார்க் நெட்’ வழியாக ஆட்டம் காட்டும் பைக்கர்ஸ் மாபியா தலைவனை தனது குழுவினருடன் இணைந்து பிடிக்க, ஒரே நாளில் தனது மூளையைக் கொண்டு அவனை நெருங்கிவிடுவது அஜித்துக்கு அட்டகாசமாகப் பொருந்தியிருக்கும் மாஸ்.
தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ‘பைக் சாகசச் சண்டைக் காட்சி’கள்தான் வலிமை படத்தில் மிக ஈர்ப்பான அம்சமாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அஜித்தின் மாஸ் அப்பீலுக்கு வலு சேர்க்கும் வில்லனை உருவாக்க முடியாமல் கோட்டை விட்டுவிட்டார் இயக்குநர் ஹெச்.வினோத். வில்லன் நாயகனுக்கு மிரட்டல் விடுக்கும் பாணி, சினிமா சலனப்படமாக தோன்றிய காலம் முதல் இருக்கும் காயலாங்கடைச் சரக்கு.
பெண்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியின் பின்னால் இருக்கும் மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கை பற்றி பேசும் அஜித், குற்றவாளிகள் மீது வழக்குப்போட்டு உள்ளே அனுப்பாமல் அவர்கள் குடும்பத்துக்கு உதவும் அஜித், ஒரு கட்டத்தின் சொந்த உறவின் கையை உடைத்துக் கட்டுபோடும்போது அடடா… ! அஜித்துக்கு ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தை தவிர்த்து இளமையாகக் காட்டியிருந்தாலும் இப்படி காவியக் காக்கிச் சட்டையை அவருகு அணிவித்து விட்டார்களே எனப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
அஜித் பல பைக் சேஸிங் மற்றும் பஸ் சேஸிங் சண்டைக் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். நடிப்பு என வரும்போது அவருக்கான தத்துவார்த்த பன்ச்களை எடுபடும் விதமாக எழுதியிருக்கிறார் இயக்குநர் வினோத். அஜித்தின் சக ஊழியராக வரும் ஹூமா குரேஷியின் கேரக்டரில் முழுமை இல்லாவிட்டாலும் அஜித்துக்கு சரியான தருணங்களில் கைகொடுப்பதால் எடுபட்டுவிடுகிறார். மற்றபடி அஜித்தின் அம்மாவாக நடித்திருக்கும் சுமித்ரா உள்ளிட்ட துணை நடிகர்களின் தேர்வும் நடிப்பும் படத்துக்கு பலம். பைக் சாகச வீரர்களின் பங்களிப்பு படத்துக்கு மாஸ் அப்பீலைக் கொடுப்பதில் அஜித்துக்கு இணை என்றே சொல்லிவிடலாம்.
முதன்மை வில்லனாக வரும் கார்த்திகேயா புதுமையான அணுகுமுறை எதையும் செய்யாததால் உடம்பெல்லாம் பச்சை குத்தியிருத்தும் வெறும் பச்சைப் பிள்ளையாகவே தெரிகிறார்.
படத்தின் பிரம்மாண்டமான அம்சம், ஆக்ஷன் காட்சிகளை இயக்குநர் வினோத் கற்பனை செய்திருக்கும் விதம். குவாரியிலிருந்து பைக் மாலையைத் தூக்குவதாக இருக்கட்டும், 1 டன் போதைப்பொருளை அஜித் ஆட்டையைப்போடும் காட்சியாக இருக்கட்டும் அவரை அடுத்த லெவல் ஆக்ஷன் நாயகனாகக் காட்டியிருக்கிறார்கள்.
ஆக்ஷன் களமாகவே நகர்ந்திருக்க வேண்டிய கதைக் களம், குடும்பக் களமாக மாறிவிடுவதில் மேலே குறிப்பிட்ட போலீஸ் பொங்கல் படங்களின் பட்டியலில் சேர்ந்துவிடுகிறது ‘வலிமை’. பைக் ஸ்டண்ட் மற்றும் சேஸிங் காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு