நோய் அறிகுறிகள் இருந்த பலருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களில் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர்.
அவர்களில் நோய் அறிகுறிகள் இருந்த பலருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், அவ்வாறே வந்து செல்கின்றனர்.
மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசித்த பகுதியாக கண்டறியப்பட்ட 9 பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் 2 வாரங்களுக்கு மேலாக புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு எதுவும் இல்லாததால் அந்த பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் கட்டுப்பாட்டு மண்டலங்களை சேர்ந்தவர்கள் மறுஉத்தரவு வரும் வரை முகக்கவசம் அணியவும், சானிடைசரை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அதேபோன்று பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 26-ந்தேதி வரை நீடிக்கும் என்றும், பொது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.