பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்கியது.
ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
விபத்து நடந்து 51 மணி நேரத்திற்கு பின் விபத்து நடந்த தண்டவாளம் வழியாக மீண்டும் சரக்கு ரெயில் சேவை நேற்று இரவு தொடங்கப்பட்டது. தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதி வழியாக சோதனை முறையில் சரக்கு ரெயில் இயக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் நேற்று முன் தினம் முதல் தங்கியுள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்கி உள்ளது. நேற்று வரை 90 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக விபத்து நடந்த பாலசோர் பகுதி வழியாக பயணிகள் ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது.