கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.
கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு திட்ட சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசு சமீபத்தில், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மாதம் தலா 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் தற்போது ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அதில் ஒரு இணைப்புக்கு மட்டுமே இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று அரசு கூறியுள்ளது.
இந்த புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வீட்டில் வசிப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கான அரசாரணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-
* கர்நாடகத்தில் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது. மாதந்தோறும் மீட்டர் அளவிடும்போது, மொத்த மின் பயன்பாட்டிற்கு கட்டணத்தை கணக்கிட வேண்டும்.
* ரசீதில் தகுதியான மின் பயன்பாட்டிற்கான தொகையை கழித்துவிட்டு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.
* கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. சேவா சிந்து இணையதளம் அனுமதிக்கப்பட்ட மின் அளவை விட நுகர்வோர் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அத்தகையோருக்கு பூஜ்ஜியம் என்று குறிப்பிட்ட ரசீது வழங்க வேண்டும்.
* இந்த திட்டத்தின் கீழ் பயனை பெற விரும்புகிறவர்கள் சேவா சிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின் நுகர்வோர் தங்களின் மின் நுகர்வோர் அடையாள எண், கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பாக்கிய ஜோதி, குடீர ஜோதி, அம்ருத் ஜோதி திட்ட மின் இணைப்புகள் இந்த திட்டத்துடன் இணைக்க வேண்டும்.
* மின் கட்டண பாக்கியை வருகிற 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்குள் பாக்கியை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் நுகர்வோர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவற்றில் ஒரு இணைப்பு மட்டுமே இந்த திட்டத்தின் பயனை பெற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.