கஞ்சி தானிய அரிசி வகைகளில் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதனாலும், சீக்கிரமாக செரிமானம் பெற்றுவிடக் கூடியதும் என்பதனாலேயே பெரும்பாலும் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
கஞ்சியில் சேர்க்கப்படும் உணவுப்பொருட்களின் வகை வேறுபாட்டில் பல்வேறு அடைமொழிப் பெயர்களுடனான கஞ்சிவகைகள் உலகெங்கும் உள்ளன. குறிப்பாக ஆசிய நாடுகளில் அதிகளவிலான கஞ்சி வகைகள் பயன்பாட்டில் உள்ளன. இவை எல்லாவற்றிலுமாக வேறுபடுவது "முள்ளிவாய்க்கால் கஞ்சி". ஏனெனில் அது வலிசுமந்த ஒரு இன அடையாளம்.
ஒரு குட்டித் தீவின் குறுகிய நிலப்பரப்பு முள்ளிவாய்க்கால். அந்த நிலத்தினிலே இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையின் போது, ஒட்டிய வயிறுகளுடன் தப்பிப்பிழைத்த மக்களின் உயிர்காத்த அமிர்தம் "முள்ளிவாய்க்கால் கஞ்சி". உப்பில்லை, உறுசுவையில்லை, உடன்வந்தவனும் இல்லை, எனும் கையறுநிலையில், உயிர் வாழ்ந்திடலாம் எனும் நம்பிக்கை தந்த அருமருந்து.
"முள்ளிவாய்க்கால் கஞ்சி" வெறும் கஞ்சியல்ல. இனவழிப்புக்குள்ளான ஈழத்தமிழ் மக்களின் அடையாளம். அழிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கோரும் வாசகம். "நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரிதான் தீர்மானிக்கிறான்" என்றார் புரட்சியாளர் மாவோ. ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட வரிக் கட்டுப்பாட்டினை எதிர்த்து மகாத்மா காந்தி தொடுத்த அறப்போராட்டங்களில் ஒன்று "உப்புச் சத்தியாக்கிரகம்". அழிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான நீதிகோரிடும், நீண்ட போராட்டத்தித்திலும், இனவழிப்படுகொலைகளின் துயரநினைவுகளிலும், ஒருங்கு சேரும் ஈழத்தமிழமக்களின் உணர்வுறு ஆயுதம் உப்பில்லா " முள்ளிவாய்க்கால் கஞ்சி" .
சென்ற ஆண்டில்.. முள்ளிவாய்க்கால் கஞ்சியும் காலி முகமும் !