சென்ற வாரத்தில் ஆசிய பூகோளப் பரப்பில், பரபரப்பாக இருந்த இந்தியா பாகிஸ்த்தான் போர் முறுகல், கடந்த இரு தினங்களில் அமைதி கண்டிருக்கிறது. இது நிரந்தரமான அமைதியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றே ஊகிக்கத் தோன்றுகின்றது.
போர் நிறுத்தத்தின் பின்னதான, இரு நாடுகளின் அறிக்கைகளிலும் இது தெளிவாகவே தெரிகிறது. இந்தியா பாகிஸ்தான் மோதல் எனக் குறிப்பிட்டாலும், உண்மையில் இது இந்தியா பாக்கிஸ்தான் சண்டைதானா...? எனும் கேள்வி பலமாகவே உள்ளது. இது ஒரு வணிகப் போர் என, சண்டைகள் நடைபெற்ற போதே மேற்குலக ஊடகங்கள் சில தெரிவித்திருந்தன.
சின்ன வகுப்புக்களில் படிக்கும் பிள்ளைகளில் சில விசமக்காரச் சிறுவர்கள், இரண்டு சிறுவர்களிட்ம் " முடிந்தால் நீ அவனுடைய மூக்கைத் தொட்டுப்பார். அவன் விடமாட்டான்.." என உசுப்பேத்துவார்கள். சண்டை மூண்டுவிடும். சற்று நேரத்தின் பின் மூட்டிவிட்டவர்களே விலக்குப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் இருக்கிறது இன்றைய உலக நடப்பு. அதி நுட்ப ஆயுதங்களைத் தயாரிப்பார்கள், விற்பார்கள். சண்டை போடாதீர்கள். அமைதியாக இருங்கள் எனச் சமரசம் பேசுவார்கள். நாகரீகக் கோமாளிகள்.
தங்கள் தங்களுக்கான வணிக நலன்கள், பிராந்திய நலன்கள், என்பவற்றுக்கான கிளர்ச்சிகளையும், அதற்கான மோதல்களையும் உருவாக்குவதில் எந்தவொரு நாடும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. இந்தியாவும், பாகிஸ்தானும் கூட இதற்கு விதிவிலக்கானவை அல்ல. இவர்களின் குரூரமான போர்கோலங்களுக்குப் பலியாவது அப்பாவியான இளைய சமூகமும், பொது மக்களும். போர் ஒன்றும் விருப்பத்திற்குரிய தேர்வல்ல. ஆனால் அது எல்லாவிடத்திலும் திணிக்கப்படுகிறது.
ஆயுத விற்பனையைப் பொறுத்தவரை இந்தியா எதிர் பாகிஸ்தான் என்பது அமெரிக்கா எதிர் சீனா என்பதே ஆசியப் பிராந்தியத்தின் நிலை எனப் பரவலாகக் பேசப்பட்டாலும், இந்தியத் தரப்பில் இரஷ்யாவின் பங்கும் முக்கியமானது.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவை நோக்கி உள்ளேயும் வெளிவிலும் எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி, எல்லைப்பிராந்தியத்திலுள்ள பிரபலமான ஒரு சுற்றுலாத் தளம் பாதுகாப்பற்றிருந்தது எவ்வாறு ? இந்தக் கேள்விக்கான பதில் வெளிப்படையாகப் பகிரப்படாவிட்டாலும், உள்ளக மட்டத்தில் மிகக் கடுமையாக விவாதிக்கப்பட்டிருக்கும். பகல்காம் தாக்குதலின் பின்னதாக காஷ்மீரில் அதிகாரிகள் அரசியற் தலைவர்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அது முக்கியமாகச் சுட்டப்பட்டிருந்தது என்றே செய்திகள் தெரிவித்தன.
தாக்குதல் நடந்ததன் பின்னதாக உள் நாட்டிலும், வெளியிலுமிருந்த எழுந்த கேள்விகளுக்கான பதிலாகவும், தங்களது வலிமையை தெரியப்படுத்துவதற்குமாக இந்தியா தொடுத்த தாக்குதல் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயர் முதல் பிரஸ்மீட் வரை மிகத் தெளிவாகத் திட்டமிட்ட ஒரு தாக்குதலாகவே அமைந்திருந்தது. பிரதம்ர் மோடி தலைமையிலான எதிர்பரசியல் பேசுவதற்காக, இந்திய இராணுவத்தின் வளர்ச்சியையோ அதன் போர் நடவடிக்கைகளையோ சிறுமைப்படுத்துவது முறையாகாது. அதேபோல் இந்திய அரசு இந்தப் போர் நடவடிக்கைகளை மிக நேர்த்தியான ஒருங்கமைப்புடன், தீவீரவாத முகாம்கள் மீதான தாக்குதல் என்றும், பதில் தாக்குதல் என்றும் வகைப்படுத்தி நடத்தியதுடன், அதனை வெளிநாடுகளிலும் முறையாகவே நியாயப்படுத்தியிருந்தது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் உரைகளும், பேட்டிகளும், பெரும் பலமாக இருந்தன.
பாக்கிஸ்தான் தரப்பில் இந்தத் துல்லியத்தையும் திட்டமிடலையும் காணமுடியவில்லை என்பதே வெளிப்படையாக இருந்தது. அரச அதிகாரிகளும், இராணுத் தரப்பும், குழப்பமான வகையிலேயே தமது தரப்பினை வெளிப்படுத்தின. பயங்கரவாதிகளின் பதுங்குழியாகப் பாக்கிஸ்தான் இருக்கிறது என்பது எல்லா நாடுகளும் அறிந்ததே. ஆனால் அதற்கான பொறுப்பாளர்கள் பாகிஸ்தான் மக்கள் அல்ல . அந்த நிர்ப்பந்தத்தை அந்நாட்டு மக்கள் மேல் திணித்தில் பெரும் பங்கு, ஆயுத உற்பத்தியிலும், ஆயுத வர்த்தகத்திலும், ஈடுபட்டிருக்கும் பல நாடுகளுக்குமுரியது. அதேபோல் பாகிஸ்தான் அரசு மக்களுக்கான அரசாக இருப்பதற்கான எல்லா நிலைகளும், தீவிரவாதக் குழுக்களினால் மட்டுப்படுத்தப்படுகிறது. தீவிரவாதக் குழுக்களை உருவாக்கியதிலும், ஊட்டி வளர்ப்பதிலும், மறைந்திருப்பது ஆயுத உற்பத்தியும், வணிகமும்.
மேற்குலகின் ஆதிக்க சக்திகளான நாடுகள் ஆரம்பித்து வைத்த, இந்த ஆயுதப் போட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும், ஆசியப்பரப்பில் சிக்குண்டு நிற்கின்றன . இரண்டு நாடுகளிலும் , வளரும் பிரதேசங்களும், வறுமைப்பட்ட மக்களும் இன்னமும் நிறையவே உள்ளார்கள். அன்றாடத் தேவைகளான உணவு, தண்ணீர், கல்வி, போக்குவரத்து, மருத்துவம் என்னும் மனித அடிப்படைத் தேவைகளில் இன்னமும் பின்தங்கி நிற்கின்ற இந்த இருநாடுகளும், போர் தளவாடங்களின் பாவனையில், அணுசக்தி ஆயுதங்கள் வரையில் வளர்ந்து நிற்கின்றன என்பது பெரும் சமூக முரண். இவ்வாறான நாடுகளின் உள்ளக அரசியற் குழப்பங்களைச் சாதகமாக்கி, போர்களை உருவாக்குவார்கள். தங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறிவிட்டாலோ, அல்லது தோல்வியுற்றாலோ, வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிட்டபடி சமாதானத் தேவதைகளாக களம் இறங்குவார்கள். இந்தக் களத்திலும் அப்படித்தான். இந்தப் போர் குறித்த விமர்சனங்களில் இரு நாட்டு அரசுகளின் மதவாதப் போக்குக் குறித்தும் பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மதச்சார்ப்பு நிலைக்கும், பாகிஸ்தானின் மதக்கோட்பாட்டு நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. மதக் கோட்பாடுகளை, மக்களின் உணர்வு நிலையோடு கலந்து செய்கின்ற வன்முறைகளை யார் செய்தாலும் அவை கண்டனத்திற்குரியவையே. இந்தச் சமரில், சில வலுவான அரசியற் செய்திகளையும், வலிமையான இராணுவ நிலைப்பாட்டினையும், இந்தியா உலகுக்கு வலிமையாகவே சொல்லியிருக்கிறது எனலாம். அதன் புரிதலும் இந்தப் போர் நிறுத்தத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இப்போது அறிவிக்கப்படட போர் நிறுத்தம் தொடர்பிலும், அறிவிக்கப்பட்ட விதத்திலும், பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. எது எப்படியாயினும் நடைமுறையில் போர் நிறுத்தம் என்பது மக்களுக்கு மகிழ்ச்சி தருவதே. இராணுவத்திற்கும் கூட அது மகிழ்ச்சிகுரியதே. போர்நிறுத்தம் தொடர்பில், இந்திய முன்னாள் இராணுவத் தளபதி எம். எம். நரவனே குறிப்பிடுகையில்," போரால் எண்ணற்ற உயிர்ச்சேதங்கள் ஏற்படும், குழந்தைகள் பெற்றோர்களை இழப்பார்கள், குடும்ப உறவுகள் உணர்ச்சி ரீதியான அதிர்ச்சிகளையும். வலிகளையும், பல தலைமுறைகளுக்குச் சுமப்பார்கள். போர் ஒரு நாட்டிற்கு எவ்வள இழப்புக்களைத் தரும் என்பது நன்றாகவே தெரியும். ஒரு இராணுவீரர் என்ற வகையில் உத்தரவுக்குப் பணிந்து போரை முன்னெடுத்தாலும், பேச்சுவார்த்தை என்பதே என் முதல் தேர்வாக இருக்கும் " என்கின்றார்.
ஆயுத உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், அதனால் பயன்பெறும் இடைத்தரகர்களுமே, போர் விரும்பிகள். மானுட நேசிப்புள்ள மற்றெவரும் போரை விரும்பமாட்டார்கள். ஏனெனில் போர் அத்துனை கொடியது துயரம் தருவது. பாலஸ்தீனக் கவிஞர் மெஹமுத் டார்விஷ் போரின் துயரை, வலியை, இவ்வாறு பதிவு செய்கின்றார்.
" போர் ஒரு நாள் முடிவடையும்
தலைவர்கள் கை குலுக்கிக் கொள்வார்கள்
இறந்து போமகனின் வருகைக்காக
வயதான தாய் காத்திருப்பாள்
காதல் கணவனை எதிர்பார்த்து
காத்திருப்பாள் அந்தப் பெண்
அந்தக் குழந்தைகள் தங்கள்
சாகச அப்பாவின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்
எங்கள் மண்ணை யார் விற்றார்கள்
என எனக்குத் தெரியாது - ஆனால்
அதற்கான விலையை யார் தருகிறார்கள்
என்பதற்கு சாட்சி நான் "
yes