நாகரீகம் மிக்க மனித சமூகம் என பீற்றிக் கொள்ளும் இந்த உலக சமுதாயத்தில்தான் நாளும் மனித மான்பு மறந்த செயல்கள் அதிகாரத்தின் போதையில் நிகழ்த்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
காசா மருத்துவமனையில் உயிர்வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் ஒரு நொடியில் கொல்லப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும், மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர். உயிர்வாழ்வதற்காக வலிகளைச் சுமந்தவர்களும், நம்பிக்கை தந்தவர்களும் ஒருசேரக் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களது குடும்பங்களும் உறவுகளும் தவித்துப்போயுள்ளார்கள். தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்துக் கைகுலுக்கிக் கலைந்து செல்வார்களே தவிர வேறோன்றும் ஆவதில்லை, ஆனதுமில்லை.
1987 அக்டோபர் 21-22 ம் நாட்களில், இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ். பொது வைத்தியசாலையில் நுழைந்த இந்திய அமைதிப் படை இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் 68 முதல் 70 பே ர் வரையில் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளின் இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என இந்திய இராணுவம் தெரிவித்தது.
2009 மே 13, 24 மணி நேரத்தில் இரண்டு முறை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இயங்கிய தற்காலிக மருத்துவமனையை குறிவைத்து இலங்கை இராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் குழந்தைகள், மருத்துவ ஊழியர்கள், ஒரு தன்னார்வ மருத்துவர் மற்றும் செஞ்சிலுவை சங்க ஊழியர் உட்பட 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ICRC உறுதிப்படுத்தியது. கண்டனங்களை மட்டுமே தலைவர்கள் தெரிவித்தார்கள்.
2023 அக்டோபர் 17ந் திகதி, (நேற்று) காசா நகரின் மையத்தில் உள்ள அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனைத் தாக்குதலின் போது, காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது. பிந்திக்கிடைத்த செய்திகளின்படி, இத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 900 வரையில் இருக்கலாம் எனத் தெரியவருகிறது.
இத் தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் நடத்தியது என ஹமாஸ் அமைப்பும், தீவிரவாதிகளின் தவறான தாக்குதல் என இஸ்ரேலிய இராணுவமும் குற்றஞ்சாட்டுகின்றன. தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேசத் தலைவர்களும் அமைப்புக்களும் கண்டனங்களைத் தவறாது தெரிவித்து வருகின்றனர். அதற்கு மேல்....? இன்னும் சிலகாலத்தின் பின் இதுபோன்று வேறோர் இடத்தில் நிகழக்கூடும். அப்போதும் கண்டன அறிக்கைகளுடன் தலைவர்கள் தோன்றுவார்கள்...
அமைப்புக்களின் பெயர்களிலும், தலைவர்களின் வாய்ப்பேச்சுகளிலும் மட்டும் வாழும் மனிதாபிமானத்துடன், (அ)நாகரீக மனிதர்களாக வாழ்ந்து கடப்போம்..!