ஓவியர் மாருதியின் சித்திரங்கள் சினிமாப்பாணியிலானவையானாலும், வண்ணங்களைக் கையாள்வதில் அவர் கலாவித்தகர், ரசணையாளர்.
மாருதியின் தூரிகைப் பெண்களது முக அமைப்பு, வட்டம், நீள்வட்டம், குவி வடிவம் என மாறுபட்டிருந்தாலும், எப்போதும் மாறாதிருப்பவை அப்பெண்களின் கண்களும் இதழ்களும், சற்றுச் சதைப்பிடிப்பான உடலமைப்பும். குறிப்பாக மாருதியின் தூரிகை படைக்கும் பெண்களின் கரு வண்டுக் கண்களில் ஒரு உயிரோட்டம் மிகுந்திருக்கும். அவை தம் பாத்திரங்களின் உணர்வுகளை மிகுதியாக வெளிளப்படுத்தும்.
வீட்டு வேலையைக் கவனிக்கும் பெண்ணோ அல்லது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணோ அல்லது ராஜகுமாரியோ, இல்லை சின்ன பாப்பாவோ அவை அத்தனையும் " மூக்கும் முளியும் " ஆக பார்வையாளனுடன் அல்லது வாசகனுடன் பேசிட முயலும். அதுவே ஓவியர் மாருதி அவர்களது தூரிகையின் படைப்பாற்றல். அவரது ஆண் படைப்புக்களும் பெரும்பாலும் இத்தகையனவே.
தமிழக ஓவியர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான மாருதியின் இயற்பெயர் இரங்கநாதன். மாராத்தியக் குடும்பத்தைச் சேர்ந்த டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாக, புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28 அன்று பிறந்தார். ஓவியத்தின் மீதிலான ஆர்வத்துடன் வந்த அவர், சென்னை மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணியினைச் செய்தவாறே, ஆர். நடராஜன் என்ற ஓவியரிடம் ஓவியம் கற்றார். இவருடன் சக மாணவனாக இருந்து ஓவியம் வரையப் பழகியவர் நடிகர் சிவகுமார்.
மாருதி என்ற பெயரில் இவரது முதல் ஓவியம் 20 ஏப்ரல் 1959 அன்று குமுதம் வார இதழில் வெளியானது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரகளான எம்.ஜி.ஆர், மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கவனம் பெற்றிருந்தவர். புதுக்கோட்டை இலக்கியப் பேரவையினர் அவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்திருந்தனர்.
மகாராட்டிர மாநிலம் புனே நகரில் தன் மகள் வீட்டில் தங்கியிருந்த ஓவியர் மாருதி, தனது 86வது வயதில், இன்று 27.07. 2023 பிற்பகல் உடல்நலக் குறைவால் காலமானார். ஓவியப் பிரம்மாவிற்கு அஞ்சலிகள் !