free website hit counter

வெள்ளை நிலவில் விக்ரம் லேண்டர்...!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய இந்தியாவின் விக்ரம் லேண்டர் என்ன செய்யும் ?. சந்திரனில் ஆய்வு செய்வதற்காக இந்தியா தொடங்கிய பெருந் திட்டம் சந்திராயன். சந்திராயன் 1, 2, திட்டங்களைத் தொடர்ந்து, நேற்றைய தினம் சந்திரனின் தென் துருவப் பிரதேசத்தில், சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள நாடு என்னும் பெருமையையும், சந்திரனின் தென் துருவப் பிரதேசத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையையும் பெற்று, இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சந்திரயான் திட்டம் மிக நீண்ட பயணத்தைக் கொண்டது. சந்திராயன் -3 விண்கலம் கடந்த மாதம் 14ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அப்போது பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், "திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் சந்திராயன் 3 ன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. ஆக.17ம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டர் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலவுக்கு 153 x 163 கி.மீ. தொலைவில் ரோவர் பயணித்து வந்தது. அதில் இருந்து லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று 23.08 23 புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணியளவில் சந்திராயன்-3ல் பயணித்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதன்கிழமை காலை முதல் லேண்டரைத் தரையிரக்குவதற்கான வேலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு லேண்டரை தரையிறக்கும் பணியினை விஞ்ஞானிகள் தொடங்கினர். லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு லேண்டர் நிலவினை நோக்கி பயணித்தது. இதனைத் தொடர்ந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மாலை 6.02 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சாதனை குறித்த அறிவிப்பை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிக்கும்போது இந்தியா தற்போது நிலவின் மீது இருப்பதாக பெருமிதம் பொங்க குறிப்பிட்டார். இந்த வெற்றியை இஸ்ரோ சந்திராயன் கட்டுப்பாட்டு மையத்தில் பார்த்தவாறிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

இந்தப் பெரும் வெற்றிக்குப் பின்னால் சந்திராயனின் முதல் இரு திட்டங்களும் திட்டமிட்டமிட்டபடி நிறைவேறவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவில் இந்தியாவின் கொடியை நாட்ட விரும்பினார்கள் விஞ்ஞானிகள். அதன்படி சந்திரயான் 1 விண்கலம் கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனால், அது தோல்வி அடைந்தது. அதில் இருந்து பாடம் கற்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சந்திராயன் 2 விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நிலவை நோக்கி ஏவினர். ஆனால், ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பறப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது.

2019 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் இறுதிக்கட்டத்தில் தோல்வியடைந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், சந்திரயான் 3 திட்டம் பெற்ற இந்த சரித்திர வெற்றிக்கே சந்திரயான் 2 திட்டம் தான் உதவி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். இம்முறை எந்த நாடுகளுமே தொட்டிடாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடிவு செய்த இஸ்ரோ அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து, கச்சிதமான திட்டத்துடன் கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவியது. பூமியின் சுற்றுவட்டப்பாதையை பலமுறை சுற்றி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து அங்கும் சுற்றில் சுமார் 45 நாள் பயணத்தை முடித்து வெற்றிகரமாக இன்று நிலவை தொட்டு இருக்கிறது சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர்.

சந்திரயான் 2 ஐ தோல்வி திட்டம் என்று சொல்லிய போதும் அது முழுமையாக தோல்வியடையவில்லை. ரோவர் இறங்கியதில் மட்டும்தான் பிரச்சனையே தவிர சந்திரயான் 2 திட்டத்தால் இன்று வரை இந்தியாவுக்கு பயன்கிடைத்து வருகிறது. ஆம், சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெறுவதற்கு சந்திரயான் 2 ஒரு முக்கிய காரணம். அதில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் எதிர்பார்த்த கால எல்லையை விட இன்றும் நிலவை சுற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று நிலவை சந்திரயான் 3 நெருங்கியவுடன் அதை வரவேற்றதே சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர்தான். அது சரியாக வேலை செய்து வந்ததால்தான் சந்திரயான் 3 இல் ஆர்பிட்டரையே வைக்காமல் இஸ்ரோ அனுப்பி இருக்கிறது. சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களால்தான், சந்திரயான் 3 முறையாக நேர்த்தியாக தரையிறங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சந்திரயான் வெற்றியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான குழுவிற்கும் பெரும் பங்கு உள்ளது.

நிலவில் இந்தியா தரையிறங்கிய மகிழ்வினை ஒட்டுமொத்த நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து விரிந்த சாய்வு தளம் வழியாக வெளியே வந்த ரோவர் பிரக்யான் நிலவில் ஆய்வுகளை நடத்தி வருகிறது. அடுத்து வரும் 14 நாட்கள். நிலவில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 5 கருவிகள் லேண்டரில் அனுப்பப்பட்டன. அது போல் ரோவரில் ஆல்பா எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் ரசாயன பொருட்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும். அது போல் தரையிறங்கும் இடத்தில் நிலவில் மண், பாறைகள் இருக்கின்றன என்பதையும் இது ஆய்வு செய்யும். லேண்டரில் ரம்பா எனும் கருவி அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் அயனிகள், எலக்ட்ரான்கள் எவ்வளவு இருக்கின்றன ,அதன் அடர்த்தி என்ன என்பதை அளவிடும். நிலவில் தென் பகுதி குளிர்ச்சியான பகுதி. எனவே இங்கு வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதா கண்டறியும் கருவியும் அனுப்பப்பட்டுள்ளது. அது போல் நிலவில் நில அதிர்வு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யவும் ஒரு கருவி அனுப்பப்பட்டுள்ளது. இந்த 14 நாட்களும் தற்போது சூரிய வெளிச்சம் நிலவில் படும் என்பதால் ரோவர் சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்கும். அது எடுத்த செய்திகளை லேண்டர் தகவல்களாக பூமியில் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கும். ரோவருடன் இஸ்ரோவுக்கு எந்த தொடர்பும் இல்லாததால் அது லேண்டருடன் தொடர்பிலேயே இருக்கும். நிலவின் தென் பகுதியில் உறைந்த நிலையில் தண்ணீர் இருந்தால் ஆக்ஸிஜன், எரிபொருள், தண்ணீருக்கான ஆதாரமாக அது விளங்கும். இந்த ஆய்வைதான் ரோவர் மேற்கொள்ள போகிறது. இந்த வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட முடியும் எனவும் இது மனித குலத்திற்கான வெற்றி எனவும்ன், தென்னாபிரிக்காவிலிருந்து இக் காட்சிகளை நேரலை வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாரதப் பிரதம் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இதனைச் சாதித்துக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்தியாவின் இந்தப் பெருமை மிகு வெற்றியினை இணைய வெளியில் கூகுள் தன் தேடல் பக்கதில் புதிய டூடுல் வெளியிட்டுச் சிறப்பிதுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula