நாச்சிமார்கோவிலடி கண்ணன். ஒரு காலத்தில் அப்படிச் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பின்னாளில் அவர் இசைவாணர் கண்ணனாக, கண்ணன் மாஸ்டராக வளர்ந்தார்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, முழு இலங்கையிலும் 70களில் பிரபலமாகியிருந்த இசைக்குழு நாச்சிமார் கோவிலடி கண்ணன் கோஷ்டி. மெல்லிசைப்பாடல்களையும், சினிமாப்பாடல்களையும், விழாக்களிலும், கலைநிகழ்ச்சிக்களிலும் இசைப்பதில், மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற அந்த இசைக்குழுவின் இயக்குனர்தான் கண்ணன். பல கீழைத்தேய வாத்தியங்களையும், மேலைத்தேய இசைக்கருவிகளையும், வாசிக்கத் தெரிந்தவர்.
கொக்குவிலில் இருந்த என் நண்பர் ஒருவரின் பரிந்துரைப்பில், கண்ணன் அவர்களின் நாச்சிமார் கோவிலடி வீட்டிற்குச் சென்றோம். அவர் வீட்டின் பெயர் பிரசாந்தி நிலையம். வீட்டின் வரவேற்பறையே ஒரு கோவிலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கண்ணன் ஒரு சாயிபக்தர் என்பதால், மண்டபத்தின் மத்தியில் பெரிய அளவில் சாயிபடம். சூழவும் பல்வேறு தெய்வப்படங்கள். அந்த மண்டப்த்தில் ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா, வயலின்போன்ற இசைக்கருவிகள், எந்நேரமும் வைக்கப்பட்டிருக்குமாம். யார் வேண்டுமானாலும், எந்நேரமும் போய், அவற்றை வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசித்தும், பாடியும் பஜனை செய்யலாமாம், எனச் சொன்னார்கள்.
நாம் போயிருந்தநாள் சிவராத்திரி தினம் என்பதால் விடிய விடிய பஜனை நடந்து கொண்டிருந்தது. ஆர்மோனியத்தை வாசித்துக் கொண்டு கண்ணன் பாடினார். மற்றவர்களும் பாடினார்கள். “ பிறேம முதித மனசே ககோ ராம ராம ராம் சிறி ராம ராம ராம்... “ கண்ணன் பாடினார் என்றா சொன்னேன். இல்லை இல்லையில்லை, இசையோடு இசைந்து, உருகியவண்ணமிருந்தார் கண்ணன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிய வண்ணமிருந்தது.
காலம் மாறியது. தான் கற்ற இசை வித்தைகளை மற்றவர்களுக்குக் கற்றுத் தரும் குருவானார் கண்ணன். அதனால் கண்ணன் மாஸ்டர் என அழைக்கப்பெற்றார். ஆனால் அதனால் மட்டும் அவர் கண்ணன் மாஸ்டர் அல்ல. தமிகத்தில் இசைஞானி இளையராஜாவை மேஸ்த்ரோ என விழிப்பதுண்டு. மேஸ்த்ரோ எனும் சொல் ஸ்பானிய, இத்தாலிய மொழியடிப்படையில் உருவான குரு எனும் சொற்பதமாகும். இதேபோன்ற ஒரு சொல் விழிப்புத்தான் கண்ணன் மாஸ்டர் என்பதும். ஈழ மக்களின் வலிமிகுந்த காலங்களில், அவர்களது வலிகளின் வடிவமாய், இசையாய் ஆற்றுப்படுத்தியது கண்ணன் மாஸ்டரின் இசையறிவு. அதனாற்தான் ஈழத்தின் இசைஞானி எனும் வகையில் ஈழமக்கள் அவரை இசைவாணர் கண்ணன் என மரியாதை மிகுதியோடு அழைத்தார்கள்.
அத்தகைய பெருமைக்குரிய கலைஞனுக்கு, சென்றவாரத்தில் தமிழக Zee Tamil தொலைக்காட்சியின் 'ஸரிகமப' இசைத் தேர்வு நிகழ்ச்சி அரங்கில் மதிப்பளித்துப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்தப் பெருமைக்கு மிகவும் பொருத்தமானவர் இசைவாணர் கண்ணன். முதுமையைத் தொட்டுவிட்ட அவரின் குரல் தளர்ந்து போனாலும், மனதின் உறுதியும், என்றும் மாறாத புன்னகையும் முகத்தில் தவழ்கிறது. மிக நீண்ட காலத்தின் பின் ஈழத்தின் இசைவாணர் கண்ணனைத் திரையில் கண்ணுற்ற வேளை மனம் மகிழ்ந்தது. இசைவாரிசுகளாக அவர் உருவாக்கிய பல பேர் உலகெங்கும் அவரின் இசைப்பணியைத் தொடர்கின்றார்கள். தமிழகத்தில் அவர் பேத்தி பவதாயினி ஈழத்து இசைவாணரின் இசைவாரிசாக பரிணமிக்கத் தொடங்கியுள்ளார் தொடர்க இந்த பாரம்பரியமும், பந்தமும்..
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்