மெய் சிலிர்த்து போனேன். பிரித்தானிய காலனித்துவத்தின் போதும், அதற்கு முன்னரும் , மலேசியாவின் இறப்பர், பனை தோட்டங்களுன் சேவைகளுக்காக அங்கு வரவழைக்கப்பட்ட இந்திய, சீனக் குடிமக்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்தித்த அன்றாட இன்னல்கள், கொடுமைகளை மையப்படுத்தி அந்த கண்காட்சியின் ஆவணக் கலை பொருட்கள், திரைக்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அம்மக்களின் வம்சாவாளியில் வந்த பல இளைய கலைஞர்கள் அந்த கண்காட்சியை ஒழுங்கு செய்து நடத்தியிருந்தனர்.
கோலாலம்பூர் சென்றிருந்த போது, இயக்குனர் கோகுலராஜன் ராஜேந்திரனின் மலேசிய தமிழ் நாட்டுப்புற பாடல்கள் குறித்த ஒரு குறுகிய திரைக்காணொளி ஒன்றை Ilham Gallery இல் தற்செயலாக காணக்கிடைத்தது.
அதில் ஒரு சுவர்த்திரையில் கோகுலின் மலேசிய தமிழ் நாட்டுப்புற பாடல்களின் மீள்பதிவாக்க முயற்சிகள் காட்சிகளாகவும், செவிக்கு விருந்தாகவும் திரையிடப்பட்டு இருந்தன. அமர்ந்து பார்க்கத் தொடங்கினேன். மெதுவாக அவர்களின் உலகத்திற்குள் போய்விட்டேன். அந்த Ilham Gallery முழுவதும் தமிழ் நாட்டுப்புற பாடல்களின் வரிகளும் மெட்டும் ஒலித்து கொண்டிருந்தன.
இயக்குனர் கோகுலராஜன் ராஜேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் குமணவண்ணன் ராஜேந்திரனிடம் இது பற்றி கதைத்த போது விரிவான ஆவணத்திரைப்படமாக அதை உருவாக்கும் பணியில் இருப்பதாகவும் அதற்கான நிதி உதவி தேடுதலில் இருப்பதாகவும் கூறினார்கள்.
இலங்கையின் மலையக தமிழர்களும், மலேசிய தமிழர்களும்
இதே போன்று இறப்பர், தேயிலை தொழில்களுகாக இந்தியாவிலிருந்து பிரித்தானியர்களின் காலனித்துவத்தின் போது இங்கு கொண்டுவரப்பட்ட மலையகத் தமிழர்கள் குறுத்தும், 5 தலைமுறைகள் கடந்தும் பல அடிப்படை வசதிகள், கல்வி வசதிகள் இன்றி கஷ்டப்படுவது குறித்தும் வெளிக்கலை உலகிலும் அதன் வட்டாரங்களிலும் எங்கேனும் ஒரு முழுமையான ஆவணப் படைப்பாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதா எனும் கேள்வி எப்போதும் எனக்குள் வந்து போகும்.
இலங்கையில் பிறந்து வளர்ந்த நான், குறிப்பாக மத்திய பகுதி (கண்டி) சூழலில், வளர்ந்தும் அவர்களை பற்றி இலக்கிய கலை வெளியிலோ, அல்லது சுற்றத்தார் மூலமாகவோ கேள்விப்பட்டது அரிது. ஆனால் அன்றாடம் கூலித் தொழிலாளிகளாக எப்போதும் கண் முன் வந்து போகக்கூடிய நபர்களாகவே அவர்கள் எனக்கும் தெரிந்திருந்தனர்.
குறிப்பாக வடக்கு பூர்வீக தமிழர்களிடமோ அல்லது கொழும்பு வாழ் யாழ் தமிழர்களிடமோ, எந்தளவு மலையக தமிழர்களை பற்றி பேசப்படுகிறது, எந்தளவு அவர்களது வாழ்வியல் பகிரப்பட்டிருக்கிறது என்பதும் கேள்விகளாக வந்து போகும்.
மலேசிய தமிழர்களின் வாழ்வியலிலும் 5 தலைமுறைகளுக்கு முன்னதாக அதே பூர்வீகம் இருந்திருக்கிறது. அவர்களிடம் வலம் வந்த வாய்மொழி நாட்டுப்புறப்பாடல்கள் பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை. அதன் மெட்டுக்கள் மறந்து போகப்பட்டுள்ளன. அதன் வரிகள் சிதைவடைந்துள்ளன. அந்த வரலாற்றை மறுபடடியும் தூக்கி நிறுத்தி அவர்களின் மன திடகாத்திரத்தையும், துன்பங்களையும் வேதனைகளையும் மீளப்பதிவு செய்வது, இன்றைய இளம் தலைமுறையினர் அவர்களது வேர்களை புரிந்துகொள்வதற்கும் அதனூடாக தங்களது புதிய அடையாளங்களை தேடுவதற்கு கோகுலும், குமணனும் முயற்சிக்கின்றனர்.
யார் மலேசிய தமிழர்கள்?
மலேசிய தமிழர்கள், மலேசியாவில் சிறுபான்மை இனத்தவர்களே. மலாயர், சீனர்களுக்கு அடுத்து, 7% வீதமான மலேசிய மக்களை இத்தமிழர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஆனால் மலேசிய சனத்தொகை பெரிது என்பதால், இந்த 7% வீதமே சுமார் 2 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்களாக பரந்து விரிந்திருக்கின்றனர். சோழர்கள், சேரர்கள் காலத்திலேயே மலேசியாவின் கடாரம் உட்பட பல இடங்களில் தமிழர்களின் ஆளுமையும், கலை சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டாலும், 1800 மற்றும் 1900 நூற்றாண்டுகளிலேயே பெரும்பாலான தமிழர்கள் காலனித்துவ ஆட்சிகளின் போது கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசிய இறப்பர் தோட்டங்களுக்கும், புகையிரத கட்டுமானப்பணிகளுக்காகவும், மக்கள் சேவைகளுக்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கூடுதலானாவர்கள் தோட்டப்புறங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, கொத்தடிமைகளாக, வறுமைக்குள் வாழவைக்கப்பட்டவர்கள். மலேசியா மறுபடியும் காலனித்துவர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் (1957), பெரும்பாலான இத்தமிழர்களுக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட்ட போதும், அவர்களுடைய பொருளாதார, கல்வி வளர்ச்சி, மலாயர்கள், சீனர்களுக்கு அடுத்தபடியாகவே பின்னடிக்கப்பட்டுள்ளது.
5,6 தலைமுறைகளுக்கு பின்னராகவே கொஞ்சம் கொஞ்சமாக இளம் மலேசிய தமிழர்களின், கல்வி, தொழில்வாய்ப்புக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கலைத்துறையிலும் அவர்களின் ஆழுமை வளர்ச்சி அடைய தொடங்கியுள்ளது.
ஆராரோ ஆரீரரோ இசை ஆவணத்திரைப்படம்
அவர்களுடைய அடையளங்களை மீளக்கண்டெடுத்து பதிவு செய்வதற்கு, நீங்களும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்யலாமே. அது உலகில் எங்கிருந்தாலும், நீங்கள் என்ன மொழி பேசினாலும், பெரும்பான்மையாக இருந்தாலும், சிறுபான்மையாக இருந்தாலும், ஒரு சிறுபான்மை இன மக்களின் சுவடுகளை மீட்டெடுப்பதில் உதவி செய்வதன் மூலம், ஒரு பண்பாட்டுடைய ஆரோக்கியமான சமூகம் எது, எந்த சமூகத்தில் வாழ விரும்புகிறோம் எனும் எமது விழிப்புணர்வுக்கும் நாமே உரமிட்டு கொள்ளலாமே.
இந்த ஆவணத்திரைப்படத்திற்கான மிக முக்கியமான படப்பிடிப்பு செப்டெம்பர் 2025 நடைபெறுகிறது. அதை சரிவர, திறம்பட அனைத்து தேர்ச்சியுடனும் செய்து முடிக்க இப்போது உங்கள் பொருளாதாரப் பங்களிப்பு தேவை அவசியமாகிறது. இத்திரைப்படத்திற்கான பெரும்பான்மையான நிதி பல்வேறு அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களிடமிருந்து கிடைத்துவிட்டது. இன்னமும் மீதமிருக்கும் தொகையையே அவர்கள் நேரடியாக பொதுமக்களிடம் கேட்டுள்ளனர். மாற்று சினிமாவை விரும்புவர்களா நீங்கள், இது ஒரு இசை ஆவணத் திரைப்படம், புதிய முயற்சி. மலேசிய தமிழர்களின் வாழ்வியலை ஆழமாக, நேர்த்தியாக சொல்லும் திரைக்கதைகளே அரிதாக இருக்கும் வேளையில், அவர்களது நாட்டுப்புற பாடல்களை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம் சொல்லவருகிறதெனில், நிச்சயம், உலகம் வாழ் அனைத்து புலம்பெயர் தமிழர்களின் கதைகளின் திரைச்சொல்லாக்கத்திற்கும் இது முன்னுதாரணமாக அமையலாம். ஒரு சிறு உதவி, சிறுதுளி பெருவெள்ளமாகட்டுமே.
ஆவணத்திரைப்படத்தின் உருவாக்கம் பற்றி தெரிந்து கொள்வதற்கோ, அவர்களுக்கு தேவைப்படும் நிதி உதவியை பற்றி தெரிந்து கொள்வதற்கோ, அதை எப்படி இணையத்தில் அப்பங்களிப்பை செலுத்தலாம் என தெரிந்து கொள்வதற்கோ இந்த இணைப்பினை அழுத்துங்கள் :
https://www.omsakthifilms.com/araro-ariraro_1/journey-to-araro-ariraro
- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா