இன்று செப்டம்பர் 1. உலக கடித தினம். இந்த நாள், கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே பெரிய பரிசாக எண்ணி கொண்டாடப்பட வேண்டிய விஷயம். கடந்த இரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்புகொள்ளும் சாதனமாக இருந்தது.
இன்றைய தகவல் தொடர்பு சாதனமாண இண்டர்நெட்டைப் பயன்படுத்தி, உலகில் எந்த மூலை நமக்குப் பிடித்த உறவுகள் இருந்தாலும் அவர்களுடன் நிகழ் நேரத்தில் நம்மால் காணொலி அழைப்பு வழியாக அவர்களது உருவத்தை செயல்திறன் பேசியிலும் கணினித் திரைவழியாகவும் பார்த்தபடி பேசமுடிகிறது. அவ்வளவு ஏன், நம் மணிக்கட்டில் செயல்திறன் கடிகாரத்தைக் கட்டிக்கொண்டால் அந்தக் குறுந்திரை வழியாகவே நாம் காண முடிகிறது. ஆனால் ஒரு கடிதமும், அதில் பதிவான கையெழுத்துக்களும் தரும் உயிர்ப்பும், உணர்வும் தனியானவை. பெருந் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை கடிதங்கள் மூலம் பரிமாறிக் கொண்ட உணர்வுகளும், உறவுகளும் ஒப்பற்றவை. சிறையிலிருந்து ஜவகர்லால் நேரு, மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள், அப்பா மகளுக்கு எழுதிய அன்பின் கடிதங்கள் என்பதற்கும் அப்பால், அரசியற்களத்தில் முக்கியமாகப் பேசப்படுபவை. பல பெரியோர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் காலத்தின் வரலாறு பேசுபவை.
இன்றளவும் சட்டபூர்வமான முடிவுகளைத் தெரிவிக்கும் அதிகார ஆணையாக கடிதப் பரிமாற்றங்கள் இருந்தாலும், கதைகள் பேசிய, கருத்துக்கள் கூறிய, காதல் மொழிந்த கடிதங்கள் காலவெள்ளத்தில் கரைந்தே போகின்றன. கடிதங்களின் காதலன் நான். புத்தகங்கள் சேகரிப்பது போலக் கடிதங்கள் பலவற்றைச் சேகரித்து வைத்திருந்தேன். இடப்பெயர்வுகள் பல அவற்றை என்னிடம் இல்லாதொழித்தன. ஆயினும் இப்போதும் பல கடிதங்கள் சேகரிப்பிலுண்டு.
புலம்பெயர்ந்த பின் என்றோ ஒருநாள் அப்பாவிடமிருந்து வரும் கடிதங்கள், அதில் காணும் எழுத்துக்களும், அப்பாவே அருகிருந்து வருடுவது போன்றிருக்கும். அப்பா மறைந்து 12 ஆண்டுகள் கழிந்து விட்ட போதிலும், கடிதங்களில் காணும் அப்பாவின் கையெழுத்துக்கள், அப்பாவின் உயிர்ப்பை உடனிருத்துகின்றன. புலம் பெயர்ந்த புதிதில் கண்ணீரும், கவலையும், காதலுமாக, மனைவி பிள்ளைகளுக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றை, மகள் படித்துவிட்டு, வரவேற்பறையில் சட்டகமிட்டு வைத்தாள். மீள வாசித்துப்பார்க்கையில் நாமேதான் எழுதினோமா என ஆச்சரிய அனுபவமும் தருகிறது. கடிதங்கள் எப்போதும் உயிர்ப்பானவை.
இதனை உணர்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ல் கொண்டு வரப்பட்டதுதான் கடித தினம். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சலை விட தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதினார். அதனால்தான் அதை நாம் கொண்டாடும் விதமாக இந்த தினத்தை உருவாக்கினார்.
உங்களிடம் காலம் கடந்த ஒரு கடிதம் இருந்தால் எடுத்து வாசித்துப் பாருங்கள். அது ஒரு காதல் கடிதமாக இல்லாவிடினும் கூட, புதிய சுகானுபவத்தினை நிச்சயம் தரும்.
உலக கடித தினம் இணையத்தளம் : http://www.worldletterwritingday.com/about.html
-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்