இலங்கையின் 9வது ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல், செப்டம்பர் 21 (2024) ல் நடைபெறவுள்ளது. இலங்கையில் 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிலிருந்து நாடு முற்றாக மீள முடியாத நிலையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்கள் ஒரு போதும், சிறுபான்மையினத் தமிழ்மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புக்களையோ நம்பிக்கைகளையோ விதைத்ததில்லை, விளைவித்ததுமில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பெரும்பான்மையினச் சிங்கள மக்கள் மத்தியிலும் நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன. இதற்கு இரண்டு காரணங்களை முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். சிறுபான்மைத் தமிழ்மக்களின் ஜனனாநாயக அரசியல் உரிமைகளை, இனவாதப் பூச்சுகளால் பெரும்பான்மை மக்களிடத்தில் வளர்த்தெடுத்த அரசியலும், அந்த மோசமான அரசியலை நிகழ்ந்துவதற்குப் பிராந்திய அரசியற்பெருஞ் சக்திகளுடன் கைகோர்த்து, நாட்டின் சொந்த மக்களுக்கு இழைத்த பெருந்துரோகமும் காரணங்களெனலாம்.
இத் தேர்தலில், முக்கிய வேட்பாளர்களாக, தற்போதைய ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜனபல வேகய கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இடதுசாரி கொள்கைகளைக் கடைபிடிக்கும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரான அனுர குமார திசாநாயக்க, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனா (SLPP) கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, பொதுத் தமிழ் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. அரியநேந்திரன், ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆனால் இவர்களில் எவருமே மக்களின் பெரு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றார்களா என்பது ஐயத்திற்குரியதே.
ரணில் விக்ரமசிங்க : இலங்கை அரசியலில் முற்றிலும் செயலிழந்து போன ஒரு அரசியல்வாதியாக இருந்த நிலையிலிருந்து, ஜனாதிபதியாகி, நாட்டின் பொருளாதாரத்தை உலகநாடுகின் உதவிகளோடும், உலக வங்கியின் கடன் உதவிகளுடனும், காப்பாற்றினார் எனப் பெயர்பெற்றிருக்கினறார். பேரினவாதப் பெருங்கூறின் ஒர் அலகு என்பதும், தமிழ் மக்களின் அரசியற் போராட்ட சக்திகளை தந்திரமாகப் பிரித்துச் செயலிழக்கச் செய்த சூத்திரதாரியென்றும், ராஜபக்ஷ குடும்பத்தின் விசுவாசியென்றும் குற்றச்சாட்டுக்களும், வெறுப்பும் கூட இவர்மீது மக்களுக்குண்டு என்றும் கருதப்படுகிறது. பொருளாதார வளமுள்ளவர்களதும், வணிகப்பொருளாதார சக்திகளினதும் ஆதரவுக்குரியவர்.
சஜித் பிரேமதாஸ : நாடு முற்றிலும் பொருளாதார பலமிழந்து, தலைமைத்துவமும் இல்லாதிருந்த நிலையில், நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்கும் நம்பிக்கையை, உலக நாடுகளிடத்திலும், உள்ளூர் மக்களிடமும் ஏற்படுத்த முடியாத அரசியற் தலைவர். மக்கள் மீது வரித்தொகைச் சுமையை குறைக்க வேண்டும் எனக் கூறினாலும், நாட்டின் பொருளாதாரப் புணரமைப்புகளில் எவ்வாறு செயற்படுவார் எனும் நம்பிக்கையைத் தரமுடியாதவராகவே இருக்கின்றார். ரனில், மஹிந்த அரசுகளால் வெறுப்புற்றிருக்கும் நடுத்தரவர்க்கப் பெரும்பான்மை மக்களினதும், அரசியல் மாற்றம் வேண்டுபவர்கள் பலரின் விருப்பத்துக்கு உரியவராகவும் உள்ளார் என்கின்றனர்.
அனுர குமார திசாநாயக்க: இடதுசாரி கொள்கைகளைக் கடைபிடிக்கும் இவர், தனியார்மயமாக்கலை எதிர்த்து, சமபங்கு பொருளாதார முறைமைக்கு ஆதரவு தெரிவிக்கிறார். நாட்டின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கும், தொழில் நெருக்கடிகளுக்கும் காரணம், பெரு முதலாளித்துவமே எனும், பெரும்பான்மைச் சமூகத்தின் உழைக்கும் மக்களுடைய நம்பிக்கைக்குரியவராக இருக்கும் இவரை, அதேசமூகத்தின் உயர்குடிகளோ, இலங்கை மீது தங்கள் அதிகாரத்தின் நிழல்களை வைத்திருக்க விரும்பும் பிராந்திய அரசியற் சக்திகளோ, ஆட்சியதிகாரத்திற்கு அவர் வருவதை விரும்புவார்களா என்பது யதார்த்தம்.
நாமல் ராஜபக்ஷ : அரசியலில் மிக இளையவரான இவரின் ஒரே தகுதியாகச் சுட்டப்படுவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் மகன் என்பது மட்டுமே. இலங்கை அரசியலில் தமது இருப்பினை அடையாளப்படுத்துவதற்காக ராஜபக்ஷ குழும்பத்தின் சார்பில் களமிறக்கப்பட்டவர். தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தாலும், தேவைப்படின் தமது வாக்கு பலத்தை தமக்குச் சாதகமான ஒருவருக்காக மாற்றிடவோ அல்லது மறுத்திடவோ செய்யத் தகுந்த தடத்தில் இருவப்பவர்.
அரியநேந்திரன் : தமிழ் மக்களின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர். வெற்றி என்பதைக் குறிக்காது, வெறும் அடையாளமாகவே நிறுத்தப்பட்டிருக்கின்றார் என்பதனால், அவரை நிறுத்தியவர்களில் பலராலும் கூட மறக்கப்பட்டவர்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு ?
முதல் நிலையில் இருக்கும் மூன்று வேட்பாளர்களான ரணில், சஜித், அநுரா, ஆகியோரில் ஒருவரே இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளதெனிலும், வெற்றி குறித்து பல குழப்பமான அல்லது தெளிவற்ற கணிப்புகளே இம்முறை தேர்தலில் உள்ளன. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி சீரமைப்புகளுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்கிறார், வெளிநாட்டு நல்லுறவு எனச் சொல்லப்பட்டாலும், மக்கள் ஆதரவு குறைவாக உள்ளதாகவே கருதப்படுகிறது. சஜித் பிரேமதாஸாவின் எதிர்கட்சி அணியின் ஆதரவு பலமாக எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக முஸ்லீம் மக்களில் பலரது ஆதரவும் இவருக்கு கிடைக்குமெனச் சொல்கின்றார்கள். இந்த இரு தேசியகட்சிகளின் மீதும் அதிருப்தியுற்றிருக்கும் மக்கள் அநுராவின் பின்னால் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆனாலும் இவை எதுவுமே முழுமையான தேர்தல் வெற்றியைச் சுட்டுவதாக இல்லை.
இவ்வாறான குழப்பமான நிலையில், சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒரு பலமான சக்தியாக மாற்றிடக் கூடிய வல்லமையற்ற தலைவர்ளாகவும், உதிரிகளாகவுமே தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த நிலையினைத் தமிழ்மக்களுக்குள் தோற்றுவிப்பதில் பெரும்பங்காற்றிய பெரும்பான்மைச் சமூகத்துக்குள்ளும் இன்று அதே நிலை தோன்றியிருப்பதுதான் காலம் கற்றுந் தரும் கசப்பான பாடம்.
இந் நிலையைத் தோற்றுவித்த, புவிசார் அரசியல் பின் நகர்வுகளில் மறைந்திருக்கும் நலன்களில், இலங்கையின் தேசிய இன மக்கள் எவரும், தமது அரசியலை சுதந்திரமாகத் தீர்மானிக்க முடியாத, ' இருக்கு ஆனா இல்லை' எனும் பரிதாப நிலையே. ஒரு காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு மட்டும் இருந்த நிலை, இன்று இலங்கைத் தேசிய இனங்கள் அனைத்துக்குமான பொதுமையாகியிருக்கிறது. ஒருவகையில் வாக்கிருந்த போதும், அரசியல் சுய நிர்ணயத்தை தீர்மானிக்கும் வக்கற்ற தேர்தல்... !