பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம் என்பது இன்றைய உலக உணவுப் பாதுகாப்பு நாளின் கருப்பொருளாகின்றது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு என்பன இணைந்து, 2018ல் ஆண்டுதோறும் ஜூன் 7ம் திகதி உலக உணவு பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்பதை அறிமுகம் செய்தன.
உலகளாவிய ரீதியில், உணவுப்பழக்கங்கள், நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு, மேலாண்மை நுட்பங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமகாலத்தில் துரித உணவுகளால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் பற்றிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், பாதுகாப்பான உணவுகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இத் தினம் முக்கியத்துவத் பெறுகின்றது.
ஆரோக்கியம் தரும் உணவினை உற்பத்தி செய்வது முதல், உணவுப் பற்றாக்குறை இருக்கும் வேளையில், உணவினை பாதுகாப்பாகச் சேமித்து வைப்பது வரையிலான விழிப்புணர்வினையும், கைவிடப்பட்ட பாரம்பரியம் மிக்க பாதுகாப்பான சேமிப்பு முறைகள் குறித்தும் கவனம் செலுத்தவும் இன்றைய நாள் வலியுறுத்துகிறது.
தமிழர்களின் பாரம்பரியமான உணவுப் பழக்கமும், பாதுகாப்பான சேமிப்பு முறைகளும் கூட, சமகாலத்தில் மிகவும் மாற்றம்பெற்றுள்ளன. அதேவேளை பாதுகாப்பான இயற்கை உணவு என்னும் வழிமுறைக்குள்ளும் வர்த்தக நலன்கள் உட்புகுந்து வருவதும் கவலைக்குரியதாகின்றது.
இவை தொடர்பான சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், உருவாக்கப்பெற்ற இன்றைய நாளில், ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவினை உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், உறுதிகொள்ள வேண்டும்.