பாட்டி வடை சுட்ட கதை தெரியாத தமிழ்ச் சமூகம் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு சிறு வயது முதலே வளர்ப்பினூடு சொல்லப்படும் வடைக் கதைகள் பலவுண்டு.
காக்க நரி வடைக்கதை முதல், சந்திரனில் வடை சுடும் பாட்டிக் கதை வரை, காலங் காலமாகச் சொல்லப்படும் கதைகள் அவை. சமகாலத்தில் அவை அருகிவிட்ட போதும், முற்றாக வழக்கொழிந்து போனவை எனச் சொல்ல முடியா வகையில் ஆங்காங்கே யாரோ ணருவர் சொல்லிக் கொண்டிருக்கும் கதைகள் அவை.
அத்தகைய சமூகத்துக்குள் இருந்து, இந்த வடைக்கதைகள் கேட்டு வளர்ந்திருக்கக் கூடிய இளைஞர்கள், புதிதாக ஒரு வடைக் கதை பாடலாக உருவாக்கியிருக்கின்றார்கள். அந்தப் பாடலுக்குள் இலங்கை அரசியல் வரலாற்றை அழகாகக் பதிவும் செய்திருக்கிறார்கள்.
1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, கொழும்புத் துறைமுகநகர் வரையிலான அரசியல் நகர்வுகளை, இனவன் முறைகளை கதைப்பாடலாகவும், கானொலிப் பாடலாகவும் ஆக்கியிருக்கிறார்கள். நம் எல்லோர்க்கும் தெரிந்த அரசியல்களம்தான். ஆனால் அதனை ஒரு கலை வடிவமாக ஆக்கியிருக்கும் அழகியில் அற்புதமான ஒரு அனுபவத்தைத் தருகிறது.
பூவன் மதீசனின் இயல்பான பாடல்வரிகளிலும், மென்னிசையிலும், அரசியற் தெளிவும், திறமையும் மிக்க ஈழத்தின் சிறந்த சொல்லிசைக் கலைஞன் 'சுஜித் ஜீ ' யின் குரலில் நாம் காதுகளுக்குள் கச்சிதமாகக் கதை சொல்கிறது வடைப்பாடல்.
அரசியற் களங்களை, பொருளாதார விடயங்களை, அழகியலான கலைப்படப்பாக மாற்ற அசாத்தியத் திறமை வேண்டும். சுவிற்சர்லாந்தின் விமானச் சேவையான 'சுவிஸ் எயார்ஸ் ' நிறுவனத்தின் வீழ்ச்சியை, அதன் பின்னால் இருந்த அரசியல்கள், பெருஞ்செல்வந்தர்களின் இறுமாப்புக்கள், சதாரண மக்களது நாட்டின் மீதான நன்மதிப்பு, என்பவற்றை 'Grounding' அழகான சினிமாவாக திரையில் கண்டபோது, ஒரு மிகப்பெரிய செல்வந்த நாட்டின் இயலாமையை கண்முன் காண முடிந்தது.
பூவன் மதீசன் சுஜித்ஜீ கூட்டணியில் உருவாகஜியிருக்கும் இந்த வடைப்பாடலைக் காண்கையில் அத்தகைய உணர்வினைப் பெற முடிந்தது. சாதாரணமான காட்சிகளிலும், வரைகலையிலும் சொல்லப்பட்டிருக்கும் படிமங்கள், சொல்லும் பின்கதைகளை உணரவும், ரசிக்கவும் முடிகிறது.
பாடலில் வரும் சகோதரர்களின் பெயர்கள், கைகளில் கட்டப்பட்டிருக்கும் நூல்கள்கள், சிறுபாண்மை, பெரும்பாண்மை உவமை, இலண்டன் பாட்டி, சின்ன வடை அதுவும் ஒட்டை வடை, சகோதரச் சண்டைக்குள் காட்;டப்படும் பிற்காட்சியில் தெரியும். யாழ் நூலகம், அறிவார்ந்த ஒரு சமூகத்தின் வலி, மற்றும் இழப்பு, எனப் பலவற்றைச் சொல்கின்றன. தெரிந்த கதைதான் எனினும், புதிதாகக் கேட்கும் உணர்வினைத் தருகின்றது.
தென்னிந்தியச் சினிமாவின் தாக்கத்தில் உருவாகும் ஈழத்துப்படைப்புக்கள், ஈழக்கதைக் களங்களை வர்த்தக உத்தி உள்நோக்குடன் உருவாகும் இந்தியப்படைப்புக்கள் என்பவற்கு மத்தியில், இந்த வடைப்பாடல் பெரும் ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது. ஆக்கத்தில் பங்கொண்ட அத்தனை பேரையும் பாராட்டி மகிழலாம். அதற்கு ஒரு தரம் பாடலைப் பார்த்து விடுங்கள் !
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்