">கொரோனாவுக்கு முன் நடந்த விருது விழா நிகழ்சி அது. இயக்குநர் இமயம் பாரதிராஜா புதுமுக நடிகர் ஒருவருக்கு விருது வழங்கி அந்த நடிகரை பாராட்டினார். “நம்மிடையே சிவாஜி போன்ற நடிப்பு மேதைகள் இருந்தார்கள். ஆனாலும் மிகைநடிப்பின் காலம் போய்விட்டது. நடிப்பதே தெரியாமல் நடிக்க வேண்டும்.
அத்தகைய நடிகர்களை நான் பெங்காலி படங்களில் பார்க்கிறேன்” என்று பேசினார் பாரதிராஜா. உண்மையில்சிறந்த நடிகர்களைத் தேடி வங்காளம் வரைச் செல்லவேண்டியதில்லை. கைக்கெட்டும் தூரத்தில் கேரளத்தில் அதிகம் இருக்கிறார். இன்று ஃபகத் ஃபாசிலுக்கு இணையாக இயல்பான ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம். அதேபோல பெண் நடிகர்களில் ‘பூ’, ‘மரியான்’ படங்களில் நடித்த பார்வதியைக் கூற வேண்டும்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘ஆணும் பெண்ணும்’ என்ற மூன்று கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி படத்தில் ‘ராச்சியம்மா’ என்ற கிராமத்துப் பெண்ணாக அப்படியே கதாபாத்திரத்துடன் கரைந்துபோயிருந்தார் பார்வதி. அறுபதுகளின் காலகட்டத்தில் மலையக கேரளத்தின் கிராமம் ஒன்றில் நடக்கும் கதை. தேயிலைத் தோட்டம் ஒன்றில் அலுவலராக பணிபுரிய அந்த மலைக் கிராமத்துக்கு வருகிறான் குட்டிகிருஷ்ணன். அவனுக்கும் அக்கிராமத்து வீடுகளுக்கு எருமைப் பால் விநியோகம் செய்யும் ராச்சியம்மா என்கிற பெண்ணுக்கும் இடையே முகிழும் நெகிழ்வான உறவை இந்தப்படம் பேசுகிறது.
ஏற்கும் கதாபாத்திரம் எதுவென்றாலும் அதில் கரைந்துபோகும் பார்வதி திருவொத்து, ராச்சியம்மாவிலும் அதை ரகளையாய் நிகழ்த்தி இருக்கிறார். மும்மொழி கலப்பிலான உச்சரிப்பு, பால் மனதுடன் அன்பையே அதிகம் பரிமாறுவது, காதல் தேர்வில் முடிவெடுக்க மறுகுவது என ராச்சியம்மாவை அந்தக் காலகட்டத்தின் பெண்ணாக நம் முன் நிறுத்திவிட்டார் இந்த நவீனயுகத்தின் நடிகரான பார்வதி. ‘பூ’, ‘மரியான்’ ‘பெங்களூர் டேஸ்’ படங்களில் அவரது நடிப்பை ரசிகர்கள் உச்சி முகர்ந்திருக்கிறார்கள் என்றாலும் மலையாளத்தில் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலுமே பார்வதியைப் பார்க்கவே முடியாது. கதாபாத்திரம் மட்டும்தான் நம் முன்னால் நடமாடும்.
பார்வதியின் தாய், தந்தையர் இருவரும் வழக்கறிஞர்கள். இருவருமே கலையுள்ளம் படைத்தவர்கள். பார்வதிக்கு மோகினியாட்டம், பரதநாட்டியம் பயிற்றுவித்தார்கள். எல்லாவற்றையும் விட உயர்ந்தது, அவரை ஒரு சுயமரியாதையாளராகப் பழக்கினார்கள். படப்பிடிப்புத் தளத்திலிருந்து தான் கண்ணியத்துடன் திரும்ப வேண்டும் என்பதில் பார்வதி உறுதியாக இருந்தார். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளுக்கு எதிராக கொதிப்பவர். அதேவேளை இளகிய உள்ளம் படைத்தவர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் ஒரு சம்பவம். அங்கே பிரபல சொல்லிசைக் கலைஞராக புகழ்பெற்றிருப்பவர் ஹிரந்தரதாஸ் முரளி. கேரளத்தில் சாதி ஒழிப்பை அவரது பாடல்கள் மையப்படுத்தின. குரலற்றவர்களின் குரலாக அவர்களது பாடல்கள் ஒலித்தன. கடந்த மாதம் அவர் மீது சில பெண்கள் #மீடூ புகார்களை எழுப்பினார்கள். முரளி தான் செய்த தவறுகளை மறைக்கவோ, தன்னை நியாயப்படுத்தவோ விரும்பவில்லை. வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அதற்காக தான் அவமானப்படுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பார்வதி அவரது பதிவுக்கு லைக் போட்டது பெரும் சர்ச்சையானது. ஒரு மன்னிப்பால் செய்த பிழையை களைய முடியாது என பார்வதியை பெண்ணியவாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அது அவருக்கு பெரும் நெருக்கடியாக மாறியதில் அந்த லைக்கை பார்வதி திரும்பப் பெற்றது கேரள ஊடகங்களில் பெரும் செய்தியானது.
பார்வதியின் உணர்வுபூர்வமான இந்த குணநலன் அவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் பிரதிபலிப்பதைப் பார்க்க முடியும். முகத்தில் எப்போதும் மர்மமான துயரம் ஒன்று நிறைந்திருக்கும். இந்தியப் பெண்களின் குறியீடாக அமைந்தது அவருடைய முகம். ஆனாலும் அந்த கண்கள், பார்வதி எனும் அன்பும் கண்ணியமும் நிறைந்த மனுஷியின் ஆன்மாவைத் தரிசிக்கும் நுழைவாயிலாக அமைந்திருந்தன. வெளிநாட்டில் பணியாற்றிய கேரளச் செவிலியர் கடத்தப்பட்ட விமானத்தில் சிக்கிகொண்டதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘டேக் ஆஃப்’ படத்தில், பெண்கள் தூக்கி சுமக்கும் அத்தனை பாரங்களோடும், எப்படி தங்கள் கணவரை, குழந்தையை நேசிக்கிறார்கள், இக்கட்டான தருணங்களிலிருந்து எப்படி அவர்களை மீட்கிறார்கள் என்பதை மிகத் துல்லியமாக வெளிப்படுத்திக்க்காட்டி அற்புத நடிப்பைத் தந்திருந்தார் பார்வதி.
என்னுநின்டே மொய்தீன், பேங்களூர் டேய்ஸ், வைரஸ், சார்லி, கூடே, நோட்புக், அவுட் ஆஃப் சிலபஸ் ஆரம்பித்து தற்போது ராச்சியம்மாவாக நடித்திருக்கும் ‘ஆணும் பெண்ணும்’ வரை இப்படி பார்வதியின் சிறந்த நடிப்புப் பங்களிப்புகளை கூறிக்கொண்டே போகலாம். தமிழில் சசி இயக்கிய பூ படம் பார்வதியை திறம்பட பயன்படுத்தியிருந்தது. கமல்ஹாசனின் உத்தமவில்லனில் அவர் வீணடிக்கப்பட்டிருந்தார். தமிழில் பார்வதி போன்ற நடிப்புக் கலைஞர்களைவிட கவர்ச்சியை அதிகமாக நம்பும் பெண் நடிகர்களுக்கே சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். எனினும் பார்வதி போன்ற கலைஞர்கள் என்றைக்கும் இருப்பார்கள். கவர்ச்சியை முதலீடாக வைப்பவர்கள் கலைந்து செல்லும் மேகங்களாக நகர்ந்து சென்றுவிடுவார்கள். வரலாற்றிலும் அவர்களால் இடம்பிடிக்கமுடியாது. பார்வதியை சினிமா வரலாறு அவ்வாறு கடந்து செல்ல வழியே இல்லை.
- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை