தாய்தமிழகத்தில் கோவில் நகரம் என கும்பகோணத்ததை அழைப்பார்கள். ஈழத்தில் யாழ்ப்பாணம் முழுவதுமே கோவில் நகரம்தான். போருக்குப் பிந்தைய யாழ்ப்பாணத்தில் திரும்பும் திசையெங்கும் வானுயர் கோபுரங்கள் வண்ணமுற எழுந்து நிற்கின்றன.
இத்தகைய யாழ்ப்பாணத்தில் இன்றளவும் கோவில் குடிகள் நிறைந்த கிராமங்களாக, புதுமையிலும் பழமைகள் மாறாது, மறவாதிருக்கும் ஒரு சில ஊர்களில் இணுவில் முக்கியமானது. சிவாச்சாரியார்கள் முதல் மங்களவாத்தியக் கலைஞர்கள் வரையிலான பல்வேறு கோவிற்குடிகளும், பல்மொழி அறிஞர்களும் நிறைந்து வாழும் கிராமம் இது.
யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்லும் கிராமங்களில் இணுவிலும் ஒழகிய ஒரு செம்மண் கிராமம். நெடுஞ்சாலைக்குக் கிழக்கேயும் மேற்கேயும், விரிந்து கிடக்கும் விளைநிலங்களில் வளர்ந்து நிற்பவை மரவள்ளியும், புகையிலையும், மற்றும் சிறுதானியப் பயிர்களும் மட்டுமல்ல, சைவமும், தமிழும், இசையும், கலையும், நிதியமும், நித்திய அனுஷ்டானங்களும் தான்.
காங்கேசன்துறைவீதியில், கோவில் வாசல் எனும் தரிப்பிடத்திலிருந்து கிழக்கு நோக்கின் காரைக்கால் சிவனையும், சிவகாமி அம்மனையும், காணலாம். மேற் நோக்கி நகர்ந்தால் இணுவைக் கந்தனையும், மடத்துவாசல் பிள்ளையார் என மக்கள் விரும்பி அழைக்கும் பரராஜசேகரப் பிள்ளையாரையும், செகராஜசேகர மன்னன் ஸ்தாபித்த செகராஜசேகரப் பிள்ளையாரையும் தரிசிக்கலாம். இந்தக் கோவில் நகரத்தில் அருளாட்சி செய்து வரும் பரராஜசேகரப்பிள்ளையாருக்கு வரும் 06ந் திகதி மகா கும்பாபிஷேகம்.
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த பரராஜசேகர மன்னனினால் ஸ்தாபிதம் செய்யப்பெற்ற, பரராஜசேகரப்பிள்ளையார், இக்கிராமத்து மக்களின் குல தெய்வம். நாற்புறமும் ராஜகோபுரங்களுடன் அழகிய சித்திரக் கோவிலாக எழுந்து நிற்கும் மடத்துவாசல் பிள்ளையாருக்கு மேலும் பல ஆகமச் சிறப்புக்களும் வரலாற்றுச் சிறப்புக்களும் உண்டு. 1800 களின் பிற்பகுதியிலேயே மஹோற்சவம் கண்டிருப்பதை இந்த ஆலயத்தின் செப்புப் பதிவேடுகள் பதிவு செய்கின்றன.
ஒரு கோவிலின் சிறப்பில் ஆகமரீதியான மூர்த்தி, தலம், தீர்த்தம், என்பன முக்கியமானது. ஜோதிடத்தில் ஸ்தானம் முக்கியமானது போல், ஆலயங்களிலும் ஸ்தானம், ஸ்தானிகம் என்பனவும் தெய்வசாந்நியத்திற்கு முக்கியமானது எனக் கருதலாம்.
இந்த ஆலயத்தின் நீண்ட பரம்பரை ஸ்தானிகர்களில் ஒருவரான சிவஶ்ரீ. சதாசிவ ஜயர் காலத்தில், அவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற மூலவர், இப்போது 9வது மகா கும்பாபிஷேகம் காண்கின்றார். இன்றுவரை அவரது பிரதிஷ்டா ஸ்தானம் நகர்த்தப்படாமலே திருப்பணிகளும், கும்பாபிஷேகங்களும், நிகழ்ந்து வருகின்றன. இலங்கையில் அருளும், பெருமையும், நிறைந்த ஆலயங்கள் பலவற்றிலும் இன்றளவும் இந்த மரபு பேணப்படுகிறது. அதற்கான அடிப்படையினைப் பேணுவதில் அக்கறை மிக்கவர்களாக உள்ளனர் இந்த ஆலய ஸ்தானிகர்களான குரு பரம்பரையினரும், அடியவர்களும். அந்த மரபின் மீதான நம்பிக்கையின் வழியேதான், அனைவரும் ஐங்கரனின் அருளை அனு தினமும் பெற்றும் வருகின்றார்கள் எனலாம்.
அன்மையில் அமரத்துவம் பெற்ற ஆலயத்தின் முன்னைய ஸ்தானிகர் ஸ்வர்கஶ்ரீ: வை. சோமாஸ்ந்தக் குருக்களின் புதல்வர்கள், சிவஶ்ரீ: சோ. அரவிந்தக் குருக்கள், சிவஶ்ரீ: சோ.பிரசன்னாக் குருக்கள், தமது பரம்பரை வழியான பக்தியுடனும், பவ்வியத்துடனும் கும்பாபிஷேக கிரிகைகளை ஒருங்கமைக்க, இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் சிவஶ்ரீ; தாணு. மகாதேவக் குருக்கள் நெறிப்படுத்தலில், சிவஶ்ரீ: சத்ய. சிவகுமாரக் குருக்கள் தலைமையில் எதிர்வரும் 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முன்றலில் சாதாரணமான நாட்களிலேயே இளைஞர்களும், பெரியவர்களும், இரண்டறக் கலந்து நின்று துதிப்பார்கள். இப்போது மகா கும்பாபிஷேகம் எனும் பெருஞ்சாந்தி. ஊரே ஒன்று கூடித் திரள்கிறது. குறித்த நேரத்தில் வழிபாடுகளும், உற்சவங்களும், நடைபெறும் பரராஜசேகரப் பிள்ளையாரின் திருக்கோல அலங்காரங்கள் தெய்வீகமானவை. அது போன்றே கும்பாபிஷேகக் கிரிகைகளையும், யாகசாலைகளையும், கவினுறும் வண்ணம் அமைத்து வழிபாடியற்றுகிறார்கள்.
காலையும், மாலையும், கோவில் பிரகாரமெங்கும் வேதமந்திரங்களும், ஹோமப்புகையும் இரண்டறக் கலந்துயர்கிறது. இசையும், கலையும், சூழலை நிறைக்கிறது. சித்திர கூடத்தின் சித்திரத்தில் சிவனும் உமையும் சிந்தித்து அருளிய கணங்களின் நாயகனான கணபதியை, தாம் எழுப்பியுள்ள கலைக்கோட்டத்தினுள் கோவில் கொண்டருளிச் செய்ய வேண்டுமென உலகெங்கிலும் நிறைந்திருக்கும் இணுவையின் புதல்வர்கள் இறைஞ்சுகின்றார்கள்.
துள்ளுமத யானை முகத்தோனே
.துன்பமதைத் தீர்க்க வருவோனே
அள்ளிவரும் அருளின் உயர்வாலே
.அன்பருளம் என்றும் உறைவோனே
கள்ளவினை தேய அவர்பாதம்
..கண்டுதொழும் அடியார்க் கெளியோனே
வள்ளலென இணுவை அமர்வோனே
..மண்புகழும் மடத்துப் பிள்ளையாரே ! ( கவி - சிவஶ்ரீ; பா. வசந்தன் குருக்கள் ) எனப் புகழிசை பாடித் தொழுகின்றார்கள். எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி. எப்போதும் எங்கள் ஜங்கரா போற்றி ! என ஏற்றித் தொழுவதில், இணுவையெனும் கோவில் நகரம் கோலாகலம் காண்கிறது.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்.