free website hit counter

Sidebar

இளங்கோ ராமின் இரட்டைப் பாய்சல் !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் முக்கியமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் இளங்கோ ராம். சினிமாத்துறைசார் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர்.   அமைதியான சுபாவமிக்கவர்.  அலாதியான சினிமாக் காதலர். 

இலங்கையின் விளம்பரத்துறையின் பலமான சவால்களுக்கு மத்தியில், தன் திறமையால் அத்துறையில் முன்னிலையில் உள்ளவர். அதற்கும்  மேலாக, இலங்கையின் தமிழ்சினிமா உயர்ச்சி எனும் சிந்தனை மிக்கவர். 

இலங்கையின் யுத்தகாலத்தில் தமிழ்குடும்பங்களது பதுங்குகுழி வாழ்வின்  வலியினைச் சுட்டி இவர் உருவாக்கியிருந்த, 'மௌன விழித்துளிகள்' (Silent Tears) குறும்படம் பல சர்வதேச விருதுகளையும், கவனத்தினையும் பெற்றிருந்தது.  அதன் பின் அவர் இயக்கவிருந்த முழுநீளத் தமிழ் திரைப்படம், அப்போதிருந்த  அரசியற் சூழல்களினால் தள்ளிப் போன நிலையில்,  2023 ல் உருவான அவரது முழு நீளச் சிங்களமொழித் திரைப்படமாக Tentigo  உருவானது.

Tallinn Black Nights Film Festival சர்வதேச திரைப்படவிழாவில், நடுவர்களின் சிறப்புத் தேர்வு விருதினை Tentigo வென்றது முதல், பல சர்வதேச திரைப்படவிழாக்களிலும் விருதகளை வென்று, திரைத்துறையில் பலரது கவனத்தினையும் பெற்றது. இதனால் , டார்க் காமெடி வகை  நகைச்சுவைப்படமான  Tentigo பல மொழிகளிலும் தயாரிப்பதற்கான காப்புரியையும்   பெற்றது.    Tentigo திரைப்படம் , சுவிற்சர்லாந்தின் பிறீபூர்க் சர்வதேச திரைப்படவிழாவின் 39 பதிப்பில், வரும், மார்ச் 22 சனிக்கிழமை மற்றும் மார்ச் 25 செவ்வாய்கிழமை திரையிடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில்   இந்தித் திரை உலகின் அதி முக்கிய இயக்குனர்களில் ஒருவரான Hansal Mehta அவர்கள் இத்திரைப்படத்தை இந்தியில் இயக்குகின்றார்.  தமிழ்மொழித் தயாரிப்புக்கான உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  Karthik Subbaraj இன் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் பெற்று, " பெருசு" எனும் பெயரில் தமிழ்ப்படமாகத் தயாரிக்க, இளங்கோ ராம் அதனை இயக்கியுள்ளார். இளங்கோவின் இயக்கத்தில் உருவான படைப்புக்களாக , இலங்கையில் சிங்களமொழியில்  Tentigo வாகவும், தமிழகத்தில் " பெருசு " எனவும், இன்றையநாளில் திரைக்கு வருகிறது. 

Tentigo திரைப்படத்தின் எழுத்துப் பிரதி முதல்,  முழுத் திரைப் படமாகப் பார்த்தவகையில்,  அது சிங்களத் திரைப்பட இரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என்பதுடன், சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் பெறும் என்பதும் நாம் ஊகித்திருந்ததே.  ஆனால் இதனை தமிழ்பட இரசிகர்களின் இரசனைக்குரிய  வகையில் "பெருசு" ஒரு நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியிருப்பதைப் பார்த்த போது, நம் மகிழ்ச்சி இரட்டிப்பானது.  ஒரு சராசரியான குடும்பத்தில் நிகழும், ஒரு பெரியவரின் திடீர் மரணத்தின் பின்னால் இருக்கக் கூடிய எதிர்பாராத ஒரு சம்பவம், தமிழக இரசிகர்களுக்கு புதிய நகைச்சுவை அனுபவத்தை நிச்சயம்  கொடுக்கும். 

ஒரு தமிழ் இளைய இயக்குனரான இளங்கோவின் அத்துனை முயற்சிகளுக்கும் பின்புலமாகவும், பிரதான தயாரிப்பாளராகவும் இருப்பவர், அவரது துணைவி ஹிரண்யா பெரேரா. சினிமாவை மிக மிக நேசிக்கும் இந்தத் தம்பதிகளின் இந்தப் புதிய பயணம், இலங்கையிலும், தமிழகத்திலும், ஒரே நாளில் திரையேறுவது மகிழ்ச்சிக்குரியது. இவை பெறும் வெற்றிகள் இளங்கோவின் சினிமா மீதான நேசிப்பினையும், படைப்பாற்றலையும், மேலும் வளர்ச்சியுறச் செய்யும். 

 இலங்கையின் தமிழ்சினிமா உயர்ச்சி எனும் இளங்கோவின் சிந்தனையைப் பிரதிபலிக்கும் முழுமையான படைப்பாக இல்லாவிடினும்,  இலங்கையிலிருந்து ஏதுமற்ற ஏதிலிகளாக எல்லைகள் கடந்த தமிழர் என்ற நிலைமாறி, சிங்களம், தமிழ் என இரு மொழிகளில் மட்டுமல்லாது, எல்லைகள் தாண்டி ஒரு தமிழ்ப் படைப்பாளியின் தடங்கள் பதிவது தமிழர்களுக்கான பெருமிதம். அதனால் இயக்குனர் இளங்கோ ராமின் இரட்டைப் பாய்சல் இது என்பேன் !

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula