free website hit counter

அண்ணாமலையும் இலங்கை அரசியல் உரைகளும்..!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் அரசியற் குழப்பங்களும், பொருளாதார நெருக்கடிகளும், தோன்றியுள்ள கால கட்டத்தில், இம்மாத முற்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார், தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை.

இலங்கையின் மத்திய பிரதேச மலையகத் தமிழர்களின் அரசியற் பிரதிநிதித்துவக் கட்சிகளின் ஒன்றான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மேதின நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர், அத்தோடு தனது பயணத்தைச் சுருக்கிக் கொள்ளவில்லை. குறுகிய கால விஜயமாக இருந்த போதும், இலங்கையின் வடக்கு முதல் தெற்கு வரை வேகமாகப் பயணித்திருக்கின்றார். ஆனால் அவரது பயணம் வெறும் சுற்றுப் பயணம் அல்ல என்பதை அவரது உரைகள் ஒவ்வொன்றும் உள்ளுணர்த்துகின்றன.

தமிழகத்தில் இருந்து அரசியற் தலைவர்கள் வருவதும், கழுத்து நரம்புகள் புடைத்திட, உரத்த குரலில் உணர்ச்சியுறு உரைகள் ஆற்றுவதும் வழமைதான். ஆனால் அண்ணாமலையின் வருகையையும், அவரது உரைகளையும், இந்த வழக்கிற்குள் சேர்த்துவிட முடியாதுள்ளது. அதற்குக் காரணம், அவர் பயணம் செய்த கால முக்கியத்துவம் மட்டுமல்ல, ஆற்றிய உரைகளின் கருத்து முக்கியத்துவமும் ஆகும். அண்ணாமலை அவசரமாகப் பயணித்த போதும், அறிவார்ந்து பயணித்திருக்கின்றார் என்பதை, இணையச் சேகரிப்புக்களில் அவரது ஒவ்வொரு உரைகளையும் காணும் போதும், கேட்கும் போதும் உணரமுடிகிறது.

மலையகத்தில் அவர் ஆற்றிய உரை முதல், யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரைகள் வரையிலும், மிகநிதானமாக, தேவையான முற்குறிப்புக்களுடன், பொருத்தமான சொற் தேர்வுகளுடன் ஆற்றியிருப்பதை அவதானிக்க முடிகிறது. அங்கு அவர் சந்தித்த மக்கள் மற்றும் தலைவர்கள் ஒவ்வொருவரது கருத்தினையும், உள்ளத்தில் பதிவு செய்து, உரிய இடங்களில், அந்த இடங்களுக்கு உகந்த முறையில் பேசியிருக்கின்றார். குறிப்பாக தமிழ்மக்கள் மத்தியில் இருந்த இந்தியா குறித்த அதிருப்தியைக் களையும் விதமாக, இந்திய அரசின் மீதும், பிரதமர் மோடி மீதுமான நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையாக, களம் பார்த்து, காலம் பார்த்து, அளந்து பேசியிருக்கின்றார். வாக்குறுதிகளை அள்ளி வீசாது, முயற்சிகளை முன்னிறுத்தி, நம்பிக்கையை வளர்த்திருக்கின்றார். அந்த வகையில் அண்ணாமலையின் இலங்கை விஜயம், இந்திய அரசுக்கு, இலங்கைக்கான நகர்வில் மற்றுமொரு மைல்கல் எனலாம்.

இதன் பின்னதாக, தமிழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அவரது உரை, இலங்கைப் பயணத்தில் அவர் கற்றதையும், பெற்றதையும், கலந்து ஆற்றிய உரையாக இருக்கிறது. "சிங்களவன் வெட்டினான், கொன்றான், கற்பழித்தான்" எனக் கதறிக் குரல் எழுப்பாமல், அமைதியாக விகிதாசாரத் தேர்தல் முறையாலும், தமிழர் கட்சிகளின் உள்குத்து வெட்டுக்களாலும், சிறுபாண்மை மக்கள் சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பதை, ஈழப்பிரச்சினையில் நிறைந்துள்ள சிக்கல்களை வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார். தமிழகக் கடலோர மீனவர்களுக்கும், யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இருக்கக் கூடிய முரண்கள், முறுகல்கள் என்பவை குறித்தும் கச்சதீவு விவகாரம் பற்றியும், புரிதலோடு பேசுகின்றார். இந்தப் புரிதல்கள் தமிழகத்தில் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதும் நிச்சயம்.

தமிழகத்தில் அவர்மீதான விமர்சனங்கள் அளவு கடந்து இருக்கின்றன. ஆனால் அண்ணாமலையின் இலங்கை விஜயமும், அவரது உரைகளும், இலங்கை இந்திய அரசியலில், நட்புறவில், பிராந்திய அரசியலில், ஆற்றக் கூடிய பங்கு, ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் என்பது ஏதுமில்லை எனக் கடந்து விடமுடியாது என்றே கருதத் தோன்றுகின்றது. பார்க்கலாம்....

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula