அரச பயங்கரவாதம் எனும் சொல்லாடல் இலங்கை அரசியலில் புதிதானதல்ல. ஆனால் அது எப்போதும் குறித்த சில இலக்குகளையே இதுவரை தாக்கி வந்திருக்கிறது. சிறுபாண்மைச் சமுகங்களே இலக்காகி இருந்துள்ளன. ஆனால் ( 09.05.2022 ) நேற்றைய நாளில் அந்த இலக்கு சொந்தப் பெரும்பாண்மைச் சமூகத்தையே குறிபார்த்திருக்கிறது.
அதனால் ஏற்பட்ட பெருங்கோபத்தில் மீண்டும் பற்றி எரிகிறது இலங்கை. இம்முறை எய்தவர்கள் பக்கமே அம்பு திரும்பியிருக்கிறது என்பது ஒரு மாற்றமே. ஆனால் இந்த மாற்றம் அறிவு பூர்வமானதா ? உணர்ச்சி பூர்வமானதா? என்பதில் இருக்கிறது இலங்கையின் எதிர்கால நம்பிக்கை. சில நாட்களில் கோபம் தணிந்துவிடும், நெருப்பும் அணைந்துவிடும். ஆனால் வாழ்வும் அதற்கான நம்பிக்கைகளும் முக்கியமானவை.
துரதிஷ்டவசமாக அந்த நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறிவிடும் சூழலும் உள்ளதைக் காணமுடிகிறது. பிரதமருள்ளிட்ட அமைச்சர்கள் விலகியுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சியின் கீழ் தற்போது நாட்டின் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி முன்னாள் இராணுவ அதிகாரி. இந்நிலையில் தற்போதைய பிரச்சனைகளை அவர் அரசியல் ரீதியாக அணுகுவாரா ? அல்லது இராணுவரீதியாக அணுகுவாரா என்பது பெரும் கேள்விக்குரியதே. இதனை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவும் இராணுவ ஆட்சி தோன்றும் அபாயமுள்ளது என எச்சரித்துள்ளார். ஆனால் அவ்வாறு இராணுவ ஆட்சி ஒன்றுக்கு ஆட்சிஅதிகாரம் நகர்ந்தால், ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கும் நாட்டின் நிலையும், மக்களின் வாழ்வாதாரமும் மேலும் கவலைக்குரியதாகிவிடும்.
இவ்வாறான நிலையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும், சட்டத்துறையும், பாதுகாப்புத்துறையும், நாட்டு மக்களனைவரது பாதுகாப்பினையும் சுதந்திரத்தையும் பாதுகாத்து, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தோற்றுவிக்கும் பெரும் பொறுப்பிலுள்ளன. அரச பயங்கரவாதம் என்னும் அராஜகத்தை இல்லாதொழிக்கும் அறம் சார்ந்த கடமை அவர்களுக்கு உண்டு. உணர்ச்சிகரமான அரசியலை முன்னெடுப்பது எத்துணை ஆபத்தானது என்பதை நேற்றைய கலவரங்களும், அழிவுகளும், சாட்சியப்படுத்தியுள்ளன. மக்களும் இதனை உணர்வு வயப்பட்ட பெருங்கோபமாக காண்பதினைத் தவிர்த்து, அறிவுபூர்வமானதாக ஆக்கிக் கொள்வதே, அனைவருக்கும் ஆரோக்கியமானதாக அமையும். இல்லையென்றால் இன்னுமொரு தலைவரை வெடிகொழுத்தி, பாற்சோறுண்டு வரவேற்கவும், பின் வழியனுப்பவும், வேண்டிவரலாம்.