free website hit counter

ஆயுதங்கள் விதைத்து....?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யுத்தமும், யுத்தத்தின் வடுக்களும், வலிகளும் எமக்குப் புதிதல்ல. இந்தப் பூவுலகும் அதன் துயர் அறியாததல்ல. ஆனாலும் யுத்தங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

ஆயுதங்களில் அறிவியல் வளர்ச்சியும், அதனால் உருவாகும் புதிய ஆயுதங்களும், அவற்றுக்கான சந்தைகளும், விற்பனைகளும் பெருகிய வண்ணமேயுள்ளன. இவையெல்லாம் அமைதிக்காகவா..?

ஆயுதங்கள் எப்போதும் எதிரியையும் கொல்லும், எடுப்பவனையும் கொல்லும், அதை வைத்திருப்பவன் நலன்சார்ந்து தீர்மானிக்கும் விடயம். இதை ஒன்றும் அறியாத தலைவர்கள் இல்லை இவ்வுலகில். அவ்வாறெனில் இவ்வாறான யுத்தங்களும், இத்தனை ஆயுதங்களின் உருவாக்கமும் ஏனெனில் அவர்கள் அறம்சார்ந்து சிந்திப்பதில்லை என்பதே உண்மை.

உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி இரு மாத காலத்தை நெருங்கிவரும் நிலையில், அங்கே இருநூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனக் கண்ணீர் வடிப்பவர்களும், பல்லாயிரக் கணக்கானவர்கள் பலியாகிவிட்டார்கள் எனப் பரிதவிப்பவர்களும், உண்மையான இரக்கத்தினை, கருணையைக் கொண்டிருக்கின்றார்களா..? எனச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

உருவாக்கப்படும் ஆயுதங்கள் அனைத்தும், விற்கப்படும் போர்த்தளவாடங்கள் அனைத்தும் ஏதோ வேற்றுக்கிரகத்தில் பாவிப்பதற்காக அல்ல. நாம் வாழும் இதே பூமியில் ஏதோ பகுதியில் அது அழிவினைத் தரப் போகின்றது. அங்கே ஆயிரமாயிரம் குழந்தைகளை, மக்களைக் கொன்று குவிக்கப் போகின்றது என்னும் உறுத்தல் இல்லமாலா, மக்களை வெளியயேற்றிவிட்டு வெறும் சூனியப்பிரதேசத்தில் பாவிக்கபடுவதில்லை என்ற உண்மை தெரியாமலா இவையெல்லாம் நடைபெறுகின்றது.

இவற்றையெல்லாம் எண்ணிப் பாரக்கையில், "எங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிக் கூழ்" எனும் மனநிலையையே காணத் தோன்றுகின்றது. அவ்வாறான வேளைகளில் நகைப்புக்கு இடமாகின்றது நாம் பேசும் மனிதநேயம். கேள்விக்குள்ளாகிறது நாம் காணவிரும்பும் பசுமை நிறைந்த பூவுலகு.

மனிதர்கள் பொய்ப்பதுண்டு. மழை தரும் வானம் கூடப் பொய்ப்பதுண்டு. ஆனால் நாம் வாழும் மண் பொய்த்தாகத் தமிழில் ஒருவாசகம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய அபரிமிதமான உண்மை நிறைந்த பூமியில், ஆற்றல் மிகுந்த விளைநிலத்தில் நாம் எதை விதைக்கின்றோமா அதையே அறுவடை செய்யமுடியும். விளைநிலத்தில் போரினை விதைத்தால் பட்டினியைத்தான் அறுவடை செய்யமுடியும்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் உங்கள் ஆயுதங்கள், வற்றாத வளம் நிறைந்த வன்னிநில மக்களை உணவுக்காக கையேந்த வைத்தது. இன்று அதே ஆயதங்கள் ஐரோப்பாவுக்கு உணவுப்பொருட்களை வழங்கிய உக்ரைனிய மக்களை உணவுக்காக கையேந்த வைத்திருப்பதும் நீங்கள் உருவாக்கும் ஆயுதங்கள்தான் என்பது உண்மையிலும் உண்மை. தமிழ்மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிராக  நீட்டப்பட்ட துப்பாக்கிகள், சிங்கள மக்களுக்கு எதிராகவும் திரும்பும்  என்பதை இலங்கையின் சமகாலம் உணர்த்தியுள்ளது.

உலகத் தலைவர்கள் படங்களுக்காக மரங்கள் நடுவதைத் தவிர்த்து மனித மனங்களுக்கான நடுகைகளைத் தொடங்கவேண்டும். போரில்ல உலகு வேண்டும் என்பதைக் கோஷங்களாகச் சொல்வதை விட்டு கொள்கைகளாக நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். யுத்தங்களில் மரணித்த குழந்தைகள், பறிக்கப்பட்ட மனித உயிர்கள் அத்தனையின் பின்னாலும், இரத்தம் தோய்ந்த கையெழுத்துக்களை இட்டவர்கள் சாதாரண மக்களல்ல, நாடுகளின் தலைவர்கள் என்னும் உண்மையை, அவர்கள் உணரவேண்டும்.

ஆயுதங்களை, அகங்காரங்களை விதைத்து, அழிவினை அறுவடை செய்யாது, அன்பினை, ஆக்கத்தின, நல் எண்ணங்களை விதைத்து, நல்லவைகளை, நாளும் பெரு வளர்ச்சியினை இப் பூலகில் அறுவடை செய்வோம். இப்பூலகு எமக்கானது மட்டுமல்ல... எனும் எண்ணத்தினை வலுப்படுத்துவோம். இன்று சர்வதேச பூமி தினம்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula