உயிர்வாழ்தலுக்கான அடிப்படை வாழ்வாதரங்களில் முக்கியமானது உணவு. 2009 மே மாதத்தின் இதே காலப்பகுதியில், முள்ளிவாய்க்கால் எனும் குறும் பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்ட தமிழ்மக்கள் அந்த அடிப்படை ஆதாரத்தை இழந்திருந்த நிலையில், சிறு பகுதி அரிசியில் நீர் மட்டும் சேர்த்து கஞ்சியாகக் காச்சி வழங்கப்பட்டது.
அழுத கண்ணீரிலும், அடங்கிக் கிடந்த நந்திக்கடலில் இருந்து எழுந்து வந்த காற்றிலும் கலந்திருந்த உப்பினில் உவர்ப்பினையும், உணர்வினையும், சேர்த்து, அமிர்தமென உண்ட தமிழ் மக்களின் உயிர்காத்த பெருமைக்குரியது முள்ளிவாய்க்கால் கஞ்சி.
முள்ளிவாய்க்கால் கஞ்சி, தமிழ்மக்களின் துயரத்தின் வலிமிகுந்த அடையாளம். தமிழ்மக்களது இழப்பின் வலி சொல்லும் அந்த அடையாளம், பதின்மூன்று ஆண்டுகள் பயணித்து, இன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில், அரசியல் அதிகாரம் கோலோச்சும் பகுதியில், காலிமுகக் கடற்கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இது ஒரு வரலாற்றின் நீட்சிதான்.
2009ல் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்காக வரிசையில் நிற்கையில், தென்னிலங்கையில் மக்கள் வெற்றிக்காக பாற்சோறு உண்டு மகிழ்ந்திருந்தார்கள். அவ்வாறு பாற்சோறுண்டு மகிழ்ந்திருந்த தென்பகுதி மக்களை, இன்று கஞ்சிக்கு அலைய விட்டிருப்பது யார் ? என்பதை வரலாற்றின் காலம் உணர்த்தியிருக்கும் நிலையில் காலிமுகக் கடற்கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது முள்ளிவாய்க்கால் கஞ்சி.
முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழ்மக்களுக்கானது மட்டுமல்ல இனி அது இலங்கையர்க்கானது என்பதை உணர்த்தி நிற்கின்றன இன்றைய நாட்கள். இதனையே இனிவரும்காலம், இலங்கையர்க்கு மிகக் கடுமையானவையாகவே இருக்கும் என்பதை ஒளிவு மறைவின்றி தன்னுரையில் முன்னறிவித்திருக்கிறார் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. முள்ளிவாய்க்கால் நினைவு கூரலுக்கு இதுவரைகாலமும் இடையூறு செய்த ஆட்சியதிகாரங்கள் இப்போது மௌனமாக இருப்பதன் காரணமும் அதுவே.
ஒரு இனத்தினுடைய இழப்பின் வலி சுமந்த அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வதை, பால்சோறு உண்ணும் பண்டிகையாக மடைமாற்றிவிடாதிருக்க வேண்டியது அவசியம். காலிமுகக் கரையிலும், நந்திக்கடலிலும் சொரியப்பட்ட பூக்கள் இந்து சமுத்திர சாகார அலைகளில் சந்திக்கும் போது, தங்கள் அர்ப்பணிப்புக்கான காரணத்தின் உண்மைதனை ஒன்றெனச் சொல்ல வேண்டும்.