நம் அன்புக்குரிய நட்பு. அருகிருந்த இரசித்த இசையாளன். வர்ண. ராமேஸ்வரன் நாவசைப்பதை, நல்ல தமிழ் பாடுவதை நிறுத்திக் கொண்டான்.
நாமறிந்தவரையில் மூன்று தலைமுறையாக இசையைச் சுவாசிக்கும் குடும்பத்தின் வாரிசு. தாயகத்தை, தமிழ் பாரம்பரியத்தை, தமிழிசையை நேசித்த சுவாசம் நின்று போனது. ஈழத்துக் கலைஞர்கள் எனும் தலைப்பில் 2006 ம் ஆண்டில் வலைப்பதிவில் நாம் எழுதிய வர்ண ராமேஸ்வரன் குறித்த குறிப்புக்களையே, அவருக்கான அஞ்சலிக் குறிப்புக்களாகச் சமர்பித்து நினைவு கூருகின்றோம்.
திருகோணமலையின் தம்பலகாமத்தில் வசித்தபோது, எங்களோடிருந்த அந்தப் பெரியவருக்கு முருகேசர் எனத் தொடங்கும் ஒரு பெயர். என் அப்பாவுடன் மிக நெருக்கமானவர். எனக்கு அவரை ஐயா எனக் கூப்பிட்ட ஞாபகம்தான் இருக்கிறது. தினமும் மாலைவேளைகளில் அப்பாவுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் இசைவடிவங்கள் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பார். அவர்களது உரையாடலில் அம்மாவும். இடையிடையே சேர்ந்து கொள்வார்கள். அப்பாவிற்கு இசைக்கத் தெரியாது ஆனால் ரசிக்கத் தெரியும். அம்மா வயலின் வாசிக்கக் கூடியவர்கள். பெரியவர் சுருதிசேர்த்துப் பாடக்கூடியவர். இவர்களோடு எங்களுக்கு அருகாமையில் வசித்த நாதஸ்வர வித்துவான் பரமசிவமும் சேர்ந்துகொண்ளும் மாலைப்பொழுதுகள் பெரும் இசை அரட்டையாகவே இருக்கும். அப்படி இருந்த நாட்களின் சில இரவுகளில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பில் சங்கீதக்கச்சேரியில் முக்கிய வித்துவான் ஒருவரின் கச்சேரி இடம்பெறுகையில் மீண்டும் அந்த ரசிகர்வட்டம் சேரும். எனக்கும் றேடியோக் கச்சேரி கேட்க ஆசைதான். ஆனால் இலங்கை வானொலியில் கர்நாடக இசைக்கச்சேரி இரவு பத்துமணிக்குப் பின்தான் ஆரம்பமாகும். கச்சேரி ஆரம்பமாகும் போதே நான் நித்திரையாகிவிடுவேன். மறுநாள் முந்தைய இரவுக்கச்சேரி பற்றி ரசிகர்வட்டம் மீண்டும் கதைக்கும்போது, எனக்கு ஏமாற்றம் அழுகையாக வரும். அம்மா அடுத்த கச்சேரி கேட்கலாம் எனச் சமாதானம் சொல்வார்.
காலவோட்டத்தின் பின் யாழ்ப்பாணத்தில், சின்ன வயதில் கேட்க முடியாது போன அந்த வித்துவானின் கச்சேரியைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. என் தோழியொருத்தி, நடன ஆசிரியை. அவளின் மாணவிகளினது நடன நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தாள். நிகழ்ச்சியில் அந்த வித்துவானின் கச்சேரியும் இருந்தது எனக்கு பெருவிருந்து. அவர் பாடப்பாட என்னுள் இனம்புரியா உணர்வொன்று எழுந்தெழுந்து மறைந்தது. ''பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே.. முருகா உன்னைத் தேடித்தேடி.. எங்கும்கானனே'' இது பெங்களுர் ரமணியம்மாளின் பாடலொன்று. கச்சேரியின் இடையில் இந்தப்பாடலையும் அவர் பாடினார். ''முருகா! .. '' என விழித்து அவர் பாடிய இசையழகு, முப்பத்தைந்து வருடங்கள் கழித்தும், என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் இலங்கை வானொலிபுகழ் கர்நாடக சங்கீத வித்துவான் எம். வர்ணகுலசிங்கம்.
86 களிலென்று நினைக்கின்றேன். கொக்குவிலிலுள்ள என் நண்பரொருவர் சாயிபக்தர். அவர் வீட்டில் நடந்த ஒரு சாயி பஜனைக்கு என்னை வற்புறுத்தி அழைத்திருந்தார். அந்தப் பஜனையைப்பார்த்துக் கொண்டிருந்த என்னை மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் வெகுவாகக் கவர்ந்தான். என்னை மட்டுமல்ல இன்னும் பலரை அவன் இசை கவர்ந்திருந்தது என்பது பஜனையின் முடிவில் தெரிந்தது. அவன் நன்றாக பாடவும் செய்வான் என்பது எப்படியோ அந்தக் கூட்த்தில் தெரிந்து விட்டது. பலரும் விரும்பிக் கேட்க, கல்யாண வசந்த ராகத்தில், இயலிசைவாரிதி யாழ்ப்பாணம் வீரமணிஐயர் பொன்னாலை வரதராஜப் பெருமாள் மீது, எழுதிய "கல்யாண வசந்த மண்டபத்தில்.. "எனும் பாடலைப்பாடினான். மனதுக்குள் ஆசனமிட்டு அமர்ந்துவிட்ட அந்தக் குரலைச் சில வருடங்களின் பின்னால், புலத்தில், ஒரு தமிழ்க்கடையில் ஒலிக்கக் கேட்டேன். உரிமையாளரிடம் விசாரிக்க, அவர் ஒரு இறுவட்டினைத் தூக்கித் தந்தார். 'திசையெங்கும் இசைவெள்ளம்' என்ற அந்த இசைஇறுவட்டில் பதினொரு பக்திப்பாடல்கள். பிரித்தானிய தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளியீடாக வந்த அந்த இறுவட்டிலுள்ள இசைக்கோலங்களை இசைத்தவன், 86களில் இசையால் எனைக்கவர்ந்த அந்த இளைஞன்தான் என்பதை அப்போதுதான் அறிந்தேன். அறிந்தது அதுமட்டுமல்ல. இப்பதிவின் முதல் பகுதியில் வரும் பெரியவர் முருகேசு ஐயா அவர்களின் மகன் வித்துவான் வர்ணகுலசிங்கம் அவர்களின் மகன்தான் ராமேஸ்வரன் என்பதும் அப்போது அறிந்ததே. ஆம்! அதனால்தான் சொல்கின்றோம், வர்ண ராமேஸ்வரன், தனித்துவமான இசைத்தலைமுறைக் கலைஞன்.
ராமேஸ்வரன் குரலில் பல விடுதலைக்கீதங்கள் வெளிவந்தன. ஒற்றைப்பாடலை உதாரணம் சொல்லி முடித்திட முடியாத வண்ணம், எண்ணற்ற இசைக்கோலங்களை, இசைத்தவனே, உன் சாமகானங்களுடன் , திருக்கோணேஸ்வரநாதன் திருவடியில் நிலை கொள்க !