பாடலின் அத்தனை ஸ்வர பாவங்களையும், உடல் மொழியில் அசைவேதுமின்றி, குரல்வழியே நடனமிடும் குரல் நர்த்தகி உமா ரமணன். அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே ரசனைக்குரியவை எனச் சொல்லும் வகையிலமைந்த சிறப்பான பாடல்களே.
"ஆனந்தராகம் " , 'நீபாதி நான்பாதி', 'கஸ்தூரி மானே', 'பூங்கதவே தாழ்திறவாய்', 'மேகங்கருக்கையிலே' 'மஞ்சள் வெய்யில்' என அவரது பாடல்கள் பலவற்றையும் சொல்லிக் கொண்டே போகலாம்.
உமா ரமணணனின் ரீங்காரமான குரல், ஒப்பீடு செய்ய முடியாத தனித்துவமானது. அவரது பாடல்களில் எப்போதும் எம் விருப்பத்துக்குரியது "ஆனந்தராகம் ".
வாழ்க்கை இணையர்களான உமா ரமணன் தம்பதியரின் 'மியூசியானோ' இசைக்குழு மேடைக் கச்சேரிகளில், ஏவி ரமணனின் அத்தனை ஆர்பாட்டங்களுக்கு மத்தியிலும், எந்தவித சலனமும் இல்லாமல் முகத்தில் தவழும் சிறு புன்னகையுடன் மட்டும், இசையின் ஏற்ற இறக்கங்களை எல்லாம் கச்சிதமாகத் தொட்டு வரும் தனித் திறமை மிக்க கலைஞர் உமா மௌனித்துவிட்டார். ஆனால் அவர் குரல் எப்போதும் போல் ரீங்காரம் செய்தொலிக்க வாழ்வார்.