free website hit counter

நூற்றாண்டுச் சிறப்பு சிவத்தமிழ்செல்வி !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் வடபுலத்தில் தெல்லிப்பழை எனும் ஊரில் 1925ம் ஆண்டு ஜனவரி மாதம்  7ந் திகதி, அப்பாகுட்டி தையற்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த தங்கங்கம்மா அப்பாகுட்டி, ஈழத்தின் சைவப்பாரம்பரியத்தில், நன்கு அறியப்பட்ட ' சிவத்தமிழசெல்வி' யாக வலம் வந்தவர்.

ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலில் மணிவாசகர் சபையினரால்  1970 ஆண்டு, " சிவத்தமிழச்செல்வி " எனும் சிறப்புக் கௌரவம் வழங்கப்பெற்றது. இந்த விருதுக்குப் பொருத்தமானவராக அவர் இருந்தார் எனச் சொல்வதிலும் பார்க்க, அந்த விருதுக்கானவராகவே பிறந்திருந்தார் என்றால் அது மிகையில்லை.

31 ஆண்டு கால ஆசிரியைப் பணியை நிறைவு செய்ததின் பின்னால், தமிழுக்கும் சைவத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய அவரது பணிகள் அளப்பரியன மட்டுமல்ல தனித்துவமானவையும், முன்மாதிரியானவையும். மரபுக்குள்ளும், சமயத்துக்குள்ளும் நின்று, சமூகம்சார்ந்த மாறுதல்களையும், மறுசீரமைப்புளையும் சிந்தித்தவர். தான் கற்றுக் கொண்ட தமிழாற்றல், சைவசித்தாந்தம் குறித்த தெளிவு, என்பனவற்றின் துணைகொண்டு,  சீரிய சமூகநலனுடன் செயற்பட்ட தலைமைத்துவப் பண்பாளர். 

சைவப் பாரம்பரியச் சூழலில் பிறந்து வளர்ந்த அவர், அந்தச் சூழலின் அத்தனை இயல்புகளுக்குள்ளும், மரபுகளுக்குள்ளும் நின்று கொண்டு மாற்றங்களையும், புதியவைகளையும் தேடியவர். தேடிக் கண்டுகொண்டவற்றைச் சிறப்பாக வழிநடத்தியவர்.  தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் எனும்  சிறு ஆலயத்தினை, துர்க்காதேவி தேவஸ்தானம் என யாழின் பலபகுதிகளிலிருந்து மட்டுமல்லாது, நாட்டின் பலபகுதிகளிலிமிருந்து தேடிவந்து வழிபாடியற்றும்வகையில், மாற்றியவர். அந்த மாற்ங்களில் வந்த நிதிகளை சமயப்பணிகளுக்காக மட்டுமன்றி, சமூகத்திற்குமானதாக மாற்றியக்காட்டிய தாயுள்ளம் நிறைந்தவராகவும் த்னைவெளிப்படுத்தியவர். 

கத்தோலிக்க மக்கள் அதிகம் வாழுகின்ற யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியில், அனர்த்தமொன்றினால் வீடிழந்து நின்ற மக்களுக்கு, துர்க்காதேவி தேவஸ்தானத்தின் உதவித் திட்டத்தில்  புதிய வீடுகள் அமைத்துக் கொடுத்தபோது, மதங்கள் கடந்த அவருடைய மானுடச் சிந்தனையும், நேசிப்பும் வெளிப்பட்டன. அதேபோன்று " துர்க்காதேவி மகளிர் இல்லம் " உருவாக்கியபோது அவரது தீர்க்க தரிசனமான எண்ணம் வெளிப்பட்டன. சைவ மரபில் " மங்கையற்கரசி " எனும் பாண்டிய மகாராணியின் பக்திச் சிறப்பை ஞானசம்பந்தப்பெருமானின் பதிகம் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம். அத்தகைய ஒரு மாதரசியின் வாழ்வாக சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி, தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை யாழ்ப்பாணச் சமூகம் கண்டு பயனுற்றது.

ஆணாதிக்கப் பண்புமிக்க யாழ்ப்பாணச் சமூகத்தில், ஆளுமை மிக்க தலைமைத்துவம் நிறைந்த சைவசமயியாக அவர் அடையாளங் காணப்படுவதற்கு அவரது கல்விப் புலமையும், சமயத்தின் தத்துவார்தத் தெளிவும், நெறியான பேச்சாற்றலும் துணைநின்றன. நெற்றியில் திருநீறும், நேர்கொண்ட பார்வையும், கனீர் குரலுமாகக் கருத்துக்களைப் பகிரக்கூடிய, தனித்துவமான புதிய சிந்தனைகளுடன் செயலாற்றத்தக்க  தலைமைத்துவத் தாயாக அவதரிந்திருந்த சிவத்தமிழ்ச் செல்வி 2008 ல் தனது 83வது வயதில் இயங்குதலை நிறுத்திக்கொண்டார். அதற்குப் பின் இன்னமும் அவரைப்போன்ற சைவசிந்தாந்த தெளிவும், சமூக நோக்கும் நிறைந்த மற்றுமொரு சிவத்தமிழ்செல்வி இன்னமும் பிறக்கவேயில்லை எனலாம். யாழ்ப்பாணச் சைவப்பாரம்பரியத்தில் ஒரு நூற்றாண்டின் சிறப்பு, சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாகுட்டி.


- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula