சொலொத்தூன் திரைப்படவிழாவின் (2024) 59 வது பதிப்பு கடந்த 24 ந்திகதி நிறைவு பெற்றது. இந்த வருட விழாவில் கௌரவம் பெற்ற சுவிற்சர்லாந்தின் மூன்று அசைப்படக் கலைஞர்கள் குறித்தும், அவர்களது படைப்புக்களில் பார்க்க முடிந்த சில அசைபடங்கள் குறித்தும் பார்க்கலாம்.
சுவிஸ் அனிமேஷன் சினிமாவின் மூன்று முன்னோடிகளான, Claude Luyet, Georges Schwizgebel, Daniel Suter ஆகிய மூன்று வரைகலைஞர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனம் GDS ஸ்டுடியோ. செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம், அசைபடங்களில் தடம்பதித்திருக்கும் காலம் இது. ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அசை படங்களான அனிமேஷன் படங்களை உருவாக்குவது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஒரு சிறுபடத்தை உருவாக்குவதற்கும் பலநாள் உழைப்புத் தேவைப்பட்டது.
1971 இல் ஒரு விளம்பர நிறுவனத்தில் சந்தித்த மூன்று கிராஃபிக் வடிவமைப்பாளர்களான, ஜார்ஜஸ் ஸ்விஸ்கெபல், டேனியல் சூட்டர், கிளாட் லுயெட் ஆகிய மூவரும், அனிமேஷன் படங்களுக்கான பொதுவான ஆர்வத்தால் உந்தப்பட்டு,தங்கள் கடின உழைப்பினை வழங்கி, ஒரு ஸ்டியோவினை உருவாக்கினார்கள். சித்திரக் குள்ளர்கள் கதாபாத்திரங்களின் மீதான விருப்பத்தால் தங்களது கூட்டுழைப்பு நிறுவனத்துக்கு, அவர்கள் சூட்டிய பெயர்தான் GDS Studio.
59வது சொலோத்தூன் திரைப்படவிழாவில் வெற்றிபெற்ற படங்கள் !
தங்களது படங்களுக்கான நிதியளிப்பதற்காக, மூவரும் தொடர்ந்து கிராஃபிக் டிசைனர்களாகவும் பணிபுரிந்தனர். பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் தொலைக்காட்சிக்கான சுவரொட்டிகள் மற்றும் வரைவுகளை தொழில்முறையாகச் செய்தார்கள். இவை தவிர தங்கள் வாழ்வாதாரத்துக்காக , ஸ்விஸ்கெபல், இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆந்த்ரோபாலஜிக்கு விளக்கப்படங்களை உருவாக்க, சூட்டர் ஒரு ஆசிரியராகவும், லுயெட் ஒரு தபால்காரராகவும் பணியாற்றினார்கள். GDS ஸ்டுடியோ அவர்களுக்கு வசதியான இருப்பை உறுதி செய்யவில்லை என்றாலும் அவர்களது கடின உழைப்பால், 52 ஆண்டுகளில் 265 நிமிட அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது.
GDS ஸ்டுடியோவின் அசை படங்களின் முழுமையான தொகுப்பு முதல் முறையாக இந்த விழாவில் திரையிடப்பட்டன. வெவ்வேறு நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட 42 அனிமேஷன் குறும்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றன. சுவிஸின் முன்னொடிக் கலைஞர்கள் மூவரினதும், தனித்துவம் வெளிப்படும் படைப்புக்கள் இத் தொகுப்பில் இடம்பெற்றன.
இதில் நாம் பார்த்து ரசித்த தொகுப்பில் இருந்த சில படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
ஸ்விஸ்கெபல் உருவாக்கிய D'une peinture A' l'autre எனும் 3 நிமிட அசைபடம், அவரது வரைகலையின் தனித்துவத்துடன், இரு வெவ்வேறான மாறுபாடான சிந்தனை வெளிப்பாட்டினை உணர்த்தியது.
2016ல் கிளாட் லுயெட் உருவாக்கிய Le fil d'Ariane 13 நிமிட அசைபடத்தில் ஒரு பெண்ணின் மொத்த வாழ்வியலையும், ஒரு அழகிய கவிதைபோல வடித்திருப்பார்.
1988ல் டேனியல் சூட்டர் உருவாக்கிய Amours à faire et A repasser எனும் 4 நிமிட அசைபடத்தில், ஒரு தம்பதிகளின் அன்பும், நெருக்கமும், ஊடலும் அவருக்கே உரித்தான நகைச்சுவை எள்ளலுடன் காட்சிப்படுத்தபட்டிருந்தது.
இந்த மூன்று படைப்புக்களிலும், காட்சி அமைப்புக்களும், மாற்றங்களும், அவர்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தன.
இந்தத் தொகுப்பில் இறுதியாக இருந்த GDS ஸ்டுடியோவின் Animatou எனும் அசைபடம், அனிமேஷன் படங்களின் வரலாறு சொல்லும் ஒரு படைப்பாகவே இருந்தது. ஆறு நிமிடத்தில் 50 ஆண்டுகால வரலாற்றைச் சொல்ல முடியுமா என்றால் முடியும் எனப் பதிலளிப்பதுடன், அது 70 வயதுகளிலும் தங்களால் முடியும் என்பதை நிரூபிப்பதாகவும் இருந்தது. அன்று முதல் இன்றைய சமகாலம் வரையிலான அவர்களது கற்றலையும், தேடலையும், படைப்பாற்றலையும் விளக்கும் படைப்பாக Animatou க் காண முடிந்தது.
சொலோத்தூன் திரைப்படவிழா, உரிய நேரத்தில் இந்த மூன்று முன்னோடிக் கலைஞர்களையும், முன்னிறுத்திப் பாரட்டிப் பெருமை சேர்த்துள்ளது. அந்தப் பெருமைக்கு முற்றிலும் பொருத்தமானவர்கள் GDS ஸ்ரூடியோ.
4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
படங்கள் : நன்றி - Journées de Soleure (module+)