free website hit counter

சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரிகளா...?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் தமிழர்களும் நெருக்குகையில் நான் எப்படித் தூங்குவேனம்மா? எனச் சிங்களர அரசன் துட்டகைமுனு தாயிடம் கேட்டதாகச் சொல்லப்படும் செவிவழிக் கதை மூலம், சிங்கள மக்களுக்கு தமிழர்கள் எதிரிகள் எனும் எண்ணத்தை வளர்த்தது பேரினவாத அரசியல். ஆனால் சிங்களவர்களின் எதிரிகள் தமிழர்களே அல்ல என்கிறது இந்தப் புத்தகம்.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் தமிழர்களுக்கு முதல் எதிரி தமிழர்களே. இரண்டாவது எதிரி தான் சிங்களர்கள். ஆனால் சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரியல்ல. விரைவில் சீனர்கள் நாட்டை ஆக்கிரமித்து அவர்கள் தான் முழுமையான எதிரியாக சிங்களர்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் அளவிற்கு நிற்பார்கள் எனப் பத்தாண்டுகளுக்கு முன்னரே இந்த நூலில் எழுதியிருப்பவர் திருப்பூர் ஜோதிஜி.

இன்று இந்த வாசகங்களுக்கு உயிர் உள்ளது என்பது ஒரு பக்கம் வருத்தமாகவும் உள்ளது. மறுபக்கம் ஆச்சரியமாகவும் உள்ளது. இப்போது சீனா புதிய துறைமுகம் அமைப்பது, நிலத்தைக் கையகப்படுத்துவது, இலங்கை பாராளுமன்றம் ஏகமனதாக ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற செய்திகளை வாசிக்கும் போது ஜோதிஜி "ஈழம் படிக்க மறந்த குறிப்புக்கள் " புத்தகத்தினை வாசிக்க வேண்டியதன் அவசியம் புரிகிறது.

இதனை ஜோதிஜி பின் வருமாறு குறிப்பிடுகின்றார்;

கடந்த பத்தாண்டுகளில் என் இணைய எழுத்துலகில் தொடக்க காலத்தில் மிக அதிக அளவு ஈழம் சார்ந்து தான் எழுதி உள்ளேன். யோசித்துள்ளேன். மனநிலை பாதிக்கப்படும் அளவிற்கு அது சார்ந்த புத்தகங்கள் தான் வாசித்துள்ளேன். எதிர்மறை நியாயங்கள், ஆவணங்கள், வெளிவராத தகவல்கள், இயக்கங்கள் சார்ந்த எண்ணங்கள், வெளிப்பாடுகள் என்று எத்தனை வாசித்தாலும் யோசித்தாலும் எப்போதும் அதன் சமூக பிரதிபலிப்பை அவ்வப்போது கவனத்தில் எடுத்துக் கொண்டதுண்டு.

பத்தாண்டுகளுக்கு முன்பு பல நூறு ஈழம் சார்ந்த ஆண்கள், பெண்கள் என் நட்புப் பட்டியலில் இருந்தார்கள். உலகில் ஒவ்வொரு மூலையிலிருந்து வாரம் தோறும் யாரோ ஒருவர் உரையாடும் அளவிற்கு அதுவொரு நீண்ட தொடர்பு வலையை என் எழுத்துக்கள் உருவாக்கித் தந்து இருந்தது. இன்று யாரும் என் தொடர்பில் இல்லை. முகநூலில் சிலரின் பெயரைப் பார்ப்பதுண்டு. அவர்கள் நிகழ்கால பிழைப்புவாதிகளாக மாறி யாரை இப்போதைய சூழலில் ஆதரித்தால் வளம் பெற முடியும் என்ற பாதையில் பயணிக்கின்றார்கள்.

சில சமயம் வெளிநாடுகளில் பேசும் ஈழத் தமிழர்களின் குடும்பத்திற்குள் ஒலிக்கும் குரல்கள், உரையாடல்களில் அதிக ஆங்கில வார்த்தைகளும், கலப்பு மொழிகளும் (தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போலவே) வந்து கொண்டே இருக்கின்றது. தங்களின் அடுத்த தலைமுறைகளின் பொருளாதார வளத்திற்கு, வாழும் நாட்டில் உயிர்பிழைத்திருக்க ஆங்கிலம் ஒன்றே அருமருந்து என்பதாக மாறியுள்ளனர். குழந்தைகளும் மாறிக் கொண்டே வருகின்றார்கள். வேர் மறந்த மரங்களில் பூத்திருக்கும் பூக்கள். இது தான் நிகழ்கால நிதர்சனம்.

ஏன் இந்த சமயத்தில் இங்கே சொல்லத் தோன்றுகின்றது?

மிகப் பெரிய ஆவணம் போல ஈழம் சார்ந்த 7000 வருடச் சரித்திரச் சம்பவங்களை, எதிர்மறை நியாயங்களை, நடந்த வரலாற்றுக்குறிப்புகளை நான் வாசித்த புத்தகங்கள் அடிப்படையில் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தேன். அதனை ஈழம் வந்தார்கள் வென்றார்கள் என்று இலவசமாக புத்தமாக மாற்றி தமிழ் நல்லுலகத்திற்கு வழங்கினேன். அடுத்த சில ஆண்டுகளில் அந்த மின்னூல் பல தளங்களின் மூலமாக உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் கைக்குச் சென்று சேர்ந்தது. மீண்டும் மேம்படுத்தப்பட்டு கிண்டில் பதிப்பாக வெளியிட்டேன். இந்த மின்னூலும் பல ஆயிரம் வாசகர்களைச் சென்று சேர்ந்தது.

எனக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஈழத்திற்கு இது வரை சென்றதும் இல்லை. ஆனால் இன்று வரையிலும் என் எண்ணம் ஏதோவொரு வகையில் ஈழத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உயிர்ப்புடன் உலாவுவதாகவே எனக்குத் தோன்றுகின்றது. அதற்கு என்ன காரணம் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. முன் ஜென்ம பந்தமா என்று கூட யோசித்துள்ளேன்.

ஈழத்தைப் பற்றி வரலாறு மற்றும் அரசியல் குறித்து பல ஆயிரம் புத்தகங்கள் வந்திருந்தாலும், அவற்றை நீங்கள் வாசித்து இருந்தாலும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களால் விரும்பப்படும் என்ற நம்பிக்கையுண்டு. காரணம் இதன் ஆதாரத் தகவல்கள் என்பது உண்மையோடு தொடர்புடையது. பாரபட்சமின்றி ஒவ்வொரு நிகழ்வுகளையும் இதில் எழுதியுள்ளேன்.

ஈழம் என்ற தீவு எப்படி உருவானது என்பதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த மாற்றங்கள், இனக்குழுக்கள் தொடங்கி நாகரிகம் பெற்று மன்னர்கள் ஆண்டது வரைக்கும் படிப்படியாக விவரித்துள்ளேன். இலங்கையின் சுதந்திரத்திற்கு முன் அதற்குப் பின் நடந்த வரலாற்று நிகழ்வுகளைச் சுவராசியமாகச் சொல்லியுள்ளேன்.

ஈழ வரலாறு பேசும் எந்தப் புத்தகங்களிலும் சொல்லப்படாத இந்திய அமைதிப்படை குறித்து இதில் எழுதியுள்ளேன். ஈழத்தில் இந்திய அமைதிப் படை நுழைந்தது முதல் வெளியேறியது வரைக்கும் நடந்த நிகழ்வுகளை இதில் விவரித்துள்ளேன்.

2009 போர் என்பது எங்கிருந்து தொடங்கப்பட்டது. அதற்குப் பின்னால் இருந்தவர்கள், பங்கெடுத்த நாடுகள், பெற்ற பலன்கள், தனி நபர்கள் பெற்ற லாபங்களைப் பட்டியலிட்டுள்ளேன்.

நூறு புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்களை இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். வாய்ப்பிருந்தால் உங்கள் தலைமுறைகளுக்கு இந்தப் புத்தகத்தை வாசிக்க பரிந்துரை செய்யுங்கள். காரணம் அவர்கள் இன்று வாழும் வெளிநாட்டு (வசதியான) வாழ்க்கையின் தொடக்கப்புள்ளி எங்கேயிருந்து தொடங்கியது? என்ன காரணம் என்பதனை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். இன்னும் சில நூற்றாண்டுகள் தமிழ் வாழட்டும் என்கிறார்.

இந்த நூலினை அனைவரும் வாசித்துக் கொள்ள வேண்டும் எனும் விருப்பில், 4தமிழ்மீடியாவின் அனுசரனை வேண்டுகோளினை ஏற்று, 11.06.2021 ஐரோப்பிய நேரம் காலை 10.00 மணிமுதல் 14.06.2021 வரையிலான மூன்று நாட்களுக்கு கீழ் காணும் இணைப்பில் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ள முடியும் என்பதனை அறியத் தந்திருக்கின்றார் நூலாசிரியர் ஜோதிஜி. அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

நூலினைத் தரவிறக்கிக் கொள்ள அழுத்த வேண்டிய இணைப்பு:

ஈழம் - படிக்க மறந்த வரலாற்றுக் குறிப்புகள்: Ceylon Geo Politics (002 Book 2) ... https://www.amazon.com/dp/B07PGHW65Y/ref=cm_sw_r_tw_dp_E35QA3FWYNFGY1KWSTBH

-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula