இயக்குனர் மணிரத்னம் மற்றும் இயக்குனர் ஜயேந்திர பஞ்சப்பகேசன் இணை தயாரிப்பில் உருவான Netflix தொடர் "நவரசா" அண்மையில் பார்க்க கிடைத்தது.
கொரோனா காலத்தில் தமிழக சினிமா கலைஞர்களுக்கு கைகொடுப்போம் என்பது அவர்களது விளம்பரப் பட்டியல். பின்னால் நன்கு பணம் புரண்டிருக்கிறது, ஆனால் பல கதைகள் கோட்டைவிடப்பட்டிருக்கின்றன.
ஏன் பெரும்பாலான குறுந்திரைப்படங்களின் டிரோன் காட்சிகள் வருகின்றன, அவற்றில் தமிழ்நாட்டு சினிமாக்காரர்களுக்கு அப்படி என்ன தான் மோகம் எனத் தெரியவில்லை. கதையின் காட்சி அமைப்பு எந்த இடத்தில்/கிராமத்தில் நடைபெறுகிறது எனும் ஊடகத் தகவலை தவிர்த்து, அந்த டிரோன்களால் எந்தவொரு இடத்திலும் இன்னுமொரு அதிசயத்தை நிகழ்த்திவிட முடியவில்லை.
தமிழை விட சமஸ்கிருதமும், ஆங்கிலமும் எல்லா படங்களிலும் மேலோங்கி நிற்பது இரண்டாம் கவலை. பாவக்கதைகளுக்கு எதிர்மாறாக, நடுத்தர, உயர்தர கலாச்சார குடும்பங்களின் கதைகளே பெரும்பாலும் வந்து போவது மூன்றாம் கவலை.
ஏ.ஆர்.ரஹ்மான் முதற்கொண்டு, இதில் வரும் பெரும்பாலான குறுந்திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்களின் இசையும், காட்சி மற்றும் செட் அமைப்புக்களையும் படங்களின் திரைக்கதையை விட மிதமிஞ்சி நிற்கிறது அல்லது, படத்திற்கான செயற்கை உணர்ச்சிகளை மேலும் கூட்டிவிடுகிறது. அது நான்காம் கவலை.
இவற்றையெல்லாம் மன்னித்துவிடலாம். ஆனால் திரைக்கதையே மிக ஆபத்தானதாக இருக்கும், Peace | சமாதானம் எனும் பெயரில் உருவான கார்த்திக் சுப்புராஜின் ஈழம் பற்றிய போர்க்கதை குறிப்பிட்டு கதைக்கலாம். ஏனெனில் அதில் தான் என் மீதிக் கவலைகள் எல்லாம்.
ஒரு இயக்குனரின் கதைசொல்லும் சமூகப் பொறுப்பிலிருந்து முற்றாக விலகிச் செல்ல முனைகிறது இத்திரைப்படம். அது பார்ப்பவர்கள் மத்தியிலும் வெறுப்பையும், கோபத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையுமே இன்னமும் அதிகரிக்கக் கூடியது என்பது என் ஐந்தாம் கவலை.
சிங்கள இராணுவத்தையும், சரி தமிழீழ விடுதலைப்புலிகளையும் சரி, இப்படித்தான் அவர்கள் என பொதுப்படுத்தி சினிமா விம்பத்தில் கொண்டுவர முனையும் போது, இவ்வாறான இந்திய, தமிழ்நாட்டு குறுந்திரைப்படம் ஒன்றில் Netflix ஊடாக அதனைக் கொண்டுவர முனையும் போது அவை எத்தனை அப்பாவி மனங்களை மாற்றப் போகின்றன எனும் பயம் என் ஆறாம் கவலை.
ஜகமே தந்திரத்தை போன்று, இந்தப்படத்திலும் நடிகர்கள் தெரிவு படு சொதப்பல். இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக ஈழத்தமிழர்களின் மொழி நடை உச்சரிப்பை பிரதிபலிக்க முயன்று முயன்று தோற்றிருக்கிறார்கள். கௌதம் மேனனையும் சரி, பாபி சிம்ஹாவையும், சரி, தன் தம்பியைத் தேடும் சின்னப்பையனையும் சரி ஒரு செக்கன் கூட அவர்கள் ஏற்றுள்ள ஈழத்து தமிழர்கள் கதாபாத்திரத்தில் காண முடியவில்லை. அவர்களால் ஈழத் தமிழர்களுக்குள் கரைந்து போக முடியவில்லை என்பது என் ஏழாம் கவலை.
ஒரு யுத்தகளத்தில், இலங்கை இராணுவத்தையும், விடுதலைப் புலிகளையும் பிரதிபலித்து, இரண்டு சிறுவர் குழுக்கள் எதிரெதிரே நின்று பொய்த் துப்பாக்கிகள் கொண்டு சண்டைபிடிக்கும் போது, நடுவில் ஒரு நாய் குறுக்கிட்டால் அந்த சிறுவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை இந்த படத்தை விட அழகாக சொல்லிவிடலாம் என எண்ணினேன். அந்தளவு இந்த படத்துக்காக உழைத்தவர்களை மட்டம் தட்டும் நிலையில் நான் வந்துவிட்டேன் என நினைக்கையில் அது என் எட்டாம் கவலை.
இரு இனம் ஒரு சிவில் யுத்தத்தை நோக்கி உந்தப்படும் போது, சக மனிதன் மீதான வெறுப்பு எங்கிருந்து தோன்றுகிறது, அது எவ்வாறான விளைவை ஏற்படுத்துகிறது என்பதனை ஒரு சினிமா காண்பிக்க முனைகையில், அது பொறுப்புள்ள சினிமாவாக மாற்றம் பெறுகிறது. பார்வையாளனாக ஓரளவேனும், இரு எதிர் எதிர் போர்வீரர்களின் மன நிலையை புரிந்துகொள்ளும் வாய்ப்பை அது உருவாக்க கூடியது.
இறுதியுத்தச் சூழலில் அப்பாவி மக்களும், முன்னாள் போர் வீரர்களும், இளம் பெண்களும் சூரையாடி, சித்திரவதைப்பட்டு கொல்லப்படுவார்களானால், எங்கிருந்து இந்த வன்மம் மெல்ல மெல்ல வளர்த்தெடுக்கப்பட்டது என்பதற்கான தேடலையும், கேள்வியையும் எழுப்பும் ஒரு சினிமா மிக ஆழமாக நிற்கும் வல்லமை பெறுகிறது.
அது எதனையும் தேடிச் செல்லாது வரை, தீவிர சிங்கள தேசியவாதிகளால் உருவாக்கப்படும் சினிமாக்களில் வி.புலிகளும், அவர்களுக்கான ஆதரவர்களும் எப்படி சிங்கள சாதாரண மக்களுக்கு சினிமாக்களில் காண்பிக்கப்படுகிறார்களோ, அதைத் தானே நாமும் செய்கிறோம். ஒரு சமூகம் மேலும் மேலும் துண்டாடவும், வேற்றுமையையும், பிரிவினை வாதத்தையும் நோக்கிச் செல்வதையும், எப்படி இவற்றினால் தடுக்க முடியும்? என்பது என் ஒன்பதாம் கவலை.
இதே நவரசா தொடரில், அறுவருப்பு எனும் உணர்ச்சியை காண்பிக்கும் "பாயாசம்" திரைப்படத்தில் டெல்லி கணேஷின் கதாபாத்திம் ஒரு எதிர்மறையான கதாபாத்திரம். படம் தொடங்கி முடியும் வரை, அவரது பொறாமையும், அறுவருப்புமே படம் முழுவதும் நிரம்பியிருக்கும். ஆனால் ஒரு செக்கன் கூட அவருடைய கதாபாத்திரத்திலிருந்து என்னால் விலகிப் போக முடியவில்லை. அந்தளவு அவர் மீது கருணை ஏக்கமாக மாறுகிறது. காரணம், மனிதனின் பலவீனம் சினிமா ஒன்றின் மூலம் வெளித்தகர்த்து காண்பிக்கப்படும் போது, மனிதம் பிறக்கிறது. அது இன்னுமொரு உயிருக்கு தன் மனிதத்தையும் திறக்கிறது.
நவரசா தொடரில் பெரும்பாலான குறுந்திரைப்படங்கள் அப்படி திறக்கப்படவேண்டிய மனிதத்தை எந்தவித பொறுப்பும் இன்றி மூடியிருக்கின்றன என்பது என் ஒட்டுமொத்த கவலை.
- 4தமிழ்மீடியாவுக்காக: ஸாரா