free website hit counter

அன்னம் போலும் வாழ்வு !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்னப்பறவை போன்று வாழுங்கள் என்பது ஒரு பொதுவான அறிவுரை. பல சந்தர்ப்பங்களிலும் நாம் கேட்டிருக்கக் கூடியது அல்லது சொல்லியிருக்க கூடியது. அன்னத்தின் வாழ்வு அத்துனை சிறப்பு மிக்கதா?

நீரில் வாழ்ந்தாலும் அதன் இறகில் ஒருதுளி நீர் கூட ஒட்டாது. பாலும் நீரும் கலந்திருந்தாலும், அன்னம் தனியாகப் பாலினை பிரித்து அருந்தும். நீரின் அழுக்குகளில் வாழ்ந்தாலும், தான் உண்பவற்றை, அருந்துபவற்றை சுத்தமாக்கி உண்ணும் பண்புடையது அன்னப்பறவை என்பவை அன்னப்பறவை குறித்து நாம் அறிநித்திருக்கும் பொதுவான சிறப்புக்கள்.

அன்னப்பட்சி என்பது உண்மையில் உள்ளதா அல்லது கற்பனைத் தோற்றமா ? அன்னம் குறித்துச் சொல்லப்படும் சிறப்புக்கள் நம்பத் தகுந்தவையா ? என்னும் அன்னம் குறித்த கேள்விகளும் நிறையவே உள்ளன.

அன்னம் குறித்த தேடல்களின் போது, இராமாயணம், மகாபாரதம், வேதங்களில் இந்த பறவையைப் பற்றி சொல்லியிருப்பதைக் காணமுடிகிறது. சமஸ்கிருதத்தில் இதை ‘ஹம்சம்’ அல்லது ‘ஹம்சபட்சி’ என்று கூப்பிடுகிறார்கள். திருக்கோணேஸ்வரநாதரின் தேவி பெயர் ' ஹம்ஸவனாம்பிகை ' . அன்னம் போலும் அழகுடையவள், அன்ன நடையாள் என்பன, கவிஞர்களின் அழகியல் வர்ணனைகளில் வரும் வரிகள்.

கோவிற் சிற்பங்களில், சித்திரங்களில் அன்னப்பறவையின் வடிவம் காணலாம். வீடுகளில் உள்ள சரஸ்வதி படங்களிலும், பெண்களின் சேலைக்கரைகளிலும் அன்னத்தின் வடிவத்தைச் சித்திரமாகக் காணலாம். ஆனால் அன்னப்பட்சியினை நேரில் கண்டவர்கள் யார் ?. இமயமலையின் மானசரஸ் ஏரியில் அன்னப் பறவைகள் வாழ்ந்ததாக இந்தியப் புராணங்களில் சொல்லியிருக்கிறார்கள். மகாபாரதத்தில் வரும் நள தமயந்தி கதையில் நளனுக்கும் தமயந்திக்கும் தூது போகும் பறவையாக இது இருந்துள்ளது. இரவிவர்மாவின் நளதமயந்தி ஓவியத்தில் அன்னப் பறவை முக்கியம் பெற்றிருக்கும்.

பூமியில் நடக்கவும், வானத்தில் பறக்கவும், தண்ணீரில் நீந்தவும் கூடிய அன்னப்பறவைகள் குறித்து, இந்தியப் புராணங்கள் தவிர கிரேக்கப் புராணங்களிலும், ஐரிஷ் புராணக் கதைகளிலும் குறிப்புகள் உள்ளன. பகலில் அன்னங்களாக வானில் பறக்கும் பறவைகள் இரவில் அழகான பெண்களாக மாறுவதாக ஒரு கதை உள்ளது. ஐரோப்பாவில் அன்னப் பறவையைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. தற்காலத்தில் உள்ள ‘ஸ்வான்’ (swan) என்று அழைக்கப்படும் அன்னப் பறவைகளும் புராணத்தில் வரும் அன்னப் பறவைகளும் ஒன்றல்ல.

அன்னப் பறவை பற்றி, விரிவான, வித்தியாசமான குறிப்புக்களை எழுதியுள்ளார் - லண்டன் சுவாமிநாதன். அவர் அன்ப்பறவை குறித்து எழுதிய கட்டுரையில், பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் என்பது உண்மையா ?. பெரிய ஞானிகளை பரம ஹம்ச (பெருமைமிகு அன்னம்) என்று அழைப்பது ஏன்?அன்னப் பறவையை பரணர், பிசிராந்தையார் முதலிய தமிழ் புலவர்களும், நள தமயந்தி போன்றோரும் தூது விட்டது ஏன்? பெண்களின் நடையை அன்ன நடை என்று வருணிப்பது ஏனோ? எனும் கேள்விகளும், குறிபுக்களுமாக தொடரும் அவரது குறிப்புக்களையும் காண்போம்.

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து — (நாலடியார்)

கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது. போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.

வினோதய சித்தம் - விமர்சனம்

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வழங்கும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு.

உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்தின் ஆறாவது காட்சியின் 33வது செய்யுளில் இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதையில் சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.

அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி பால்/தண்ணீர் கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம் என்கிறார்.

இது தொடர்பான கேள்வி பதில் ஒன்றில் கால்நடை வளர்பு ஆலோசகரான அசோக பாண்டியன் வேறு ஒரு விதமாக இதற்குப் பதில் தருகின்றார். அன்னம் என்றால் 'சோறு' என்று பொருள்கொண்டு, இந்தப் பழமொழியை அணுகிப் பாருங்கள். பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அவ்வாறு கலக்கப்பட்ட பால்அன்னம் (சோறு) சற்று நேரத்தில் பாலை இழுத்துக்கொள்ளும்; தண்ணீரை விட்டுவிடும். சோறு, தண்ணீர் கலந்த பாலிலிருந்து, பாலை மட்டும் இழுத்து, உறிஞ்சி, எடுத்துக் கொண்டு, தண்ணீரை விட்டுவிடுவதை இன்றைக்குக்கூட உங்கள் வீட்டிலேயே செய்து பார்ககலாம்.(பாலிலே உள்ள கொழுப்பு சத்து காரணமாக சாதத்தில் பாலில் உள்ள பொருட்கள் ஒட்டிக்கொண்டு நீர் தனியே நிற்கும்)

நீங்கள் சொல்லும் அன்னம் எனும் அந்த வகை வாத்துக்கள் பாலில் வாயை வைத்தவுடன் பாலில் மாற்றம் ஏற்ப்பட்டு
பால் திரியலாம். திரிந்த பாலை அலகால் வடிகட்டி எடுத்துக் கொண்டு மிகுந்த நீரை வெளியிடலாம். தயிர் உறைவது பலவகையான நுண்ணுயிர்களால் (பாக்டீரியா). அவை பொதுவாக பாலிலுள்ள புரத, கொழுப்பு மூலக்கூறுகளை மாற்றுகின்றன. நீரை ஒன்றும் செய்வதில்லை. எனவே பால் கெட்டிப்படுகிறது (உயிர்வேதிமச் செயலால்). நீர் மிஞ்சுகிறது என்பதாக அமைகிறது அசோக பாண்டியனின் பதில்.

லண்டன் சுவாமிநாதனின் கட்டுரையில் அன்னம் குறித்து மேலும் விவரிக்கையில், அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன என்கிறார்.

பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?

உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர் எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.

ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ.

ஓம் ஹம்சாய வித்மஹே
பரமஹம்சாய தீமஹி
தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத், என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.

ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.

‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது. தத்தாத்ரேயர் என்ற முனிவர், இயற்கையில் உள்ள ஒவ்வொரு பிராணி, பறவை, பூச்சி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றது பாகவதத்தில் வருகிறது.

இன்னொரு விளக்கமும் சொல்லலாம். அன்னப் பறவை தூய வெண்ணிறப் பறவை. இந்திய இலக்கியங்களில் வெள்ளை நிறம் என்பது தூய்மையயும், புகழையும் குறிக்கும். மேலும் அன்னப் பறவைகள் புனித இமயத்தில் மானசஸரோவர் என்ற நிர்மலமான ஏரியில் வசிப்பதைப் புற நானூற்றுப் புலவர்களும் காளிதாசனும் பாடுகின்றனர். அவை சூரியனை நோக்கிப் போவது போல உயரமாகப் பறப்பது, ஞானிகள் இறைவனை நாடிச் செல்வதைப் போன்றதே என்றும் புலவர்கள் புகழ்கின்றனர்.

அன்னப் பறவைகள் ஏகபத்னி (ஒருவனுக்கு ஒருத்தி) விரதம் கொண்ட பறவைகள் என்பதாலும் இந்துக்கள் விரும்புவர். பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம். விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று ஹம்சாவதாரம். குட்டிகள் இடத்திலும், மனைவி இடத்திலும் பாசம் உடைய பறவை என்பதால் இந்திய இலக்கியங்கள் இவற்றை உவமைகளாகப் பயன்படுத்தும்.

வீட்டைவிட்டு ஓடிப்போன சித்தார்த்தனை (கௌதம புத்தர்), அன்னப் பறவை போல வந்துவிடு என்று புத்தசரிதம் சொல்லும்.

வேதத்தில் அன்னப் பறவைகள்
உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். அதிலும் அதற்குப் பின் வந்த 3 வேதங்களிலும் நிறைய குறிப்புகள் உள்ளன.
ரிக் வேதத்தில் (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;; அதர்வணம் AV 6-12-1 etc) கூட்டமாகப் பறப்பவை, பின்புறத்தில் கருப்பு வண்ணம் உடையவை, அதிக இரைச்சல் செய்பவை, இரவில் முழித்திருப்பவை என்று புலவர்கள் பாடுவர்.

இரட்டையர்களான அஸ்வினி தேவர்களை சோமயாகத்துக்கு அன்னப் பறவை போல ஜோடியாக வரவேண்டும் என்று ரிக்வேத ரிஷி பாடுகிறார் (RV 5-78-1).

சூரியனையும் உயர் நிலையிலுள்ள ஞானியையும் அன்னத்துக்கு ஒப்பிடுகிறது சிவ புராணம் (2-15-10)
மாங்குடிக் கிழாரும் சூரியனை நோக்கிப் பறக்கும் அன்னப்பறவை பற்றிச் சொல்கிறார் — (மதுரைக் காஞ்சி 385-386)

“ஒள்கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர் புரவி”
ஆய்தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேகம் திரிதரும் – கலித்தொகை 69
இது ரிக்வேதத்தில் 1-163-10 வரும் வெள்ளைக் குதிரை பற்றிய பாடலின் எதிரொலி!

மஹாபாரதத்தில் நள தமயந்தி கதையில் நளன், அன்னப் பறவையை தூது அனுப்புகிறான். தமயந்தி அதைப் பிடித்து விஷயத்தை அறிகிறாள். பரணரும் (நற்றிணை 356), பிசிராந்தையாரும் (புறம் 67) தென்கடலில் மீன்களைச் சாப்பிட்டுவிட்டு, அன்னங்கள் பொன் நிறம் பிரகாசிக்கும் இமயமலையை நோக்கிப் பறப்பதைப் பாடுகின்றனர். அவைகளை தூது விடுகின்றனர்.

குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் (புறம்.67)

நிலம்தாழ் மருங்கின் தென்கடல் மேய்ந்த
இலங்குமென் தூவி செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும் — (நற்றிணை 356)

காளிதாசன் படைத்த ரகுவம்ச, மேகதூத காவியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன.
எல்லாப் புலவர்களும் பெண்ணின் நடையை அன்னத்தின் நடைக்கு ஒப்பிடுவர் (அகம் 279)
படுக்கைத் தலையணைகளில் அன்னத் தூவி (சிறகு) வைத்துப் பயன்படுத்தினர்.

ராமாயண, மஹாபாரதத்தில் நிறைய இடங்களில் அன்னம் பற்றிய உவமைகள் வருகின்றன. ஒரு சுவையான கதையும் உண்டு. அணிலுக்கு ஏன் முதுகில் மூன்று கோடுகள்?, காகத்துக்கு ஏன் ஒரு கண் குருடு? போன்ற பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அன்னத்துக்கு ஏன் தூய வெண்ணிறம் என்று தெரியுமா?

ராவணன் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக வருண பகவான் அன்னப் பறவையாக மாறினாராம். பின்னர் நன்றிக் கடனாக அன்னத்துக்கு என்றும் தூய வெண்ணிறத்தை அளித்தாராம் வருண பகவான்.

வர்ணோ மனோரம: சௌப்ய சந்த்ரமண்டல சந்நிப:
பவிஷ்யதி தவோதக்ர: சுத்தனேண சமப்ரப: — 7-18-29

ஹம்சானாம் ஹி புரா ராம ந வர்ண: சர்வ பாண்டுர:
பக்ஷா நீலாக்ர சம்வீதா: க்ரோடா: சஸ்பாக்ர நிர்மலா: – 7-18-31

இதே போல மஹாபாரதத்திலும் அன்னப் பறவை பற்றி சில கதைகள் இருக்கின்றன.

அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை, கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள் என அன்னப்பறவைகள் குறித்த செய்திகளை தனது கட்டுரையில் நிறைவு செய்கின்றார் லண்டன் சுவாமிநாதன்.

அன்னம் எனும் பறவை இருக்கிறதோ இல்லையோ, அன்னம் குறித்து அறிந்து கொள்ள இன்னும் பல செய்திகள் நிட்சயமாக நிறையவே இருக்கும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

மேலதிக தகவல்கள். நன்றி - லண்டன் சுவாமிநாதன் கட்டுரைகள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula