தமிழ்திரையிசை மீதான நாட்டம் மிக்க எவரும், தவறாது பார்க்கும் தொலைக்காட்சி நிகழச்சிகளில் முக்கியமானது விஜய் தொலைக்காட்சியின் "சூப்பர் சிங்கர் " எனலாம்.
இதன் எட்டாவது தொடர் இறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது. இந் நிகழ்ச்சியின் ஆரம்பகால வடிவமைப்பில் இருந்து பெரிதும் மாறியுள்ள இந்நிகழ்ச்சி, பலரது விமர்சனத்துக்கும், அதேவேளை விருப்புக்கும் உள்ளாகியுள்ளது. அத்தகைய விருப்பங்களிற்கான காரணங்களில் முக்கியமானது இசை. போட்டியாளர்களின் திறமையை வளர்த்தெடுக்கும் வளமான இசைக் கோப்பும், ஒலியமைப்பின் துல்லியமும், பலருக்கும் விருப்பமானது.
ஆரம்பம் முதலே இந்த நிகழ்ச்சி இசைப்பலமாக இருந்து வரும் 'மணி பான்ட்' குழுவினரின் பின்னணி இசைச் சேர்க்கை அலாதியானது. கேளிக்கை எனும் பெயரில், அந்நிகழ்ச்சியில் இடம்பெறும் அளப்பறைகள் பலவற்றையும் தாண்டி, அந்நிகழ்ச்சியை ரசிக்க வைப்பதும் அந்த இசையே. அக் குழுவின் கலைஞர்கள் ஒவ்வொரும் மிகத்திறமையானவர்களே. கீபோர்ட்டில் பல இசைக் கோப்புக்களை சேர்த்தமைக்கும் கார்த்திக்கும், நவீனும், குழுவின் முக்கியமானவர்கள். எல்லாவகையான வாத்தியங்களின் இசையினையும் நயமாகச் சேர்த்திடும் நுட்பம் தெரிந்த கலைஞர்கள்.
இவர்களில் இளையவர், கே.டி எனும் கார்த்திக் தேவராஜ், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானால் பாராட்டப்பெற்றவர். அவரது இசை நிகழ்ச்சிகளில் கீபோர்ட் கலைஞராக பங்கேற்பவர். கூச்ச சுபாவமுள்ள இந்த இளைஞனின் விரல்கள் சுரத்தட்டுக்களில் இழைந்து உருவாக்கும் இசை அற்புதமானது. சென்ற 4,5ம் திகதிகளில், " சூப்பர் சிங்கர் - 8 " தொடரின் அரையிறுதிப் போட்டிகளின் போது, பல்வேறு வாத்தியக் கலைஞர்களையும் ஒருங்கமைத்து, அவர் கோர்த்த இசைக்கோலம் மிகச்சிறந்த செவிக்கின்பம் எனலாம். இசைமீதான நாட்டம் மிக்க எவரையும் கிறங்கடித்த இசைக்கோப்பு.
சுரத்தட்டில் இசையாடும் இந்த இளைஞனின் குரல் வழியான ஞானம் அதே அரங்கில் வெளிப்பட்ட போதும், அரையிறுதிச்சுற்றின் எட்டுப்பாடல்களின் இசைக் கோப்புக்களில் அவர்காட்டிய இசைஜாலம் கேட்டுணர்ந்த போதிலும் எழுந்த எண்ணம்தான் இந்தப் பத்தியின் தலைப்பு. தமிழ்த்திரையிசையுலகம் நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் கூடிய இரட்டை எழுத்தாக 'கே.டி' எனும் கார்த்திக் தேவராஜ் தெரிகிறான்.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்