நயினாதீவு நாகவிகாராதிபதி செவ்வியொன்றிலே "சிங்கள பௌத்தம், தமிழ் பௌத்தம் என்றில்லை. பௌத்தம் என்பது ஒரு சமயமே இல்லை. புத்தர் ஒரு இந்துவாக இருந்து தோற்றுவித்த சிந்தனைக் கோட்பாடே பௌத்தம்" என்று தெளிவாகச் சொல்கின்றார்.
தமிழ் பௌத்தம் எனும் கோஷம், ஈழத் தமிழர்களின் இருப்புக்கு இன்னல் இழைக்கக் கூடியது மட்டுமன்றி, பௌத்தம் எனும் கோட்பாட்டிற்கு சிங்கள பௌத்தம் பேசுபவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அவப்பெயருக்கும் மேலான இழுக்கினைச் சேர்க்கக் கூடியது. இது தொடர்பில் இரமணீதரன் கந்தையா (அவர்களுக்கான நன்றிகளுடன் ) எழுதிய கட்டுரையொன்றின் சாரத்துடனான மீள்பதிவிது.
தமிழர் பௌத்தத்தினைத் தாமாகவே உள்வாங்குவதென்பது ஒன்று; இருப்பிலிருந்து எதிர்ப்பின்றித் தப்பும் தீர்வென்பதற்காகவே பௌத்தராவது வேறொன்று. இலங்கையின் வடமேற்கின் நூற்றாண்டுக்கு முந்திய, தமிழினைப் பேசியோர் மொத்தமாகவே சிங்களம் பேசுகின்றவர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டதை என்னவெனக் காண்பது?
சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாமோதரம்பிள்ளை சைவத்திலிருந்து கிறிஸ்தவத்துக்குப் போய்ப் பின் சைவத்துக்கு வந்ததுபற்றி அவரின் மகனார் அழகுசுந்தர தேசிகரெனும் பிரான்சிஸ் கிங்ஸ்பரி முதல், மாவிட்டபுர மணியகாரர் பரம்பரையிலே வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு தற்காலிகப்பேராசிரியர்வரை சைவம்-எதிர்-கிறிஸ்தவம் தூஷண பரிகாரம் சொல்லியிருக்கின்றார்கள்; எழுதியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்ப்பௌத்தர் இருந்தனர் என்பது முதல் தமிழர் புத்தரின் மீது வெறுப்பரசியல் இதுவரை நடத்தவில்லை என்பதுவரை புத்தர் குறித்த தமிழரின் உள்ளத்திருப்பு குறிப்பிடத்தக்கது. தமிழெழுத்தாளரும் சோமசுந்தரப்புலவரின் மகனாருமான நவாலியூர் சோ. நடராஜன், தர்மரத்தினதேரராகிப் பரிநிர்வாணமடைந்ததற்குத் தமிழரெவரும் வாளையும் சொல்லையும் சுழற்றவில்லை; அதே நேரத்திலே பௌத்தம் பேசும் சிங்களபேரினவாதிகளுடன் இணைந்த தமிழ்ப்பௌத்தர்களின் அரசியல் தமிழருக்குப் பெருங்கெடுதலைச் செய்துகொண்டேயிருக்கின்றது.
கன்னியா, திருகோணமலை நெல்சன் திரையரங்கு முன்னான நிலத்தினைத் தொல்பொருட்டிணைக்களம் கைப்பற்றிப் புத்தர்சிலையைத் தாய்லாந்துப்பிக்குகள் வைப்பது, தமிழரிடம் கையாடப்பட்ட தையிட்டி நிலத்திலே வலிந்தெழும் விகாரை, நயினாதீவுப்பெயர்மாற்றம், வெடுக்குநாறிமலைப் புத்தர்புகுதல் பற்றி தமிழ்பௌத்தம் பேசுவோர் மறந்தும் பேசுவதில்லை. பேசப்புகுவாரைக், நல்லிணக்கத்தை உடைத்தெறிந்து சமநிலையைக் குலைக்கத்துடிப்பாராய்க் காட்டுவார்கள்.
அன்றுபோல இன்றும் ஈழத்தமிழரை ஒடுக்கிக்கொண்டிருக்கும் எல்லா அக+புறப்பிரச்சனைகட்கும் யாழ்ப்பாணியம், புலிகள், தமிழ்த்தேசியமென்று முடிச்சுப்போட்டுவிட்டுப், பெருந்தேசிய ஓடுக்குமுறையின் வடிவமாகக் கட்டப்பட்டுவிட்ட புத்தரை மாற்றாய்ப் புகுத்தினால், தீர்வேதும் வராது. முஸ்லீம்களை வெருட்ட ரோஹிங்யாக்களை ஒடுக்கிய மியன்மார்ப்பிக்குகளையும், திருமலைநகர்த்தமிழ்நிலத்திலே புத்தர்சிலையை நடுவதற்குத் தாய்லாந்துப்பிக்குகளையும் வரவழைத்த பேரினவாத அரசியற்பொறி இது.
சுட்டிக் கேட்பவர்களுக்குப் புலிவால் கட்டிவிட்டு, போரைக்கொண்டு வந்தவர்களென கூறிவிட்டு, தாய்நிலத்துக்குப் பொருந்தாத திராவிடத்தையும் தலித்தியத்தினையும் வலிந்து இலங்கையிலே அபத்தமாய் நுழைப்பவர்கள், பிழைப்பவர்கள், தத்துவ வெற்றிடத்திலே புலியெதிர்ப்பையே தத்துவமாய் நிரப்பி தம்மை நிறுத்துகின்றார்கள். இவர்களின் சொற்படியே பார்த்தால் இவர்கள் சுட்டும் புலித்தத்துவத்துக்கும், களமிறங்கியுள்ள சிவசேனைத்தத்துவத்துக்கும், இவர்களுக்கும் ஏதொரு வேறுபாடுமில்லை.
தமிழகத்திலே 1980 களிலே மதம்மாறிய மீனாட்சிபுரம் முஸ்லீம்களுக்குக் காலப்போக்கிலே நிகழ்ந்தது என்பதை அன்வர் பாலசிங்கம் 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்" எழுதியிருந்தார்; தென்தமிழகத்திலே சாதிசார்ந்த ஒடுக்குமுறையினை உடைத்தெறிய ஆட்சியாளரோடு அடையாளப்படுத்தும்வகையிலே கிறிஸ்தவரானவர்களுக்கு இன்னமும் தனி வாங்கு போட்டுத் தேவாலயத்திலே உட்காரவைக்கும் கோரம் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது . தனியே மதம் மாறுதலோ அல்லது பெரும்பான்மையோடு இணைக்க அரசியலைக் கொள்வதுமட்டுமோ எவ்வித மாற்றத்தையும் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு விடுதலையளிக்கப்போவதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இவை.
அறுபதுகளிலேயும் எழுபதுகளிலேயும் அப்போதைய கொழும்பு அரசிருந்த ஆட்சியாளரை அண்டிய பொதுவுடமைசார்ந்த கட்சிகள் வட(கிழ)க்கில் செய்த போராட்டங்கள் பெற்றுத்தந்தவை தாம் பேரின அரசினை அண்டித் தமிழ்ப்பேசும் மக்கள் பெற்ற வெற்றியின் உச்சப்புள்ளி. பரந்தன், காங்கேசன்துறை, ஒட்டிசுட்டான், வாழைச்சேனை, கந்தளாய் போன்றவிடங்களிலே அமைந்த தொழிற்சாலைகள், கோயிலுள் நுழையும் போராட்டம் என்பவற்றின்மேலாக பேசுமொழிசார்ந்த ஒரு குமுகாயமாக எதையும் தமிழ்பேசும் மக்கள் பெறமுடியவில்லை. மகாவலித்திட்டமும் கல்லோயாத்திட்டமும் “மொரவெவ” திட்டமும் தமிழ்நிலங்களை விழுங்கியதும் இக்காலமே என்பதுதான் வரலாறு.
இது ஒருபுறமிருக்க, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஶ்ரீலங்கா பௌத்தத்தின் சங்கச்சாதிய ஆழத்தைக் கீறிப் பார்க்காது பௌத்தமயப்படுதல் என்பது சாத்தியமானதா? சரியானதா?. பௌத்தர்களாகித்தான் தமிழ்நிலத்தைக்கொள்ளவேண்டுமென்றால், உடைக்கமுடியா இரட்டையாகப் பிணைந்திருக்கும் சிங்களபௌத்தத்தினை வழிப்பட்டு, சிங்களமொழியினைமட்டுமே 1956 லே கற்றிருக்கலாமே?
பௌத்தத்தினைத் தாமே தழுவுவது வேறு, வலிந்து தழுவுவது வேறு. இங்கே முன்வைக்கப்படுவது, “Why Anakin Skywalker became Darth Vader” மாதிரியான சூழ்நிலைவன்முறை தள்ளும் திணிப்புத்தான். இங்கும் நல்லிணக்கமென்பது நாடாளுகிறவர்களுக்கு இணக்கமானதைக் கொள்வதாகவே முடியும். தென்மேற்கு இலங்கையிலே ஒருவரும் இதனைப் பெரிதாக எடுக்கப்போவதில்லை. இலங்கையின் பௌத்த பீடங்களே சாதியின் அடிப்படையிலே கட்டப்பட்டியங்கும் துன்பத்தைக் காண்கிறோம். ஒடுக்குமுறைகளுக்கு அமைப்புகளை எப்பெயரிலே கட்டினாற்றானென்ன? இவ்வகை அரசியல் யாவும் ஒருங்குமிடமொன்றே. தத்துவ வெறுமைக்கு ஒன்றிருத்தல் என்றாலென்ன? ஒத்தோடுதல் என்றாலென்ன? ஒடுங்கியிருத்தல் என்றாலென்ன?