free website hit counter

உக்ரைன் - ரஷ்யா மும்முனைப் போர் - முடிவு என்ன ?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வல்லரசுகளுக்கிடையிலான சமநிலைப்போட்டி உலகின் ஏதோ ஒரு திசையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

உலகத் தலைவர்கள் வெள்ளைப் புறாக்களாகவும், சமாதானத் தூதுவர்களாகவும் உலகெங்கும் பறந்து கொண்டிருக்கையிலே, மறுபுறம் போர்த்தளவாட உற்பத்தியும், ஆயுதவிற்பனையும் கூட நடந்து கொண்டேயிருக்கும். அடித்துப் பறித்துண்ணும் ஆதி மனிதனின் அடிப்படைக் குணம் மாறாத நவயுகத் தோற்றத்தின் வெளிப்பாடு இது என்றும் சொல்லலாம்.

கோவிட் பெருந்தொற்றின் பின்னதாக, வசந்தமான ஒரு வாழ்வுக்காக காத்திருந்த ஐரோப்பியர்களுக்கு, உக்ரைன் - ரஷ்ய யுத்தம் ஒரு பேரதிர்ச்சிதான். இந்த ஆண்டு வசந்தகாலத்தில் ஐரோப்பாவில் மரங்கள் துளிர்க்கையில், கடந்த இரு ஆண்டுகளாக மொத்தமாக வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை, போக்குவரத்துறை, மற்றும் ஹோட்டல் துறை உட்பட பல வர்த்தக முயற்றிகளும் மீண்டும் துளிர்க்கும் என்ற எதிர்பார்ப்பின் மேல் இடிவிழுந்திருப்பதான அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

24.02.22 அதிகாலையில் ரஷ்ய அதிபரின் ஆணையில் தொடங்கிய இராணுவ நடவடிக்கைகளும் அதற்கான உக்ரைனின் எதிர் யுத்தம் ஒருபுறமும், ரஷ்யா மீதான ஐரோப்பிய நாடுகளின் கண்டனங்களும், எதிர்நடவடிக்கையாக அறிவிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் என மறுபுறமும், தொடர்கையில் நவீன போர் உத்தியின் மற்றுமொரு வடிவமான சைபர்தாக்குதல்கள் மற்றொருபுறமும் என மும்முனைத் தாக்குதலாக இந்தப் போர் இன்று இரண்டாம் நாளில் தொடர்கிறது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் போர் நீடிக்கும் ? என்பது இப்போதுள்ள பெருங்கவலை. போரைத் தொடங்கிய ரஷ்யத் தலைவர் புடினிடமே இதனை நிறுத்தும் வலுவும், கால அளவும் உள்ளதாக ரஷ்ய தரப்பு வெளிப்படையாகவே சொல்கிறது. உக்ரைனை முழுமையா ரஷ்ய இராணுவ மயப்படுத்தப்படுதலே இதற்கான தீர்வுக்காலம் எனச் சொல்கிறார் ரஷ்யத்தலைவர் புடின். உக்ரைனின் தலைநகர் கியேவ் நோக்கி ரஷ்யப்படைகள் வேகமாக இரு முனைகளில் வேகமாக முன்னேறி வருகின்றன. அப்படியானால் இன்னும் சில நாட்களில் இந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிடுமா..? அப்படிச் சொல்வதற்குமில்லை.

உக்ரைனில் ரஷ்ய படைகள் குவியும் பட்சத்தில், அதன் அண்டைநாடுகளில் அமெரிக்கப்படைகள் முகாமிடக்கூடும். இந்தப் படையிறக்கங்கள் இலகுவில் யுத்தத்தை முடித்துவிடாது. அது பல அரசியற் தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனாற்தான் ஐரோப்பிய அரசியற் தலைவர்கள் அறிக்கை மேல் அறிக்கையாக விட்டவண்ணமிருக்கின்றார்கள். அவ்வாறான குழப்பமான ஒரு யுத்தச் சூழல் ஏற்படுமிடத்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் தாம் சார்ந்த அரசியற் பொருளாதார நெறிமுறைகளின் வழி சார்பு நிலை எடுப்பின், பெரும் பிளவுகள் ஏற்படும் பேரபாயமும் உண்டு.

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகள் சற்றுப் பலமாகவே அறிவிக்கப்படுகின்றன. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பற்றி விவாதிக்க கூட்டப்பட்ட அசாதாரண ஐரோப்பிய உச்சிமாநாட்டின் முடிவில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் "நாங்கள் ரஷ்ய நிதிச் சந்தையில் 70% ஐ தாக்குவோம். ரஷ்யா இனி மிக முக்கியமான நிதிச் சந்தைகளுக்கு அணுகலைப் பெறமுடியாது. ரஷ்ய பணக்காரர்கள் தங்கள் பணத்தை வரி புகலிடங்களில் வைக்க முடியாதவாறு ரஷ்யர்களின் இருப்புக்களை குறைக்க முயற்சிப்போம்"  எனச் சூளுரைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "ரஷ்ய பொருளாதாரம் மற்றும் அரசியல் உயரடுக்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ஐந்து அச்சுகளைக் கொண்டிருக்கும். பொருளாதாரத் துறை, எரிசக்தித் துறை, போக்குவரத்துத் துறை, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் விசா கொள்கை ஆகியவற்றில் ஒரு பெரிய பொருளாதாரத் தடைகளை நாங்கள் அங்கீகரித்துள்ளோம். இந்தத் தடைகள் ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒற்றுமையே நமது பலம். கிரெம்ளினுக்கு இது தெரியும், எங்களைப் பிரிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அது செய்துள்ளது, ஆனால் அது பலிக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தத் தடைகள் ரஷ்யாவை ஏதும் செய்துவிடாது. அமெரிக்கா கடந்த பல காலமாகவே இந்தத் தடைகளை ரஷ்யா மீது விதித்தே இருக்கிறது; ஆயினும் அதனால் ரஷ்யாவிற்குப் பாரதூரமான தாக்கம் ஏதுமில்லை என்று ரஷயாவிற்காகக் குரல் தருகிறது ரஷயாவின் பின்னாலிருக்கும் சீனா. சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், "2011 முதல் அமெரிக்கா ரஷ்யா மீது 100 க்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது "பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடிப்படை அல்லாத மற்றும் பயனற்ற கருவிகள்" என்று கூறியுள்ளார். ஐரோப்பாவின் பிரதான எரிவாயுச் சந்தையை வைத்திருக்கும் ரஷ்யாவினை நோக்கி ஐரோப்பா பெருஞ் சீற்றம் கொள்ள முடியாத யதார்த்த நிலையும் மற்றொருபுறம் உள்ளது.

அமெரிக்காவிற்கு ஆப்காணிஸ்தான் முதலான நாடுகளிலிருந்து திரும்பப் பெறப்பட்ட தனது படைகளை, நிறுத்துவதற்கான புதிய களமுனைகள்தேவை. அவ்வாறான தளங்களுக்கு அப்படைகள் அனுப்பப்படாவிடின், அப்படையினரால் உள்நாட்டில் குழப்பங்களைச் சந்திக்க வேண்டிய அசாதாரண சூழ்நிலையும் ஏற்படலாம். ஆதலால் அது புதிய களங்களைத் திறக்கவே விரும்பும். அதனை கிழக்கு ஐரோப்பாவில் திறப்பது, ரஷ்யா, சீனாவுடனான இராணுவச் சமநிலையை பேண உதவும்.

இந்த யுத்தத்தின் முடிவு எவ்வாறாக இருக்கும் ?. வல்லரசுகளும், வளர்முகநாடுகளும், தமது நலன்சார்ந்து நடத்தும் யுத்தங்கள் எல்லாவற்றிலும், துன்பத்திற்குள்ளாவது மக்கள்தான். அரசுகள் தமது நோக்கத்தில் சமரசங்கள் கண்டதும், போர்களை நிறுத்தி தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். இந்தப் பெருந்துயரைப்பேசுகிறது பின்வரும் பாலஸ்தீனியக் கவிதை.

" போர் ஒருநாள் முடிவடையும்
தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்
இறந்துபோன மகனின் வருகைக்காக
வயதான தாய் காத்திருப்பாள்
காதல் கணவனை எதிர்பார்த்து
காத்திருப்பாள் அந்தப் பெண்
அந்தக் குழந்தைகள் தங்கள்
சாகச அப்பாவின் வருகையை
எதிர்பார்த்து காத்திருப்பார்கள்
எங்கள் மண்ணை யார் விற்றார்கள்
என எனக்குத் தெரியாது - ஆனால்
அதற்கான விலையை யார் தருகின்றார்கள்
என்பதற்கு சாட்சி நான்....!

- மெஹமுத் டார்விஷ்

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula