கொரோனா பெருந்தொற்று செய்திகளால் நிறைந்திருக்கும் தமிழக ஊடகங்களில் இப்போது நீக்கமற நிறைந்த மற்றொரு முக்கிய செய்தி லட்சத்தீவு விவகாரம். கேரளத்துக்கு லட்சத் தீவுகளுக்கும் கலாசாரா ரீதியாக பெரும் தொடர்பு இருந்து வந்துள்ளது.
அங்குள்ள அரசியல் இடதுசாரி அரசியலாக உள்ளது. மேலும் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் வேறு மாநிலங்களை, யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இடம் வாங்க முடியது என்பதுடன் அங்கே குடியேறவே கூட முடியாது என்ற நிலை இருந்து வருகிறது. அதேபோல் லட்சத்தீவுகளில் மது அருந்த தடையும் உள்ளது. மேலும் கோவிட் தொற்று இல்லாத ஒருசில தீவுப் பிரதேசங்களில் அதுவும் ஒன்று. அதன் மீது தற்போது தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களை விரித்திருப்பதாக மோடி தலைமையிலான பாஜக அரசு மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. அதற்குக் காரணம் லட்சத்தீவு மக்களின் போராட்டம். இதன் பின்னணியில் என்ன நடந்துள்ளது என்பதை இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று காணலாம் வாருங்கள்.
அரபிக் கடலில் உள்ள மிகச் சிறிய பரப்பளவு கொண்ட லட்சத் தீவுகள் கேரளாவுடன் இன மற்றும் கலாசார ரீதியான தொடர்புகள் கொண்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், மலபார் கடலோரத்தில் இருந்து குடியேறிய மக்களைக் கொண்டது. இவர்கள் தனிச் சிறப்பான பண்பாட்டைக் கொண்டவர்கள். மக்கள் தொகை சுமார் 65 ஆயிரம் பேர். இவர்களில் 99% பேர் பழங்குடி இஸ்லாமியர்கள். மலையாளம் பேசுபவர்கள்.
இந்நிலையில், லட்சத் தீவின் நிர்வாகியாக, ஐ.பி.எஸ் அதிகாரி தினேஷ்வர் வர்மா சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளார். அவரை நீக்கிவிட்டு, குஜராத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேலை மோடி அரசாங்கம் நியமித்தது. தீவின் ஆளுநர் என்ற பதவியையும் உருவாக்கி அதில் பிரபுல் படேலை அழுத்தம் திருத்தமாக உட்கார வைத்ததுடன். அவர் மூலம் தொடர்ச்சியான தாக்குதல்களையும், லட்சத்தீவு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும், இயற்கை வளம் மிக்க லட்சத்தீவை கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி வகுக்கும் சட்டங்கள், திட்டங்களை மோடி அரசாங்கம் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது என்று அங்கு வாழும் மக்கள் பிரபுல் நியமனத்திலிருந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். தற்போது இந்த விவகாரம் தமிழக ஊடகங்களையும் எட்டியிருந்ததுதான் செய்தியில் லட்சத்தீவு இடம்பெறக் காரணம்.
அரபிக்கடலின் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் லட்சத் தீவுக்கென தனிச் சிறப்பான நிலவுரிமைச் சட்டம் உள்ளது. லட்சத் தீவைப் பூர்வீகமாகக் கொண்ட தாய், தந்தையருக்குப் பிறப்பவர்கள் மட்டுமே இத் தீவுகளில் நிலம் வாங்க முடியும். இந்த தனித்துவம் மிக்க நிலவுரிமைச் சட்டத்தை தளர்த்தி, அங்கு யார் வேண்டுமானாலும் இடம் வாங்கலாம் என வழி வகை செய்யும், லட்சத் தீவு வளர்ச்சி ஆணைய ஒழுங்குமுறைச் சட்டம் 2021 ( LADR) வரைவு என்பது இப்போது முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 சதவீத மதுவிலக்கு அமலான லட்சத் தீவில், மதுவிலக்கை நீக்கி அரசு சார்பாக மதுக்கடைகளைத் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு தொடர்ந்து நஷ்டம் அடையாமல் இருந்து வரும் லட்சத்தீவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தைக் கலைத்து விட்டு, குஜராத்தைச் சேர்ந்தஅமுல் நிறுவனத்திற்குப் பால் பொருட்கள் விற்பனை செய்ய திறந்து விடப்பட்டுள்ளது.மோடி அரசு மொத்தமாக லட்சத் தீவுகளை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் வேலையை முனைப்புடன் செய்து வருகிறது என்பதே அங்கு வாழும் மண்ணின் மைந்தர்களின் கண்ணீராக இருக்கிறது.
அதேபோல் லட்சத்தீவு மக்களின் உணவுப் பழக்கத்தின் மீது ஆளும் பாஜக அரசு கைவைத்துவிட்டதாக அங்குள்ள மக்கள் கதறியிருக்கிறார்கள் 'விலங்குகள் பாதுகாப்பு முறைப்படுத்துதல்' என்ற பெயரில், லட்சத் தீவில் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். லட்சத்தீவு பழங்குடி இஸ்லாமியர்களின் அடிப்படை உணவான மாட்டுக்கறிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது; மேலும் பள்ளிகளிலும் அசைவ உணவிற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் விஞ்சும் வண்ணம் அடக்குமுறைச் சட்டம் ஒன்றையும் அமல்படுத்தியிருக்கிறது என மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் குற்ற வழக்குகள் குறித்த என்.சி.ஆர்.பி-ன் வருடாந்திர அறிக்கையின் படி, இங்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு, கொலை, குழந்தைகள் கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படவில்லை. அப்படி இருக்கையில், இத்தகைய மாநிலத்தைக் குற்றமில்லா மாநிலமாக மாற்றுவதாகக் கூறி, சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (PASA 2021) என்ற அடக்குமுறை குண்டர் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
லட்சத் தீவுகளின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், தேர்தலில் நிற்கும் தகுதி இல்லை என்றும் சட்டம் பிறப்பித்துள்ளனர் என்கிறார்கள். இதைவிடக் கொடுமை கொரானா இல்லாத லச்சத்தீவில் தற்போது 5000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன் களப் பணியாளர்களான செவிலியர்கள் குறைந்தபட்ச ஊதியத்துக்காகப் போராடிய போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல், லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேல் உத்தரவுப்படி போலிஸார் அவர்களைக் கைது செய்தனர். செவிலியர்களின் கைது நடவடிக்கைக்குப் பிறகு, ஜனவரி 2021 வரை கொரோனா இல்லாத தீவாக இருந்த லட்சத் தீவில் இப்போது 5000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் லட்சத் தீவுகளைப் புரட்டிப் போட்ட தவுக்டே புயலால் பல பகுதிகள் சேதம் அடைந்துள்ளன. மீனவர்கள் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆனால் நிவாரணம் தர வேண்டிய பிரபுல் படேல் நிர்வாகம் மக்களுக்கு எதிராகப் பல்வேறு முறைகேடுகளை நிகழ்த்தி வருகிறது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் "ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரபுல் படேலை திரும்பப் பெற வேண்டும்!" என முறையிட்டுப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட, தாத்ரா நாகர் ஹவேலி நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் டேல்கர் பல இன்னல்களுக்கு ஆளாகி, கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்; தனது தற்கொலை முடிவுக்கு பிரபுல் படேல்தான் காரணம் என 15 பக்க அளவில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தத் தற்கொலை வழக்கு எப்.ஐ.ஆரில் தற்போது வரை பிரபுல் படேல் பெயர் சேர்க்கப்படவே இல்லை. மாறாக, தன்னுடைய பதவியின் வாயிலாக இந்த வழக்கிலிருந்து பிரபுல் படேல் தப்பிக்க முயற்சிக்கிறார் என்ற குற்றசாட்டுகளும் எழுந்துள்ளணா. இந்த விவகாரம் குறித்து இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள் சிலவும் கருத்துப்படம் வெளியிட்டுள்ளன..
கேரளாவில் உள்ள சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் பலரும் #SaveLakshadweep என்ற ஹேஷ்டேக்குடன் லட்சத் தீவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பாஜக அரசு இதையெல்லாம் சட்டைசெய்யவில்லை.