யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) ஆரம்பித்தது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை முழு நாட்டையும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், நல்லூர் ஆலய மகோற்சவத்துக்கு அடியார்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்கிற அறிவித்தல் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் கொடியேற்ற தினத்தன்று நூற்றுக்கணக்கானவர்கள், ஆலயத்துக்கு நுழைவதற்கான எத்தனங்களை மேற்கொண்டார்கள். அவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து வீதிகளில் வைத்தே தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினார்கள். அந்தக் காட்சிகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகியது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகம், கொரோனா கெடுபிடிகள் காரணமாக மகோற்சவ காலத்தில் அடியார்கள் ஆலயத்துக்கு வர வேண்டாம் என்கிற வேண்டுகோளை விடுத்துள்ளதுடன், ஒவ்வொரு நாள் பூசையும் இணையத்தின் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் என்றும் அறிவித்தது. ஆனாலும் தான்தோன்றித்தனமான சிந்தனையோடு கொடியேற்ற தினத்தன்று நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருப்பது என்பது கடவுள் மீதான பக்தி என்பதைத் தாண்டி ஒருவகையிலான சமூகப் பொறுப்பின்மை என்று கொள்ளலாம்.
நாட்டில் கொரோனா தொற்றினால் ஒவ்வொரு நாளும் ஐயாயிரத்தைத் தாண்டி புதிய தொற்றாளர்கள் பதிவாகிறார்கள். ஆனால், தொற்றாளர்களின் எண்ணிக்கை சில மடங்கு அதிகமாக இருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள். மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் 150 என்கிற அளவைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. வைத்தியசாலைகளில் இடமில்லை. ஒரு படுக்கையில் மூன்று பேர் படுக்கும் அவலம் அரச வைத்தியசாலைகளில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. பணமும் அதிகாரமும் இருந்தாலும் கூட தனியார் வைத்தியசாலைகளிலும் கூட கொரோனா தொற்றாளர்களை உள்வாங்கும் அளவுக்கு இடமில்லை. தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் சூழல் நிலவுகிறது.
அப்படியான ஒரு சூழலில்தான் நல்லூர் ஆலய மகோற்சவத்துக்காக கூட்டமாக கூடிச் சென்றிருக்கிறார்கள் அந்த மக்கள். அதிலும், சிலர், தாங்கள் செத்தால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை, தங்களை முருகனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோசம் எழுப்பியிருக்கிறார்கள். கொரோனா என்பது தனி மனிதனோடு மட்டும் சம்பந்தப்பட்ட நோய் அல்ல. அதுவொரு பெருந்தொற்று. அதனைக் கட்டுப்படுத்துவது என்பது ஒவ்வொரு மனிதனதும் ஒத்துழைப்பும் கட்டுப்பாட்டோடும் நிகழ வேண்டியது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் அதுதான் நடந்தது. கொரோனா வந்து செத்தால் மற்றவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பதல்ல விடயம். மாறாக கொரோனாவை இன்னும் பலபேருக்கு சம்பந்தப்பட்டவர்கள் கடத்திவிட்டுச் செல்லும் சூழல் உள்ளது. அப்படியான நிலையில், அதற்கான பொறுப்பை கட்டுப்பாடுகளை மீறிச் செல்வோர் எடுத்துக் கொள்ள வேண்டும். கொடியேற்ற தினத்தன்று நல்லூர் ஆலயத்துக்குள் நுழைய முனைந்த அனைவரும் அப்படியான பொறுப்பினை எடுத்துக் கொண்டிருந்தால், அடிப்படையான அறிவின்றி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
ஏற்கனவே ஆடி அமாவாசை தினத்தன்று மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் பொறுப்புணர்வின்றி ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவித கொரோனா கட்டுப்பாடுகளையும் பின்பற்றாது கூடியிருந்தனர். அந்தச் சூழல் பெரிய கொரோனா கொத்தணியை உருவாக்கும் சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தியது. அவ்வாறான நிலையொன்றை உருவாக்கும் முயற்சிகளிலேயே நல்லூரில் கூடியவர்கள் செய்தார்கள்.
எந்த மத, மார்க்க நிறுவனமாக இருந்தாலும் ஒரு பெருந்தொற்றுக் காலத்தை எதிர்கொண்டிருக்கின்ற போது, அதற்கு ஏற்றாற்போல நடந்து கொள்ள வேண்டும். அந்த கட்டுப்பாடுகள் மக்களின் மத மார்க்க நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தும் ஒன்றல்ல. முதலில் மக்களைக் காப்பாற்றினால்தான், அவர்களின் மத மார்க்க நம்பிக்கைக்கான வாய்ப்புக்களையும் பேண முடியும். அதனை ஒவ்வொருவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.